Thursday 19 July 2012

பாடல் 5: பாயிரம்: அவை அடக்கம்






பாடல்:
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே.

நோக்கம்:
இராமக் காதையை தான் இயற்றிடுதல் ஒரு சிறுத்தொண்டே என கம்பர் நமக்கு அவையடக்கத்துடன் உரைத்தல்


பொருள்:
நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை (எளியவற்றை விட எளிவனான நான் என் கவிகளைக் கொண்டு இந்நூலை இயற்றத் தொடங்கினேன், இதில் என்ன வியப்பு?)
வைத வைவின் மராமரம் ஏழ் துளை (சான்றோர்கள் சபித்த சாபச் சொல்லைப் போலத் தப்பாமல் ஏழு மரங்களைத் துளைப் போடும் அளவுக்கு வேகமும், ஆற்றலும் உடைய)
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை (அம்பினை எய்துவதற்கு உடைய திறனை அடைந்த இராமப் பெருமானின் கதையை)
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே. (வடமொழியில் இராமாயணத்தை இயற்றிய வால்மீகி என்னும் முனிவனது சொற்களாகிய கவிதைகள் நிலை பெற்ற நாட்டினில்!)

விளக்கம்:
                                இந்த பாடலில் கம்பர் தன்னை எளியவனை விட எளியவன் என்று கூறி பணிவுடன் நிற்கிறார். இராமக்காதை கடந்த ஆயிரம் வருடங்களுக்கும் மேல் நிலைத்து நம்முடன் இருந்துள்ளது, நம்மை தாண்டியும் கம்பரின் இந்த நூல் மேலும் நிலைத்து நிற்கும். கம்பர் இந்த நூலினை இயற்றும் போது தனது தேய்வ கவித்திறமும், இந்த நூலின் திறமும் பற்றி எள்ளளவேனும் அறிந்து வைத்திருப்பார். கம்பருக்கே தன்னிடம் தெய்வப் புலமையும், அதனால் இயற்றப்படும் இராமாவதாரக் காப்பியத்தின் நிலைபெற்று நிற்கும் தன்மையும் நன்றாக தெரிந்திருக்கும். இருந்தும் இதில் தன பங்கு எதுவும் இல்லை என்று பணிவுடன் எளிமையாக நிற்கும் அவரிடம் நாம் மீண்டும் எளிமைப் பாடம் படிப்போமாக! "நொய்தின் நொய்ய" என்ற பதம் இதை தான் குறிக்கின்றது. எளிமையினிலும் எளிமையானவன்! "சொல் நூற்கலுற்றேன் எனை" என்றால் தன்னிடம் உள்ள சொற்களை வைத்து இராமாவதாரம் என்ற இந்த நூலை இயற்ற முனைந்தேன், இதில் என்ன வியப்பு? என்று பொருள். இதில் "எனை" என்ற சொல் இதில் என்ன வியப்பு இருக்கின்றது என்கிற தொணியில் அமையப்பெற்றுள்ளது.
                 
