Wednesday 20 June 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 8


காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 8


பாடல்:
இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி அரசு ஆண்டு இருந்தாலும்
உம்பர் நாட்டில் கற்பகக்கா ஓங்கு நீழல் இருந்தாலும்
செம்பொன்மேரு அனைய புயத் திறல் சேர் இராமன் திருக் கதையில்
கம்பநாடன் கவிதையில் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே

நோக்கம்:
நூலின் சிறப்பும், காப்பியத் தலைவனின் சிறப்பும்

பொருள்:
இம்பர் நாட்டில் செல்வம் எல்லாம் எய்தி அரசு ஆண்டு இருந்தாலும் (இம்மன்னுலகத்தின் செல்வங்கள் அனைத்தையும் அடைந்து அரசாட்சி செய்து கொண்டிருந்தாலும்)
உம்பர் நாட்டில் கற்பகக்கா ஓங்கு நீழல் இருந்தாலும் (விண்ணுலகத்தில் உயர்ந்து விளங்கும் கற்பகச் சோலையின் நீழலில் இருந்தாலும்)
செம்பொன்மேரு அனைய புயத் திறல் சேர் இராமன் திருக் கதையில் (சிவந்த பொன்மயமான மேருமலையைப் போன்ற தோள்களில் வலிமை அமையப்பெற்ற இராமனது புனிதக் கதையை கூறும் நூல்கள் பலவற்றுள்)
கம்பநாடன் கவிதையில் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே (கம்பர் இயற்றிய இராமயணப் பாடல்களில் மனம் களிப்படைவதைப்போல, கற்றுத் தேர்ந்தவர்களுக்கு மனம் களிப்படையாது)



விளக்கம்:
நாம் வாழ்க்கையில் அடைய வேண்டும் என்று நினைத்து எது எதற்காக எல்லாம் உழைக்கிறோமோ அதை எல்லாவற்றையும் விட மேலானது கம்பரின் கவிப்பா என்பதை உணர்த்துவதே இப்பாடலின் நோக்கமாகும்! மண்ணுலகத்திலும் சரி, வின்னுலகத்திலும் சரி கம்பரின் எழுத்துக்கள் குறிப்பாக கம்பரது இராமக் காதையை விட இன்பம் அளிக்கும் பொருள் எங்கும் இல்லை! நல்ல இலக்கியங்களை, நல்ல சிந்தனைகளை படிக்கும் மாத்திரத்திலேயே நமக்கு இன்பப்  பிரவாகம் பெருக்கெடுத்து ஓட வேண்டும். அது தான் ஒரு சிறந்த கல்வியாளனுக்கு அழகு. எனக்கு எழுத்துக்களும்,கலைகளும் பெரிதாக பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்றால் அதில் பெரும் பகுதி பிழை உங்களையே சாரும், உங்களை பதிக்காதப் பிழை அந்த எழுத்துக்கும் உண்டு என்றாலும். ஏனெனில் நாம் குறிப்பிடும் இந்த இலக்கியங்கள் அனைத்தும் காலத்தினை வென்றவை, அவை இயற்றப்பட்ட காலத்தில் அந்த காலக்கட்டத்து சான்றோர்களால் பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்பட்டவை. இவைகளில்   உங்களுக்கு நாட்டம் ஏற்படுவதில்லை என்றால் ஒன்று உங்களுக்கு தமிழ் தெரிந்திருக்காதிருக்க வேண்டும் இல்லை எழுதப் படிக்கவே தெரிந்திருக்காதிருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லாத பட்சத்தில் நீங்கள் இந்த நூல்களை ஓரளவேனும் பரிச்சயப்படுத்தி வைத்துக் கொள்வது சாத்தியமும், கட்டாயமும் ஆகும்! இந்த இலக்கியங்கள் உங்களுக்கு எந்த வித பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை என்றால் ஒன்று நீங்கள் இவை எல்லாவற்றிற்கும் மேற்பட்டவராக இருக்க வேண்டும் இல்லையேல் நீங்கள் உங்கள் வாழ்க்கை இயந்திரத்தில் சிக்குண்டு மற்ற மனமாற்றத்திற்கு எல்லாம் நேரமில்லாமல் இருந்கின்றவராக இருக்க வேண்டும்! நீங்கள் எல்லாவற்றிற்கும் மேற்பட்டவர் என்பதை நாம் புறம் தள்ளுவோம். நாம் இருவருக்கும் தெரியும், இப்படி கலைகளுக்கு அப்பாற்பட்டவர் ஒரு பதிவிற்கு வந்து கம்பரது இராமக் காதையை படிக்கவோ, பதிவு போடவோ தேவை இல்லாதவர் என்று. அதனால் நாம் நம் வாழ்க்கை இயந்திரத்தில் சிக்குண்டவர் என்று எண்ணிக் கொள்வோம். அதை நாம் உடைத்து வெளி வந்து வாழ்க்கையின் மறுப் பரிமாணத்தை பார்க்க நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும். அதற்கு கம்பன் எழுத்துக்கள் மிக பொருத்தமனாதாகும். நீங்கள் வாழ்க்கையில் எல்லா வித சௌபாக்கியங்களும் பெற்ற நபர் ஆனாலும், உங்கள் உலக வாழ்க்கைக்கு பிறகு நீங்கள் எத்தகு மேத்தகு வானுலக வாழ்க்கை வாழப் போகிற நபர் என்றாலும் உங்களுக்கு கம்பரது இராமக் காதை இவை எல்லா வற்றையும் காட்டிலும் பெரும் இன்பத்தை வாரி வழங்கும். சொல்லப் போனால் இராமக் காதை அதுவும் கம்பரது இராமக் காதை வழங்கும் இன்பங்களில் மேற்சொன்ன இன்பங்களும் தானாகவே கிட்டி அதைக் காதிலும் உயர்ந்த பக்தி என்னும் இன்பத்தில் உங்களை கரைகின்றது! இராமப்பிரானின் தோள் வலிமை ஒப்பிட முடியாதது. அது மேரு என்னும் விண்ணுலகத்தில் மட்டுமே இருக்கும் பொன்னாலான தேவலோக மலை போன்ற வலிமையுடையது. அதனாலேயே பாரத கண்டம் முழுதும் இம்மாபெரும் உத்தம புருஷனின் பராக்கிரம காதையை பலரும் பல மொழிகளில் இயற்றியுள்ளனர். அனால் இவை எல்லாமே இராமரை பற்றி இருப்பதினால் சிறந்தது என்றாலும், நமது கம்பரின் எழுத்தில் வந்த இராம காதையை தான் இவை எல்லாவற்றிற்கும் சிகரம் என்று கூற வேண்டும். அதனால் தான் அது இராமக் காதை கேட்பதில் வரும் இன்பங்களிலேயே உச்சக் கட்ட இன்பத்தை தரவல்லது. வேறு யாருடைய இராமக் காதையிலும் இந்த வகையில் பெரும் இன்பபிரவாகம் ஊருவதில்லையாம் (அந்த அந்த கதைக்கேற்ப பல களிப்பினை தந்தாலும்)!

வீட்டுப்பாடம்:
ஒன்றும் இல்லை!

No comments:

Post a Comment