Thursday 28 June 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 13



 
பாடல்:
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால்

நோக்கம்:
நூலின் நாயகன், காவிய நாயகன் இராமப்பெருமானின் நாமத்தை சொல்வதினால் ஏற்படும் நன்மைகள்

பொருள்:
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே (எல்லா வித நன்மைகளையும், செல்வங்களையும் தந்தருளுமே)
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே (தீய செயல்களும், பாவங்களும் சிதைந்துத் தேய்ந்து ஒன்றும் இல்லாமல் போகுமே)
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே (இனி எடுக்க ஜென்மங்களும், அந்தந்த ஜென்மங்கள் எடுத்ததினால் வரவிருக்கும் மரணங்களும் என இவையிரண்டும் இல்லாமல் போய்விடுமே)
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால் ("ராமா" என்னும் இரண்டு எழுத்தினைப்  பாராயணம் செய்வதினால் இவை எல்லாம் உடனே இப்போதே இந்தப் பிறவியிலேயே நடக்கும்)

விளக்கம்:
இங்கே நான் சொல்லப் போகும் பல கருத்துகளும் இணையத்தில் நான் தேடி படித்ததும், நான் சிறு வயது முதல் பெரியோர் சான்றோர்களிடம் கேட்டதுமாக பல்வேறு தகவல்களே. நான் இந்த பதிவுகளில் பகிர்ந்து கொள்ளும் பல செய்திகள் இந்த வகை வந்த செய்திகளே. ஆனால் நான் எங்கிருந்து எப்போது யாரிடமிருந்து அந்த தகவல்களை படித்தேன் என்று பெரும்பாலும் மேற்கோள் காட்ட இயலாது. ஏனென்றால் நான் அப்படி ஒரு பட்டியலை வைத்துக் கொள்ளவில்லை. அதனால் நீங்கள் இந்தக் கருத்துகளை ஏற்கனவே எங்கேயாவது படித்திருந்தால் இது அதன் மூலமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது, இல்லை இதுவும் அதுவும் ஒரே மூலத்தில் இருந்து வந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது, அல்லது இவை எல்லாம் பரவலாக உள்ள புகழ்ப் பெற்ற சம்பவங்களாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் காப்பி அடிக்கிறேன் (plagiarism) என்ற குற்றச்சாட்டுகள் எழுவதற்கு முன்பே இந்த நேர்மையான வாக்குமூலத்தை நான் தந்து விடுகிறேன்!

இராம நாமத்தை சொல்வதினால் பல்வேறு பயன்கள் உண்டு. இராம நாமம் தாரக மந்திரம் எனப்படுகிறது. தாரக மந்திரம் என்றால் ஒரு பரிமாணத்தில் இருந்து இன்னொரு பரிமாணத்திற்கு உங்களை அழைத்துச் செல்லக் கூடிய சக்தி வாய்ந்த ஒரு மந்திரமாகும். நாம் பிறப்பு இறப்பு என்ற வாழ்க்கை சுழற்சியிலிருந்து, என்றும் இறவாமை என்ற பரமபதத்தை அடைய வைப்பது ராம நாமமாகும். நாம் அன்றாடம் செய்யும் வேலைகளின் போதே இந்த சக்தி வாய்ந்த நாமத்தை மனதுக்குள் ஜபித்துக் கொண்டே நம் பணியை செய்யலாம். கார் ஓட்டும் போது "ராம ராம" என்று ஜபித்துக் கொண்டே ஓட்டிப் பாருங்கள் உங்களுக்கு ஏற்படவிருந்த சிறு சிறு விபத்துக்கள் கூட எப்படி தவிர்க்கப்படுகின்றது என்பதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள். நானும் இதைக் கண்டிருக்கிறேன். என் கண் முன்னே நான் மற்ற வாகனங்களை இடிக்க எத்தனித்ததையும், மற்றவர்கள் என் வாகனத்தில் விழ எத்தனித்ததையும் பார்த்திருக்கிறேன். தொடர்ச்சியாக நான் ஜபித்துக் கொண்டிருப்பதால் அவை எல்லாம் என் கண் முன்னே விலக்கி விடப்பட்டு மனதிற்குள் ஒரு குளிர்ச்சியான அரவணைப்பை தந்து "தடங்கல்கள் நீங்கியது மேலே செல்க" என்பது போல் சாலை விரிந்து பரந்து நான் முன்னே செல்ல வாக்காக இருந்ததையும் பார்த்திருகின்றேன். நான் சமைக்கும் போதும், குளிக்கும் போதும், வீட்டினை சுத்தம் செய்யும் போதும், பல சமயங்களில் ஜபித்துக் கொண்டிருப்பேன். பல சமயங்களில், பாடல் கேட்கும் போதும், டி.வி பார்க்கும்போதும் நடுவில் நடுவில் நான் இந்த மந்திரங்களை மனதிற்குள் ஒரு மூன்று முறை ஜபித்து விட்டு மேலே தொடர்வேன். இப்படி செய்யும் போது இப்போதும் நம் அருகே பெருமாள் பக்க பலமாக இருக்கிறார் என்பதை நிதர்சனமாக உணர்ந்திருக்கின்றேன். நீங்களும் செய்து பாருங்கள்!

