Friday 15 June 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 2

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 2

பாடல்:
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்  தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்  கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்


பொருள்:
அஞ்சிலே ஒன்று பெற்றான் (ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் இவற்றில் காற்று தன்மையாகிய வாயு என்ற பயர் பெற்றவன்  பெற்றெடுத்த பிள்ளை)
அஞ்சிலே ஒன்றைத்  தாவி (ஐம்பூதங்களில் நீர் தன்மையாகிய சமுத்திரத்தை தாண்டி ஆகாய மார்க்கமாக இந்திய திருநாட்டில் இருந்து இலங்கை நாட்டை அடைந்தவன்)
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி (ராம, இலக்குவன, பரத, சத்ருகுண சகோதரர்கள் நான்கு என இருக்க, இராமரால் கட்டி தழுவப் பட்ட குகன் ஐந்தாம் சகோதரனாகி, அந்த ஐந்து சகோதரர்களுக்கு ஆறாவதாக சேர்ந்தவர் இவர். இவர் தனது உயிருனும் மேலான இராம பிரானின் உயிர் காக்க சீதையை தேடி சென்றவர்)
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்  கண்டு (ஐம்பூதங்களில் நில தன்மையாகிய பூமித் தாய் பெற்றெடுத்த பெண் சீதை, அணங்கு: பெண் ; அந்த சீதையை கண்டுபிடித்து வந்தவன்)
கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் (அயலார்: மற்றவர்; இவர் தனது ஊர் என்று சொல்ல முடியாதபடி நற்பெருமைகள் எதுவும் இல்லாத நாட்டில் ஐம்பூதங்களில் நெருப்பு  தன்மையாகிய அக்கினியை வைத்து அந்த ஊரையே தீக்கிரையாக்கியவர்)
அவன் எம்மை அளித்துக் காப்பான்  (இத்தகு பெருமைகள் உடையவர். பாடலில் யார் இவர் என்று குறிப்பிடவில்லை என்றாலும், இது அனுமரே! அந்த அனுமர் பெருமான் நமக்கு வாழ்வில் தேவையானதை அளித்து காத்து அருள்வார்!)

நோக்கம்: இராமயணத்தில் சிறந்த சேவை செய்தவர்களுள் தலையாயவரான அனும பெருமாளை போற்றி பாட பட்ட பாடல் ஆகும்



விளக்கம்: இந்த உண்மை பின் வரும் பகுதிகளில் கம்பரே தனத் பாடலகளில் பதிவு செய்வார். வாயுவிற்கு மகனாக பிறந்தாலும் அனுமர் சிவபெருமானின் அம்சம் ஆகும். சைவமும் வைணவமும் போட்டி போட்டு கொண்டிருக்கும் அன்று முதல் இன்றைய கால கட்டம் வரை, இந்த இரு மரபுகளுக்கும் உள்ள பிணைப்புகளை இந்த இரு மரபுகளின் தலைமை தெய்வங்கள் எப்பொழுதும் எடுத்து காட்டிய வண்ணமே உள்ளன. திருமால் பல சம்பவங்களில் சிவப்பெருமானின் முதல் தர பக்தராக இருந்துள்ளார். சிவப்பெருமானும் பல சம்பவங்களில் திருமாலிற்கு சேவை செய்துள்ளார். இராமாயணம் அதற்கு ஒரு நல்ல உதாரணம். அனுமாராக வந்து இராம சேவை என்பதை தவிர எதுவும் அறியாது வாழ்ந்து உலகுக்கு பக்தியின் எடுத்துக் காட்டாய் வாழ்ந்து காட்டியவர் சிவப்பெருமான். அதனால் தான் அனுமருக்கு தவமும், தியானமும் இயற்கையிலேயே  தானே அமைந்தது. அப்படிபட்ட அனுமர் வாயு பகவானுக்கும், அஞ்சனை என்ற வானர இன அம்மையாருக்கும் மகனாக பிறந்தவர் (அந்த காலத்திலேயே கலப்பு மணம், தேவலோக மணமகன், குரங்கு தோற்றம் கொண்ட வானர இன மணமகள்). அவர் குரங்குகளின் தாவும் திறமையை கொஞ்சம் கூடதலாகவே பெற்றவர் போலும், அதனால் தான் நாடு விட்டு நாடு (அந்த காலத்தில் கண்டம் விட்டு கண்டம் எனலாம்!) தாண்டி, சமுத்திரத்தை ஒரே எட்டாக எட்டி தாண்டி போக முடிந்தது. இராம பிரானுக்காகவே அவதரித்தவர் அனுமர். நால்வருடன் அஞ்சாக வேண்டியவர், அந்த தகுதியும் உடையவர். ஆனாலும் மோசமில்லை அஞ்சுடன் ஆறாக இணைந்தவர். இணைத்தவுடன் இராம பிரானை தனது உயிரினும் மேலாக மனதில் பதித்தவர். அவர்க்காகவே தனக்கு இடப்பட்ட திசை நோக்கி சீதை அம்மையாரை தேடி சென்றவர். அங்கே பூமி தாயின் பெண் என்பதனால் அவளை போலவே பொறுமையின் உருவமாக இருந்த சீதை அம்மையாரை கண்டு, அவருக்கு இழைத்த அநீதிக்காக அந்த நாட்டையே தீக்கிரை ஆக்கி தண்டித்தவர். இப்படி பட்ட பராக்கிரமசாலி நமக்கு தேவையானதை அளித்துக் காப்பார்! பாடல் இயற்றியோர் செல்வம் அளித்து, நல்வாழ்க்கை அளித்து, புகழ் அளித்து, முக்தி அளித்து என்று இவை எதுவுமே குறிப்பிடவில்லை! ஏன் தெரியுமா? அனுமருக்கு நமக்கு என்ன அளித்து நம்மை எப்படி காக்க வேண்டும் என்பது நன்றாகவே தெரியும். ஆனானப்பட்ட இராம பிரானுக்கே அவருக்கு தேவை என்ன என்பதை அறிந்து அளித்துக் காத்தவர் அல்லவோ? நாம் எம்மாத்திரம்!

