Saturday 16 June 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 4


காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 4


பாடல்:
தராதலத்தின் உள்ள தமிழ்க் குற்றம் எல்லாம்
அராவும் அரம் ஆயிற்று அன்றே இராவணன் மேல்
அம்பு நாட்டு ஆழ்வான் அடி பணியும் ஆதித்தன்
கம்ப நாட்டு ஆழ்வான் கவி

பொருள்:
தராதலத்தின் உள்ள தமிழ்க் குற்றம் எல்லாம் : (இந்த உலகில் தமிழ் மேல் பட்ட களங்கம் எல்லாம்; தராதலம்: உலகம்)
அராவும் அரம் ஆயிற்று (அழிக்கின்ற, விழுங்குகின்ற பாம்பாகியது; அராவும்: விழுங்கும், அழிக்கும்; அரம்: பாம்பு)
அன்றே இராவணன் மேல் அம்பு நாட்டு ஆழ்வான் (அன்று இராவணனை அம்பு தொடுத்து வதம் செய்து நம்மை எல்லாம் ஆண்டு கொண்டிருக்கின்ற இராம பிரான்)
அடி பணியும் ஆதித்தன் கம்ப நாட்டு ஆழ்வான் கவி (இராமரின் திருவடிகளை பணிபவரும், சூரியனை ஒத்தவரும், கம்ப நாட்டில் தோன்றியதால் கம்பர் என்று அழைக்கப்பட்டவரும், திருமாலின் அடியவர்களான ஆழ்வார்கள் போன்றவருமான கவிப்பெருமானின் கவி; ஆதித்தன்: சூரியன்; ஆழ்வான்: திருமால் நினைப்பில் ஆழ்வான், ஆழ்வார்கள்)

நோக்கம்:
பாடலாசிரியர் துதி

விளக்கம்:
கம்பர் சூரியன் போன்றவர். அவர் வந்தால் அவரின் ஞானம் இருளை அகற்றும் சூரியன் போல் அறியாமையை அகற்றும். அதனால் சூரியனை ஒத்தவர். ஒத்தவர் என்றால் நிகரானவர், சமமானவர் என்று பொருள். அவரே சூரியன் என்றால் அவரது கவி? அவரது கவி தமிழ் மேல் இல்லாததும் பொல்லாததும் சொல்லி தூற்றி களங்கம் செய்து வருபவர்களின் அறியாமையை போக்கியும், தன் மேல் இட்ட களங்கத்தை அழித்தும் தழைத்தோங்கி நிற்குமாம்! எப்படி நிற்கும்? எப்படி பாம்பு தனது உணவினை கவ்வி பிடித்து விழுங்குமோ அப்படி 'லபக்' என்று விழுங்கி விடுமாம் கண் மூடி கண் திறப்பதற்குள்! கம்பர் கம்ப நாட்டில் தோன்றியதால் கம்பர் என்று அழைக்க படுவதாகவும் பாடல் உணர்த்துகிறது! இந்த கம்பர் இராவண வதம் செய்த ஸ்ரீ இராம பிரானை வணங்குபவர், ஸ்ரீ இராமபிரான் நம்மை எல்லாம் ஆள்பவர் என்று திண்ணமாக உணர்பவர்! திருமாலின் பக்தியிலும், அவர் மேல் போற்றி பாடும் கவிதைகளிலும் ஆழ்ந்து இருப்பதால் இவரும் ஒரு வகை ஆழ்வாரே!

பாம்பு விழுங்குவது போல் சட்டென பொய்மைகளை விழுங்கும் கவி என்றால் அது தீயர்களை உடல் ரீதியாக விழுங்கி காய படுத்தும் என்பதல்ல பொருள். மாறாக அவரின் சிற்றறிவுக்கு எட்டும் வகையில் புரியாத பொருளினையும் புரிய வைத்து அவர் செய்த அறிவீன செயல்களை அவரே வெட்கப்படும் வகையில் உணர்த்திக் காட்டி அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமே இல்லாத நிலையை எடுத்துக்காட்டி விடுமாம். இப்படியும் தமிழை பாடலாமா? இப்படியும் தமிழில் கவிகள் உண்டா? இப்படிப்பட்ட தமிழையா குறைக் கூறினோம்? நம் குறைகள் நமக்கே நியாயமாக பட வில்லையே என்று அவர் வருந்தும் அளவிற்கு செய்து விடுமாம் இந்த ஆதவனாகிய கம்பனின் எழுத்துகள்!

வீட்டுப்பாடம்:
இப்போதைக்கு இல்லை!

No comments:

Post a Comment