அது எப்படி ஒரு தாரக மந்திரம் நம்மை பிறப்பு இறப்பு என்ற வாழ்க்கை சுழற்சி என்னும் பரிமாணத்தில் இருந்து திருமாலின் உலகமான வைகுண்டத்தில் பரமபத பதிவியை தந்தருளும்? நாம் பிறப்பதும், இறப்பதும், மீண்டும் பிறப்பதும் ஒரே ஒரு காரணத்தால் தான். அந்த முக்கியக் காரணத்தை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். அந்தக் காரணம் நமது கர்ம வினை. நமது ஆசைகள், நமது பாவங்கள், ஏன்? நமது புண்ணியங்களும் கூட நம்மை மீண்டும் பிறக்க வைக்கின்றன. நாம் பரம பதம் என்னும் மேலுலகத்தை அடைய வேண்டும் என்றால் நாம் எந்த சுமையும் இல்லாத இலகுவான ஒரு ஆத்மாவாக இருக்க வேண்டும். அதை விடுத்து தலையில் கூடை நிறைய கர்ம வினைகளை சுமந்தால் எப்படி நாம் மேலே எழ முடியும்? கீழே தான் அலைந்துக் கொண்டிருக்க முடியும். அந்தக் கூடையில் பாவம் என்ற மலம் இருந்தால் என்ன? புண்ணியம் என்ற தங்கக் கட்டிகள் இருந்தால் என்ன? சுமை சுமை தானே. அந்த சுமையை நாம் உலகில் தெருத்தெருவாக சுற்றி இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக கொட்டுகிறோம், கொட்டிவிட்டு காலியாகும் இடத்தில் இன்னும் கொஞ்சம் வேறு சுமைகளை எதையோ எங்கேயோ அள்ளுகிறோம். இப்படியே ஒவ்வொரு முறையும் செய்கிறோம்! ஒரு முற்றும் உணர்ந்த கை தேர்ந்த ஞானி தலையில் உள்ள சுமையை கொட்ட மட்டுமே செய்து, வேறு சுமையை அள்ளாமல் இந்தப் பிறவிப் பெருங்கடலை கடந்து வெற்றிக்கரமாக செல்கிறார்! அது ஒரு விழிப்புணர்வோடு செய்ய வேண்டிய ஒரு நுணக்கமான செயலாகும். அது நம்மை மாதிரி சாதாரனவர்களுக்கு அவ்வளவு எளிது அல்ல அதனால் தான் மிக எளிதான அறிவுரைகள் நமக்குத் தரப்பட்டு அவைகளை பின்பற்றினாலே நாம் கர்மங்களை தொலைத்து மீண்டும் கர்மங்களை பெறாமல் மேலுலகமடைவோம் என்று அறிவுறுத்தப்பட்டோம். அந்த அறிவுரைகள் யாதெனில் "கோபப்படக்கூடாது, மற்றவரைக் கண்டு பொறாமை படக்கூடாது, யாரையுமோ எதையுமோ வெறுக்கக்கூடாது, எப்போதும் எல்லோரிடத்திலும் எங்கேயும் அன்புக் காட்டி வாழ வேண்டும்" என்பனவைகளாகும். இவையை பின்பற்றினாலே நாம் பரமபதத்தை அடைந்து விடுவோம். அனால் இவையும் நமக்கு இந்நாட்களில் மிக சிரமமாக போய்விட்டது. அப்படியும் இறைவன் நம்மைக் கை விடவில்லை. சரி இதை விட எளிதான உத்தியைத் தருகிறேன் என்று கொடுத்தது தான் இராம நாமம். இந்த நாமத்தை சொன்னால் நமது தீய பழக்கங்கள் மறையும். தீய பழக்கங்கள் மறைந்தால் தீய வினைகள் மறையும். மேலும் நல்ல பழக்கங்கள் வாழ்வில் தோன்றும், அதனாலே பரமபதத்தை நோக்கி நாம் அடைவதற்கு எல்லா வினைகளும் முற்படும். இப்படி நமது கர்ம வினைகள் எல்லாம் தீர்ந்து போகும் நிலையில் இராம நாமம் மானிடப் பிறப்பு என்ற பரிமாணத்திலிருந்து பரமபத பதவி என்ற மேத்தகு பரிமாணத்திற்கு நம்மை கடத்திச் செல்லும். நாம் இராம நாமத்தை ஜெபிக்கும் மாத்திரத்திலேயே கிடைக்கும் அரும்பெரும் பலன்கள் இவை.

வீட்டுப்பாடம்:
இராம நாமத்திற்கு பலரும் பல்வேறு பொருள்களைக் கூறுவார்கள். நீங்கள் ஏற்கனவே கற்றறிந்த அல்லது இந்த வீட்டுப்பாடத்திற்காக கற்றறிந்தபொருள் யாது?

No comments:

Post a Comment