வீட்டு பாடம்: இந்த பாடலை மனனம் செய்வதே. அனுமர் பக்தர்கள் இந்த பாடலை பாடி தோத்திரம் செய்யலாம்! பொருள் விளங்காத சமஸ்கிருத பாடலை பாடுவதற்கு இந்த பாடல் எவ்வளவோ மேல். இந்த பாடலை பாடும் பொது நமக்கு அனுமாரின் பராக்கிரமும், பெருமையும் விளங்கி மேலும் பக்தி கூட தான் செய்யும். சம்ஸ்கிருத பாடலில் என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் அனுமாரிடம் பக்தியை கொண்டு வர நாம் கொஞ்சம் மெனக்கிட தான் வேண்டி இருக்கிறது. இல்லையா? நீங்களே சொல்லுங்கள்!

8 comments:

  1. அருமையான விளக்கம், நல்ல தமிழில்! நன்றி! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Excellent, thanks for putting this together.

    ReplyDelete
  3. சிறப்பான பதிவு மனதில்படியும்படி புாியும்படி இருந்தது நன்றிகள் பல பல

    ReplyDelete
  4. பொருள் தெரியாமல் படித்துக் கொண்டிருந்த எனக்கு விளங்கக் கூறினீர்கள். நன்றி.

    ReplyDelete
  5. அருமையான விளக்கம். அதைவிட பிரமாதம் தங்களுடைய கருத்து. மிக்க நன்றி.

    ReplyDelete
  6. நல்லோர் பொருள் விளக்கம் அறியாமை இருள் விலகும் அனுமான் அருள் கிடைக்கும் நன்றி வாழ்த்துக்கள் ஐயா நான் படிப்பறிவு இல்லாதவன் ஒரு சிறு சந்தேகம் அவன் நம்மை அளித்து அல்லது அவன் எம்மை அளித்து என்ற வரிக்கு பதிலாக அவன் நன்மை அளித்து காப்பான் வரியை அச்சு பிழையாக இருக்கலாம் என்று நினைத்துள்ளேன் என் வாட்ஸ் அப் 9710164365 தயவுசெய்து பதில் அனுப்பி உதவுங்கள் மீண்டும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. ,,வணக்கம் ,,அளித்து,,,என்பது,,,கொடுத்து,,தந்து,,,பெற்று,,என பல,,பொறுள் உண்டு,,,தமிழ் "கற்ற ,,கம்பனின்,,,கவியில் சந்தேகம்,,,வரலாமா?ஐய்!யா.."வாழ்க வளத்துடன்,,,,

      Delete
    2. மன்னிக்கவும்,,,பொருள் ,,என்பது,,,பொறுளாகிவிட்டது...

      Delete