நாம் பல முறை கதைகளிலும், படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் பார்க்கும் பரவலான புராண கால சம்பவம்: ஒரு தவ வலிமை பொருந்திய முனிவர் எதோ ஒரு தீய செயலை கண்டு கடும் கோபம் கொண்டு அதை செய்த மனிதப் பிறவிக்கோ, தேவர்களுக்கோ ஒரு சாபத்தை தனது கமண்டலத்தில் உள்ள நீரைக் கொண்டு தெளித்து அளித்து விடுகிறார். அந்த சாபமும் உடனே (பத்து வருடங்கள் கழித்து அல்ல! உடனே!) பலித்து விடுகின்றது. இது சாத்தியமா? உண்மையா? இப்படியும் இருக்குமா என்று நம்மில் பலரும் யோசிக்கலாம். அது கற்பனையாகவே இருந்தாலும் இப்படி நினைத்துப் பாருங்களேன். ஒருவருக்கு எவ்வளவு தவ வலிமை இருந்தால் அவர் சொன்ன மாத்திரத்திலேயே இறைவன் அது என்ன என்று ஆராய்ந்து கூட பார்க்காமல் உடனே அதை பலிக்க செய்கின்றான்? ஒருவேளை இறைவன் வேறு மாதிரி சில நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்று கூட நினைத்திருக்கலாம். (பெண்ணே நீ ஒரு கல்லாகக் கடவது! என்று சாபம் இட்ட முனிவரே என்ன காரியம் செய்தீர்கள்? இறைவன் அந்த பெண் அடுத்த இருபது ஆண்டுகளில் இருநூறு குழந்தை பிரசவிக்குமாறு அருளியுள்ளார். அதில் பத்தாவதிலிருந்து ஐம்பதாவது வரை உள்ள பிள்ளைகள் தீயவர்கள். அவர்களை அழிக்க இறைவன் பூலோகத்தில் அவதரிக்க எண்ணினான். இப்போது எல்லா திட்டமும் மாற வேண்டியுள்ளது அய்யா உம்மால்! (change of plans) -:) ).  இப்போது இந்த முனிவரின் அவசரக்குடுக்கை தனத்தால் தனது மொத்த திட்டத்தையும் கூட இறைவன் மாற்ற வேண்டி இருக்கும். இல்லை எல்லாம் தெரிந்த இறைவன் இந்த முனிவரின் அவசரக்குடுக்கை தனத்தையும் அறிந்திருக்க மாட்டாரா என்ன? அறிந்திருப்பார். ஆனால் இங்கே கவனிக்க வேண்டியது இறைவனே மதித்து செயல்படுத்தும் முனிவரின் சாபம். அந்த வார்த்தைகள் அவ்வளவு வலிமை உடையதாகும். இப்படிப்பட்ட வார்த்தையின் வலிமையை "வைத வைவின்" என்று பாடி அதே வலிமையை இராமப்பெருமானின் வில்லில் இருந்து புறப்பட்ட பானமும் பெற்று இருக்கும் என்கிறார் ஆசிரியர். தப்பாமல் பலிக்கும் வாக்கை போலே தப்பாமல் இலக்கை சென்று அழிக்குமாம். திருமாலின் சங்கு, சக்கரம், கதையாயுதம், ஆதிசேஷன் படுக்கை இவை எல்லாமே மேல்நிலை உயிர் பெற்று மனிதர்களை காட்டிலும் அறிவு நிலையில் சிறந்து விளங்கி பூலோகத்தில் பிறந்து வைணவ சம்பிரதாயத்தை போத்தித்தன. உயிர்க்கு எல்லாம் மூலம் என்று பெரியவர்கள் கூறியது என்ன சும்மாவா? உயிரற்ற கதையாயுதமும் கூட மற்ற ஆயுதங்களுடன் சேர்ந்து உயிர் பெற்று பூலோகத்தில் அவதரித்திருக்கின்றனவே! அந்த வகையில் இராமரின் பானமும் இராமர் கைப் படும் வரை உயிரற்று இருந்து பின்பு உயிர் பெற்று வைணவ ஆழ்வாராகத் திகழும் ஆற்றல் படைத்தது! சக்ராயுதத்தை நாம் ஒரு தனிப்பெரும் தெய்வமாக "சக்கரத்தாழ்வார்" என்றே வணங்குகின்றோம்! (ஸ்ரீரங்கத்தில் சக்கரத்தாழ்வார்க்கு ஒரு தனி சன்னதி உண்டு) இப்படிப் பட்ட இராம பானம் எப்படி இலக்கை சென்று தாக்குமாம்? தப்பாது தாக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் இலக்குக்கும் அதற்கும் நடுவில் ஏழேழு மரங்கள் இருந்தால் கூட அவை எல்லாவற்றையும் துளைத்து இராமப்பெருமானால் குறி வைக்கப்பட்ட இலக்கை சென்று தாக்கி அழிக்குமாம். யார் நடுவில் நின்றாலும் அவர்களையும் துவம்சம் செய்து விட்டு இலக்கையும் துவம்சம் செய்து விடும் என்பதை "மராமரம் ஏழ் துளை எய்து" என்ற உட்கருத்து கொண்டு புலவர் விளக்குகிறார்.
              
