Wednesday 20 June 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 12




பாடல்:
எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின்மேல் சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய்நல்லூர் தன்னிலே கம்பநாடன்
பண்ணிய இராம காதை பங்குனி அத்த நாளில்
கண்ணிய அரங்கர் முன்னே கவி அரங்கேற்றினானே

நோக்கம்:
கம்பரது இராமாவதாரம் அரங்கேறிய காலம் பற்றிய செய்திகள்

பொருள்:
எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின்மேல் சடையன் வாழ்வு (எண்ணி அறியப்பட்ட சாலிவாகன சகாப்தம் எண்ணூற்று ஏழாம் ஆண்டிற்குமேல், சடையப்ப வள்ளல் வாழ்ந்த)
நண்ணிய வெண்ணெய்நல்லூர் தன்னிலே கம்பநாடன் (திருவெண்ணெய்நல்லூரிலே வாழ்ந்த கம்பன்)
பண்ணிய இராம காதை பங்குனி அத்த நாளில் (தான் இயற்றிய இராமனது வரலாற்றை, பங்குனி மாதத்தில், உத்திர நட்சத்திரத்தில்)
கண்ணிய அரங்கர் முன்னே கவி அரங்கேற்றினானே (பூமாலை அணிந்த திருவரங்கனுக்கு முன்னே புலவர்கள் கூடிய அவையிலே அனைவரும் ஏற்குமாறு அரங்கேற்றினான்)

விளக்கம்:

கம்பரின் காலத்தை இந்தப் பாடல் விளக்குகிறது. இந்த பாடல் படிப் பார்த்தால் கம்பரின் காலம், எண்ணூற்றி ஏழாம் ஆண்டு (807 AD) என்று ஆகிறது. அனால் கம்பரின் காலக்கட்டம் அதற்கு பின்பு என்று கூறும் சரித்திர ஆராய்ச்சியாளர்களும் உள்ளனர். சிலர் அவர் பதினோராம் நூற்றாண்டுக் காலத்தவர் என்றுக் கூறுகின்றனர். ஒரு சிலர் அவர் பண்ணிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றுக் கூறுகின்றனர். எப்படியோ, கம்பரோ அவரது சமக்காலத்தினரோ தங்கள் காலத்தை உணர்த்தும் விதமாக எந்த ஒரு பாடலையும் தந்தருளி விட்டுப் போகவில்லை. இராமப்பெருமானின் பெருமையே பிரதானம்! தன்னைப் பற்றியக் குறிப்புகள் அனாவசியமானது என்று நினைத்தார்களோ என்னவோ. அதுவும் இல்லாமல் கம்பர் தனது காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்று பாடலில் குறிப்பிட வாய்ப்பே இல்லை என்று தான் கூற வேண்டும். இது பின்வரும் இராமாயண அன்பர்களால் சொல்லப்பட்ட ஒரு சரித்திர செய்தியாகும். ஏனெனில் கம்பரது காலத்தில் "கிறிஸ்து பிறந்த பின்", "கிறிஸ்துவிற்கு முன்" என்ற பாகுபாடுகளோ, ஆங்கிலேயே முறைப்படி உள்ள தற்கால நூற்றாண்டுக் கணக்குகளோ இல்லவே இல்லை. மேலும் இந்த பாடல்களை இராமாயண பக்தர்கள் இந்த பாடல்களை ஆங்கிலேயே ஆட்சி வந்த பின் இயற்றி கம்பராமாயணத்தின் முன்னே இணைத்திருக்க தான் பல வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் இந்த இராமாயண பக்தர்களின் பாடலில் நூற்றாண்டு கணக்கு வருகிறதே, அது ஆங்கிலேயே ஆதிக்கத்திலிருந்து நாம் கற்றதொரு வழக்காகும். அனால் இராமாயண பக்தர்கள் கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்ட மாதமும் நாளும் தமிழ் கணக்கிலேயே கூறியுள்ளனர். பங்குனி மாதத்தில் உத்திர நட்ச்சத்திரத்தில் இராமாயணம் கம்பரால் இராமாவதாரம் என்ற பெயரில் பொதுமக்கள் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது. "அத்த நாள்" என்றால் உத்திர நட்சத்திரம் என்று பொருள். அரங்கேற்றப்பட்ட இடம் திருவரங்கம். திருவரங்கத்தில் அந்த மண்டபம் இன்றும் உள்ளது. மண்டபத்தில் உள்ள கற்தூணில் அந்த செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. திருவரங்க கோவிலில் பலவிதமான பூமாலை சூட்டப்பட்டிருக்கும் ரங்கமன்னார் முன்னிலையில், யாவரும் "இது சரியில்லை", என்று குறையே கூற முடியாத படி பாடல்களைக் கொண்டு இராமாவதாரம் திருவெண்ணெய்நல்லூர்காரரான கம்பரால் அரங்கேற்றப்பட்டது. பங்குனி உத்திரம் என்பது இந்து மதத்தில் மிகச் சிறந்த நாளாகும். இந்த நாள் தான் பல தெய்வங்களின் திருமண நாளாக அனுஷ்டிக்கப் படுகின்றது. திருமால், சிவபெருமான், முருகப்பெருமான் எனப் பலரும் இந்த நாளில் தான் திருமணம் செய்தனர். அதனாலேயே இந்த நாள் சம்சார வாழ்க்கைக்கு (க்ருகஹஸ்தர்கள்) மிகவும் உகந்த நாளாகும். அவ்வளவு ஏன், ஆண்டாள் ரங்கமன்னாரை திருவரங்கத்தில் கலந்த நாளும் இதே நாள் தான்.

http://wikimapia.org/#lat=10.8631599&lon=78.6900089&z=19&l=0&m=b




வீட்டுப்பாடம்:

1. கம்பரின் கால கட்டத்தை உங்களுக்கு தெரிந்த வரையில் விவாதிக்கவும்!
2.
இது மிக எளிது, பங்குனி உத்திரம் ஆங்கில மாதத்தில் தோராயிரமாக எப்போது வருகிறது
3. 
ஒவ்வொரு மாதத்திற்குமே ஒரு முக்கிய நாள் உண்டு, அந்த அந்த தமிழ் (கண்டிப்பாக தமிழ் மாதங்கள் மட்டுமே!!!) மாதங்களும் அதன் ஒரு சிறந்த நட்சித்திரமும் கருத்துகளில் பட்டியலிடுங்கள் பார்போம்!

No comments:

Post a Comment