Thursday 28 June 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 14




பாடல்:
வடகலை தென்கலை வடுகு கன்னடம்
இடம் உள் பாடை யாது ஒன்றின் ஆயினும்
திடம் உள் ரகு குலத்து இராமன்தான் கதை
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே

நோக்கம்:
நூலினை படிப்பவர், கேட்பவர் அடையும் நன்மைகள்

பொருள்:
வடகலை தென்கலை வடுகு கன்னடம் (வடமொழி, தென்மொழி, தெலுங்கு, கன்னடம் என)
இடம் உள் பாடை யாது ஒன்றின் ஆயினும் (இவ்வுலகத்தில் உள்ள மொழிகளில் எந்த மொழியானாலும்)
திடம் உள் ரகு குலத்து இராமன்தான் கதை  (வலிமை மிகுந்தவனும், இரகு குலத்தில் தோன்றியவனுமான இராமப்பெருமானின் வரலாற்றை)
அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே (பணிவுடன் கேட்பவர்கள் மரணமில்லா பெருவாழ்வு பெறுவார்)

விளக்கம்:
இராமாயணம் என்னும் இந்த பெருங்காப்பியம் கிட்டதிட்ட முன்னூறு மொழிகளில் மொழிப்பெயர்த்தும், தழுவியக் கதையாக இயற்றப்பெற்றும், சிறிது முதல் பெரிது வரை கதை மாற்றங்கள் செய்யப் பட்ட படைப்பாக அளிக்கப்பட்டும் வந்துள்ளது. இந்தக் காப்பியம் இவ்வளவு மொழிகளில் ஏறத்தாழ ஏழாயிரம் வருடங்களாக படிக்கப்பெற்றும், பிறரை ஈற்றும், பிறரை அவர்கள் மொழியில் இந்த கதையை சொல்ல வைத்தும், ஒரு வாழ்க்கை முறையை பறைசாற்றும் முன்னுதாரணமாக இருக்கப் பெற்றும் நிலைப் பெற்றிருக்கின்றது. இனியும் நம் காலங்களை தாண்டியும் இந்தக் காப்பியம் மானுடக் குலத்திற்கு வழிக்காட்டியாக திகழும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. இந்த ஏழாயிரம் ஆண்டுகளில் ஆரம்பம் முதலே இராமரது வாழ்க்கைக் காதையை பொய் என்றும், தனி சிறப்பு எதுவும் இல்லாதது என்றும் கூறிய மூடர்கள் இருந்துள்ளனர். இராமர் என்ன ஒரு பொறியியலாளரா (இஞ்சினியர்), அவர் எந்த பொறியியல் கல்லூரிக்கு (இன்ஜினியரிங் காலேஜ்) சென்றார் என்றுக் கேட்கும் மூட தற்குறிகள் இராவணர்களாக இன்றும் அன்றுத்தொட்டு தொடர்கின்றனர். இனியும் இந்த இராவணர்கள் தொடருவார். ஆனால் இந்த மூடர்கள் உள்ளதால் தான் மக்கள் இராமயாணம் என்னும் அறிவு சார்ந்த காப்பியத்தை மேலும் மேலும் நாடுகின்றனர். ஏகப்பத்தினி விரதத்தினன் வாழ்க்கைக் காதை ஊர் முழுக்க பொண்டாட்டிகளும், ஒழுக்கக்கேடான துணைவியர்களையும் "வைத்திரு"க்கும் அயோக்கியர்களுக்கு ஒரு கற்பனைக் காதையாகத் தான் தோன்றும். "அது எப்படி ஒருவன் ஒரு பொண்டாட்டியோடு வழ முடியும், முடியவே முடியாது! என்னாலேயே முடியவில்லையே?" என்று அவர்கள் நினைக்கலாம். இராமரது வாழ்க்கை முழுவதும் அவருக்கும் அவர் மனைவிக்கும் சோதனைகளும், கடும் துன்பங்களும் இருந்தனவே தவிர அவரது இராஜ்ஜியத்தில் மக்கள் மிக மிக மிக சந்தோஷமாகவும், தர்மம் தழைக்கவும் வாழ்ந்தனர். அதை ஒரு பொற்காலம் என்றுக் கூறினால் மிகையாகாது. தானும் தனது குடும்பமும் சந்தோஷமாக வாழனும், நாடு எப்படிப் போனால் என்ன என்று 2G, 3G, என்று வெட்கம் கெட்டத் தனமாக மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பவர்களுக்கு இராமக் காதை ஒரு கற்பனையாகத்தான் தோன்றும் ஏனென்றால், "அரசியலில் நேர்மை" என்பது இவர்களுக்கு எல்லாம் ஒரு கற்பனையே. அனால் விவரமறிந்த மக்கள் இந்தக் காப்பியத்தில் உள்ள பெரும் தத்துவங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று முனைப்புடன் இருந்தனர். ஆதலால் தான் இந்திய மொழிகளில் எல்லாவற்றிலும் இராமாயாணம் உள்ளது. இந்தியாவில் தோன்றிய மதங்களான புத்த மதத்திலும், ஜைன மதத்திலும், சீக்கிய மதத்திலும் கூட இராமாயணம் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை நூலாக அனுட்டிக்கப்படுகின்றது. இவ்வளவு என்? இந்தியாத் தாண்டியும் இராமாயாணத்தை, மக்கள் தங்களது வாழ்க்கையிலும், கலாச்சாரத்திலும் பெரிதும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், பர்மா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நேபால், திபெத் ஆகிய நாடுகள் இராமக் காதையை பெரிதும் மதிக்கின்றன, தங்களது இறை வழிப்பாட்டிலும், வாழ்க்கை முறைகளிலும் இராமாயண நீதிப் பொருளினை கிரகித்துக் கொண்டுள்ளனர். இது மட்டுமின்றி இராமக் காதை ஒவ்வொரு கிராமத்திலும், சாதீய குழுக்களிலும் வட்டாரக் கதைகளாக பலவாறாகப் பேணி போற்றப்படுகின்றது. ஆதலால், வடமொழியான சமக்கிருதம், தென்மொழியான தமிழ், மற்ற இன்னப பிற இந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம் என்றில்லாமல்  நீங்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இராமரது வாழ்க்கை நீதி உங்களுக்கு வெகு அருகாமையிலேயே உள்ளது. இராமப்பிரானின் வீர சாகசத்தையும், அவரது குலமான இரகு குலப் பெருமையையும் நீங்கள் படித்து, கேட்டு, பார்த்து, உணர்ந்து உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்தால் மரணமில்லாத பெருவாழ்வு பெறுவீர்கள்.

