Wednesday 20 June 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 9



பாடல்:
கழுந்தாராய் உன் கழல் பணியாதவர் கதிர் மணி முடிமீதே
அழுந்த வாளிகள் தொடு சிலை இராகவ! அபிநவ கவிநாதன்
விழுந்த ஞாயிறு அது எழுவதன்முன் மறை வேதியருடன் ஆராய்ந்து
எழுந்த ஞாயிறு விழுவதன் முன் கவிபாடியது எழுநூறே

நோக்கம்: காப்பியத் தலைவனின் சிறப்பும், நூலாசிரியர் சிறப்பும், நூல் இயற்றப் பட்ட விதமும் பற்றிய செய்திகளை இந்தப் பாடலில் காண்கின்றோம்.

பொருள்:
கழுந்தாராய் உன் கழல் பணியாதவர் கதிர் மணி முடிமீதே (வில்லின் தடியை போன்றவர்களாய், உன் திருவடியை வணங்காதவர்களாய், இருக்கும் அசுரர்களின் ஒளி வீசும் மணிகள் பதித்த மகுடம் அணிந்த தலைகளில் மேல்
அழுந்த வாளிகள் தொடு சிலை இராகவ! அபிநவ கவிநாதன் (நன்கு பாயும்படி அம்புகளைச் செலுத்திய வில்லை ஏந்திய இராமனே! உன்மீது புதுமை பொருந்திய கவிகள் பாடிய தலைவனான கம்பன்)
விழுந்த ஞாயிறு அது எழுவதன்முன் மறை வேதியருடன் ஆராய்ந்து (மறைந்த சூரியன் மறுநாள் காலை மீண்டும் உதிப்பதற்கு முன்பு வடமொழி அறிந்த வேதியர்களுடன் கூடி ஆலோசித்து)
எழுந்த ஞாயிறு விழுவதன் முன் கவிபாடியது எழுநூறே (உதயமான சூரியன் மறைவதற்குள் ஒரு பகலில் பாடிய கவிதைகள் மொத்தம் 700)