இராமப்பெருமானது கதை மாட்சிமைப் பொருந்திய கதை என்பதை "எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை" என்பதின் மூலம் உணரலாம். இதில் கம்பர் "எய்த என்ற பதத்தை வைத்து மீண்டும் சொல்விளையாட்டு விளையாடியிருப்பது தெரிகிறது இல்லையா? முதல் எய்த என்ற பதம் இலக்கை நோக்கி விடப்பட்ட அம்பினை விளக்குவதற்காக சொல்லப்பட்டது. எய்தவற்கு என்கின்ற இரண்டாவது பதம் அப்படி பட்ட அம்பினை விடுவதற்கு திறமை வாய்ந்தவனான இராமப்பெருமான் என்ற வினையை குறிக்க சொல்லப்பட்டது. எய்திய என்கின்ற மூன்றாம் பதம் அடைந்த, வாழ்ந்து முடித்த என்கின்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது. எய்திய மாக்கதை என்றால் சிறப்பாக வாழ்ந்து முடித்த மாட்சிமைப் பொருந்திய கதை என்று பொருள் கொள்ளலாம். இப்படிப்பட்ட பானங்களை எய்துவதற்கு திறமை வாய்த்த இராமர் அவரது வாழ்க்கை காதை ஏற்கனவே "செய் தவன் சொல் நின்ற தேயத்தே" என்ற கூற்று படி வடமொழியில் வால்மீகி என்ற முனிவனால் இயற்றப்பட்டு அந்த வேத நூல் இந்நாட்டில் பலராலும் ஓதப்பட்டு வந்துள்ளது. அப்படிப்பட்ட நாட்டில் தான் கம்பர் தான் தனது இராமாவதாரம் என்னும் நூலை இயற்றியதாகக் கூறி அதில் வியப்பு ஒன்றுமில்லை என்கின்றார்.
              
இந்த பாடலில் "செய் தவன்" என்ற சொல் வினைச்சொல் என்ற தமிழ் இலக்கணப் பாகுப்பாட்டில் வருகின்றது. வினைச்சொல் என்றால்? முக்காலமும் ஒரு ஆள் ஒரு செயலை செய்துக் கொண்டே இருக்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்களேன். (உதாராணத்திற்கு சாபிடுவது!) அவன் சாப்பிட்டான், அவன் சாபிடுகின்றான், அவன் சாப்பிடுவான் என்று நாம் பலவாறாக சொல்வோம். இதற்கும் மேல் இறந்த கால தொடர் வினை (past continuous), நிகழ் கால தொடர் வினை (present continuous), எதிர் கால தொடர் வினை (future continuous) என்று நீண்டுக் கொண்டே போகும். அதனால் புலவர்களுக்கு இதை எல்லாம் சின்ன பாடல்களில் புகுத்தி நேரத்தை வீணாக்க விருப்பமில்லை. அதனால் சாப்பாட்டு பண்டாரம் என்று வைத்து  விட்டார்கள். அப்படி என்றால் "சாப்பிட்ட பண்டாராம், சாப்பிடும் பண்டாரம், சாப்பிடப்போகும் பண்டாரம்" என்று பொருள். இதையே "செய் தவனில்", செய்த தவன், செய்துக் கொண்டிருக்கும் தவன், செய்யும் தவன் என்று பலவாறாக பொருள் அடங்கி உள்ளதை பார்க்கின்றோம். வால்மீகி முனிவர் எப்போதும் தவத்தில் ஆழ்ந்து மிகுந்த தவ வலிமை பெற்றிருப்பவர் என்பது உட்கருத்து. இப்படி கால வினைகளை பொதுப்படையாக உணர்த்தும் சொற்களை வினைச்சொல் என்று தமிழ் இலக்கணம் கூறுகின்றது!




வீட்டுப்பாடம்:
ஸ்ரீ நாராயனப்பெருமாளின் ஆயுதங்களும், வாகனங்களும், ஆதிசேட படுக்கையும் பெருமானின் கட்டைளைப் படி பலப் பிறவிகளாக பூலோகத்தில் பிறந்துள்ளன. அவைகளில் அதிகம் அறியப்படாத அவதாரங்களைக் கூறுங்கள் பார்ப்போம்? இராமயாணத்தில்
திருமால்: இராமப்பெருமாள் (பெரிய பெருமாள்),
ஆதிசேடன்: இலக்குவணப் பெருமாள் (இளையப் பெருமாள்),
சக்கரத்தாழ்வார்: பரதர்,
சங்கு: சத்ருகுனர்

இவை எல்லாம் அறிந்ததே. இதற்கும் அப்பால் பல பிறவிகள் இந்த தெய்வீக ஆயுதங்கள் எடுத்துள்ளன. அவை என்னென்ன?