 


வீட்டுப்பாடம்:
மக்களே விளக்கத்திலேயே நான் குறிப்பிட்டுவிட்டேன், இராமாயணம் முன்னூறு மொழிகளில் வாசிக்கப் படுகின்றது என்று. அதைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துக் கொள்ளுங்களேன்? நான் முதல் தகவலைத் தருகிறேன், தாய்லாந்து நாட்டில் இராமயாணம் அவர்களது தாய் மொழி (அவர்களது மொழியின் பெயரே தாய் தான் அதனால் தாய்லாந்து மக்களின் தாய் மொழி தாய் மொழியாகும்! ஹீ ஹீ ஹீ) இராமயாணக் காப்பியத்தை "இராமாக்கீன்" என்ற பெயரில் தழுவிய காப்பியமாக கொண்டுள்ளது. பெரும்பாலும் கதையும், கதைக்களமும் இந்திய மூலத்தில் இருந்து வேறுப்படவில்லை, அனால் தெய்வங்களின் பெயரும், உடைகளும், சில நீதிக் கூறுகளும் தாய்லாந்து மக்களின் மொழி, சம்பிரதாயங்கள், வழக்குகளுக்கு ஏற்ப மாறியுள்ளது! இப்பொழுதும் நீங்கள் ஏதாவது தாய்லாந்து உணவகத்திற்கு சென்றால் அங்கே நீங்கள் பல நடன மங்கையர் பல்வேறு இராஜாக் கால உடைகள் அணிந்து மேலும் கிரீடமும், அணிகலன்களும் அணிந்தபடி இருக்கும் புகைப்படங்கள் இருக்கும். அது இராமயானத்தை பறைசாற்றும் புகைப்படமாக தான் இருக்கும். அவர்களது கிரீடமும், இராஜ உடைகளும் இந்திய வழக்கத்தில் இருந்து மாறுப்பட்டு மிகவும் புதுமையாக இருக்கும். அடுத்த முறை தாய் உணவகத்திற்கு சென்றால் கூர்மையாக கவனித்துப் பாருங்கள்! சரியா?
இராமாக்கீனில் இராமரது பெயர், ப்ரா ராம் (லார்ட் ராம் என்பது போல)! சீதையின் பெயர், நங் ஸிடா (தேவி சீதா என்பது போல!)

No comments:

Post a Comment