Wednesday 8 August 2012

பாடல் 11: பாயிரம்: இடம்






பாடல்:
நடையின் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே.

நோக்கம்:
இராமாவதாரம் இயற்றப்பட்ட இடம் இன்னது என்று கம்பர் செய்தி உரைத்தல்

பொருள்:
நடையின் நின்று உயர் நாயகன் தோற்றத்தின் (நல்லொழுக்கத்தில் நிலை பெற்று, உயர்வு பெற்ற இறைவனான திருமாலின் அவதாரங்களில்)
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த் (நடந்ததாகிய இராமாவதாரத்தைக் குறித்த பெருமை வாய்ந்த)
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை (செய்யுள்கள் நிறைந்ததாவும், குற்றங்கள் அறவே இல்லாததுவும் ஆன இந்த மாபெரும் காப்பியம்) 
சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே. (சடையப்ப வள்ளலின் ஊரான திருவெண்ணெய்நல்லூர் என்னும் இடத்தில் வைத்து இயற்றப்பட்டது)


விளக்கம்:
                கம்பர் தனது பாடல்களில் இப்படி அவரது காலத்தை பற்றிய செய்திகளை வெளிப்படையாகவும், சூசகமாகவும் பல இடங்களில் தெரிவித்துள்ளார். கம்பரின் பாடல்களை வைத்தே நாம் கம்பரை ஆதரித்து உயர்த்தி விட்டவர் சடையப்ப வள்ளல் என்னும் ஒரு வணிகர் என்று அறிகின்றோம். இப்படி புலவர்கள் தங்களது பாடல்களில் அவர்களது காலத்தை சார்ந்த செய்திகளை கோர்த்துப் பாடல்களாகப்  புனைவார்கள். இப்படி இவர்கள் செய்ததால் தான் நம்மால் பல நூறு வருடங்களுக்கு முன் என்ன நிகழ்ந்தது, எப்படி நிகழ்ந்தது, சமுதாயாம் எப்படி அந்தக் காலக் கட்டத்தில் வாழ்ந்தது என்பன போன்ற பல செய்திகளை உணர்கின்றோம். கம்பரது காலமாவது தற்காலத்தில் இருந்து முன்னூறிலிருந்து ஐநூறு வருடங்களுக்குள் முந்தியது. ஆனால் பதினெண்மேல்க்கணக்கு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் இயசு நாதர் பிறந்த வருடத்திற்கு குறைந்தபட்சம் முன்னூறு வருடங்களாவது முந்தையதாக உள்ளது. தமிழ் சங்கம் அப்போதே நிறுவப்பட்டுள்ளது. இந்த நூல்களில் புலவப்பெருமான்கள் சொல்லும்  செய்திகள் எல்லாம் அந்த காலத்தை பற்றிய பலத் தகவல்களை நமக்கு தருகின்றது. நாம் பள்ளிக்கூடத்திலே பாடமாக இந்த நூல்களை படிக்கும்போது எரிச்சல் பட்டுள்ளோம், “எவனோ ஒருத்தன் ரோட்டிலே போனான்; போனவன் எவளோ ஒரு பொண்னை பார்த்தான், பார்த்தவன் சும்மா போகக் கூடாதா? அவளைப் பத்தி பாட்டை எழுதி வச்சு நம்மக் கழுத்தை அறுக்கிறானே” அப்படின்னு நம்மில் பலர் நினைத்து உள்ளோம். ஆனால் பாடலை பார்த்தீர்கள் என்றால் அந்த பெண்ணை வருணிப்பது போலே வருணித்து அந்த புலவர் அந்தக் காலத்தில் பயன்படுத்திய நகைகள், நகை செய்ய பயன்படுத்திய உலோகங்கள், அப்புறம் அந்த பெண் எந்த குலத்தில் வந்தாள் என்றத் தகவல்கள், அதன் மூலம் அந்தக் காலக்கட்டத்தில் சமுதாயம் எப்படி இருந்தது என்பதை சுட்டிக்காட்டும் செய்திகள் என்று பல உண்மைகள் ஒளிந்து இருக்கும். சங்கக் கால புலவர்கள் பாடல் எழுதியதே இதற்கு தான். இந்த பாடல்களில் அவர்கள் தெரிந்தும் தெரியாமலும் வைத்துள்ள பல செய்திகளை பிற்கால சந்ததிகளான நாம் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதினால் தான். இப்போ தான் நமக்கு பரீட்சையும் இல்லை, பாஸ் ஃபெயிலும் இல்லையே. நாம ஏன் இப்போ இந்த பாடல்களை நமது மனதை செலுத்தி புரிந்துக் கொள்ளக் கூடாது? வாருங்களேன் கம்பரின் இந்தப் பாடலில் பொதிந்துள்ள வெளிப்படையான, சூசகமான கருத்துகளை நாம் ஆராய்ந்து அறிந்துக் கொள்வோம்.