விளக்கம்:
கம்பர் ஒரு காவிய நாதன் என்று இந்தப் பாடலில் புகழப் படுகின்றார்! அவரது இராமக் காதையில் மொத்தம் பதினோராயிரம் பாடல்கள் உள்ளன. இந்த பதினோராயிரம் பாடல்களையும் அவர் இயற்ற எடுத்துக் கொண்ட கால அவகாசம் பத்து நாட்களே ஆகும்! (என்னிடம் இதற்கு சரித்திர சான்றுகள்   இல்லை. இது ஒரு செவி வழி செய்தியே. உங்களிடம் சான்றுகள் இருந்தால் தெரிவிக்கவும்!) ஒரு படத்திற்கு ஆறு பாடல் எழுதுவதற்குள் இக்காலத்து கவிஞர்கள்,  "தனக்கு ஒரு சில வார்த்தைகள் கிட்டுவது ஒரு பிரசவம் போன்ற அனுபவம்! அப்படிப்பட்ட பாடல்களை தான் நீங்கள் கேட்டு மகிழ்கிறீர்கள்", என்றுக் கூறும் போது அந்த பாடலில் எனக்கு அந்த கவிஞரின் வறட்சியும், தனக்கு வராத ஒரு தொழிலில் அவர் காலம் போகிறதே என்ற வருத்தமும் தான் தெரியும். நீங்கள் செய்யும் தொழில் உங்களுக்கு சரளமாக வர வேண்டும், பிரசவ வேதனையில் வரக் கூடாது. அதுவும் கலை சார்ந்த தொழில் என்றால் இந்த நியதி மிகவும் அவசியமானதாக இருத்தல் வேண்டும். கம்பரை பாருங்கள் ஒரு இரவில் எழுநூறு பாடல்கள் இயற்றி உள்ளார். எழுநூறில் எவ்வளவு சொல் நயம், கவி நயம், பொருள் நயம் இருக்கின்றது? இவை அனைத்துக்கும் அவர் பிரசவ வேதனையில் உழைத்திருந்தால் மறு நாள் காலையில் அவர் பிரசவத்தினாலேயே இயற்கை எயிதிருப்பர் அல்லவா? கம்பருக்கு பா இயற்றல் மற்ற யவரையும் விட சரளமாக வந்தது! இவர் அல்லவோ கவிச்சக்கரவர்த்தி, காவிய நாயகன், கவிப்பேரரசு என்ற அனைத்து பட்டங்களுக்கும் பொருத்தமானவர்? அதை விடுத்து நமக்கு முன்னால் இருந்த கவிஞர் கவியரசாக தானே இருந்தார், நாம் அவரை விட மேலானவர் என்பதை எப்படி உலகிற்கு எடுத்துக் காட்ட முடியும்? உலகத்தில் தமிழுக்கு தான் தான் அதிகாரி என்று சொல்லிக் கொள்ளும் அந்த நபரை பிடித்து தனக்குத் தானே "கவிப்பேரரசு" என்ற பட்டம் சூட்டி கொண்டால் தான் தனது முன்னவரை விட உயர்ந்தவர் என்பதை காட்டக் கொள்ள முடியும். அனால் கம்பர் அப்படியில்லை, யவர் தனக்கு பட்டம் கொடுக்கிறார் என்று பார்க்கவில்லை, யவர் தனக்கு "தனது முன்னவரை விட உயர்ந்தவர்" என்ற புகழாரம் சூட்டுகிறார் என்று தேடவில்லை. தனது சக்தியை எல்லாம் இரவு நேரங்களில் சமக்கிருதம் அறிந்த மற்ற அறிஞர்களுடன் செலவழித்து வால்மீகியின் உரையை படிப்பதில் ஆர்வம் காட்டினார். கம்பருக்கே சமக்கிருதம் அத்துப்படி என்றாலும், எனக்கு என்ன சமக்கிருதம் புரிகிறதோ அதை தான் காப்பியமாக இயற்றுவேன் என்று நில்லாமல் கற்றுத் தேர்ந்த மற்ற சமக்கிருத அறிஞர்களுடன் உரையாடி மெய்ப்பொருள் கண்டு தனது நூலில் அதை வடித்தார். மெய்ப்பொருள் காண்பது அறிவு அன்றோ? ஆகையால் அறிவுள்ளவர் அறிவுள்ள செய்கையை தான் செய்வர், ஒரு செய்தியின் உள்ளர்த்தத்தை உணர்ந்து உள்வாங்கி பின்வரும் செயல்களில் ஈடுபடுவர். கம்பரும் அப்படி செய்ததினால் மட்டுமே, இராமபிரான் தனது அரசாட்சிக்கு குந்தகம் விளைவிக்க நினைத்த தனது அரசுக்கு நட்பும், நன்மையையும் பாராட்டாத தீயவர்களை அவர்களின் பிரகாசிக்கும் ஒளிப் பொருந்திய மணிமாகுடங்களையே நிலைகுலைய செய்யும் வகையில் பானங்களை விட வல்லவர் என்பதை நம்மால் அறிய முடிகிறது! இவர்கள் இராமப்பிரானை வணங்காது இருந்ததினால் மட்டுமே இராமர் இவர்களை எதிர்க்கவில்லை, ஒரு அரசராக தனது நாட்டின் அரசுக்குக் நட்பு பாராட்டாது தீமை விளைவிக்கும் செயல்களில் அண்டை நாட்டு மன்னர் யார் ஈடுபட்டாலும் அதை முளையிலேயே கிள்ளி எறிதல் அரசனின் தலையாய கடமை என்பதினால் அவர்களை அழித்தார். அவரை எதிர்த்த தீயவர்கள் இராமப்பிரானது பலம் வாய்ந்த வில்லை போல் மிகவும் உடல் உரம் படைத்தவர்கள். இப்படிப்பட்டவர்களை அழித்த அந்த இராஜாதி இராஜன் இராமப்பிரானின் மீது அளவுக்கடந்த காதல் கொண்ட கம்பன் மேற்கூறியபடி கடுமையாக உழைத்து ஒரு நாட்பகலில் இயற்றிய பாடல்கள் எழுநூறு ஆகும்!

வீட்டுப்பாடம்:
கம்பர் இராமாயணக் காதையை இயற்றிய வரலாறு பலவாறாக உள்ளது. ஒரு சிலர் அவர் ஒரே இரவில் பதினோராயிரம் பாடல்களையும் இயற்றினார் என்றும், அவர் பாடல் மழைப் பொழிவதை கணேசப் பெருமான் அமர்ந்து செவிசாய்த்து அவர் வேகத்திற்கு ஈடுக்கொடுத்து எழிதியருளினார் என்றும் ஒரு சிலர் கூறுவார். வேறு சிலரோ வேறு மாதிரியும் எழுதினார் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இந்த அனைத்து வித நிகழ்வுகளும் கம்பநாடனின் மொழிப்புலமையை எள்ளளவிற்கும் சந்தேகிக்க முடியாத படி பல சான்றுகளை உரைக்கின்றன. உங்களுக்கு தெரிந்த மற்ற பிற சொல் வழக்கில் உள்ள "கம்பர் எப்படி இராமாயணம் இயற்றினார்!" கதைகளை கருத்துகளில் எடுத்து விடுங்கள்!

No comments:

Post a Comment