                “சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தந்ததே” என்ற பாடலின் கடைசி வரி நமக்கு எவ்வளவு செய்திகளைத் தருகின்றது பாருங்கள். சடையன் என்பது ஒருவரின் பெயர் அல்ல! அது அவர் சார்ந்த குலத்தைக் குறிக்கின்றது. அப்போ அந்தக் காலத்திலே சடையன் என்ற ஒரு சாதி இருந்துள்ளது. அந்த நபரை அவரது சாதியின் பெயரை வைத்தே அழைத்துள்ளனர். இது மரியாதை நிமித்தமாக இருக்கலாம். இப்போதும் நீங்கள் இணையத்தில் (google செய்து பாருங்கள்) தேடினால் சடையன் என்ற சாதி பெயருடன் பலர் உள்ளது தெரிய வரும். திருமண பொருத்தம் பார்க்கும் பத்திரிக்கைகள், நிகழ்ச்சிகள், வலைத்தளங்களில் இந்த சாதியை சேர்ந்தவர்கள் வாழ்க்கைத் துணை தேடுவதை பார்க்கலாம். மேலும், கம்பரை இவர்கள் ஆதரித்தனர் என்றால் அவர்கள் செல்வந்தர்களாகத் தான் இருக்க வேண்டும். இந்தப் பாடலில் அது சூசகமாக உணர்க்த்தப்பட்டுள்ளது. அதனால் சடையர் என்று இங்கு சொல்லப்பட்டவர் பெரும் செல்வந்தர். அவர் ஒரு மாமன்னராகவோ, குறுநில மன்னராகவோ, இல்லை வியாபாரியாகவோ இருந்திருக்க வேண்டும். கம்பரின் பிற படைப்புகளில் சடையர் ஒரு வியாபாரி என்பதும் அவர் இலங்கையிலும், இலங்கைத் தாண்டியும் வியாபாரம் செய்தவர் என்றும் செய்திகள் உணர்த்தப்பட்டுள்ளது. மேலும் வெண்ணெய் நல்லூர் ஒரு பழம் பெருமை வாய்ந்த ஊர் என்பது புலனாகிறது. அந்த ஊருக்கு திரு என்ற அடை மொழி கம்பரின் பெருமையினால் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் புலனாகிறது. இப்போது பாருங்கள் நமக்கு பண்டையக் காலக்கட்டத்தில் இருந்த சாதி(களின்) பெயர்(கள்), தமிழர்கள் எவ்வளவு தூரம் தங்களது வியாபாரத்தை விஸ்தாரித்திருக்கின்றனர், வெண்ணெய் நல்லூர் எவ்வளவு பழமை வாய்ந்த ஊர் என்பன போன்ற சரித்திர உண்மைகள் உணர்த்தப்பட்டுள்ளது?
                சடையார் என்பவர் வெண்ணெய் நல்லூர்க்காரர், அப்படிப்பட்டவரின் ஊரில் வைத்து இந்தக் காப்பியம் இயற்றப்பட்டது. இந்தக் காப்பியம் எப்படிப்பட்டது? பெருமை வாய்ந்ததாகவும், புகழ் பெற்றதாகவும் உள்ள செய்யுள்கள் நிறைந்தக் காப்பியம். குற்றங்கள் எதுவும் இல்லாதக் காப்பியம். இந்தக் காப்பியம் யாரைப் பற்றியது? நல்லொழுக்கத்தில் நிலைப் பெற்றவரான, உயர்ந்த இறைவனான திருமால். அவரது அவதாரங்களில் ஒன்றான இராமாவதாரத்தின் நாயகன் இராமப்பெருமானைப் பற்றியது.

வீட்டுப்பாடம்:

இவ்வளவு தாங்க சங்க இலக்கியம். இந்த நூல் வகைலே இருந்து தான் நாம கிருஸ்து பிறப்பதுற்கும் முன் தமிழர்கள் வாழ்வு எப்படி இருந்தது என்பதை படித்து, உணர முடியுது! இப்போ இந்த இடுகையிலே வரைபடம் தர்றேன். இதிலே நான் என்னன்ன சொல்ல வர்ரென்றதை நீங்க யூகிச்சு சொல்லுங்க பார்போம்? விளக்கத்தை அடுத்த இடுகையிலே சொல்றேன்!