Saturday 16 June 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 3


காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 3
பாடல்:



பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான
வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலைதன்னை
மொய்த்த கொந்து அளக பார முகிழ் முலைத் தவளமேனி
மைத்தகு கருங் கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வோம் 

பொருள்:
பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான வித்தகம் தரித்த செங்கை (புத்தகத்தையும், படிகமணியிலான மாலையையும், கரகத்தையும், ஞானம் புகட்டுவதை நோக்கமாக கொண்ட சின் முத்திரையையும் பெற்றவளும்)
விமலையை அமலைதன்னை (உடற்குறை அற்றவளும், மனக்குறை அற்றவளும் ஆன அவளை)
 மொய்த்த கொந்து அளக பார முகிழ் முலைத் (நெருங்கிய பூங்கொத்துகள் தொகுதியை நிகர்த்த தாமரை மொட்டுப்போன்ற முலைகளையும்/மார்பகங்களையும்)
 தவளமேனி (வெண்ணிறமான திருமேனியையும்)
மைத்தகு கருங் கண் செவ்வாய் அணங்கினை (மை பூசப்பட்ட கரிய கண்களையும்-சிவந்த வாயினையும் உடையவளுமான கலைமகள் என்னும் சரஸ்வதியை)
வணங்கல் செய்வோம் (வணங்குவோம்)

நோக்கம்:
கல்விக்கும், கவிக்கும் தெய்வமான சரஸ்வதியை துதித்தல்


விளக்கம்:
சரஸ்வதி அன்னையானவள் நான்கு கைகளை உடையவள்! இடப்பக்கம் கீழே உள்ள கையில் புத்தகத்தையும், வலப்பக்கம் மேலே உள்ள கையில் படிகமணியிலான மாலையையும், இடப்பக்கம் மேலே உள்ள கையில் கரகத்தையும், வலப்பக்கம் கீழே உள்ள கையில் ஞானம் புகட்டுவதை நோக்கமாக கொண்ட சின் முத்திரையையும் பெற்றவள். படிக மணி என்பது கண்ணாடி போன்ற தெளிவான உருண்டையான சிறு சிறு கற்களால் தொடுக்கப் பட்ட ஜப மாலை. கரகம் என்பது கும்பம். ஒரு உலோக பானையில் பச்சை கற்பூரம் கரைத்த தண்ணீர் நிறைத்து அதன் மேல் மாவிலை வைத்து ஒரு தேங்காயை வைத்து தற்காலத்தில் கும்பம் செய்வர். சின் முத்திரை என்பது கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் நுனியில் சேர்த்து, மற்ற மூன்று விரல்களையும்  நீட்டி வைத்திருத்தலே ஆகும்! சரஸ்வதி மாதா அனைத்து ஞானத்திற்கும் அதிபதி அல்லவா! ஒரு உடலுக்கும் மனதிற்கும் என்னென்ன கூறுகள் வைத்து படைக்க வேண்டும் என்பதை பிரம்ம தேவர் சரஸ்வதி தேவி வைத்திருக்கும் நியதியை வைத்தே படைக்கிறார்! அப்போது அந்த நியதிகளை இயற்றுபவளான சரஸ்வதி மாத எப்படி தனது விதிகளை தானே மீறி குறையுற்று இருப்பாள்? அதனால் அவள் உடற்குறை அற்றவளும், மனக்குறை அற்றவளும் ஆகவே இருக்கிறாள்! நெருக்கமாக நெய்ய பட்ட பூக்களை கொண்ட பூங்கொத்துகள் எப்படி பெரிதாகவும் அதே சமயம் மென்மையாகவும் இருக்குமோ அதை போன்றே அவளின் முலைகள்/மார்பகங்கள் அமைய பெற்றுள்ளன! (இந்த மார்பக வர்ணனையில் எனக்கு அவ்வளவாக உடன்பாடு ஏற்படவில்லை. அனால் என்ன செய்ய? ஒவ்வொரு கவிஞனும் அது தெய்வத்தையே பற்றி பாடுவதானாலும் பெண் என்றால் அவள் சிறந்த பெரிய மென்மையான முலைகளை கொண்டவளாகவே வர்ணனை செய்கிறான்! அபிராமி பட்டர் தனது அபிராமி அந்தாதியிலும், சங்கரர் தனது சௌந்தர்ய லஹரியிலும், ஏனைய பலர் தங்கள் தேவி பாசுரங்களில் இப்படி பலவாறாக அம்மையின் முலைகளை பற்றி வர்ணிக்கின்றனர். கண்டிப்பாக அது ஒரு பிள்ளை தனது தாயின் பால் அமுதம் சுரக்கும் அமுத குடங்கள் என்ற நினைப்பில் வந்த வர்ணனைகள் தான் என்றாலும், இந்த வகை  வர்ணனைகள் கொஞ்சம் மிகையாகவே படுகிறது. எனது பதிவுகள் அந்த வர்ணனைகளுக்கு அதிக முக்கித்துவமும், ஆரய்ச்ச்சியும் கொடுக்காமலே இருக்கும். ஆதலால் நாம் ஒரு பெண்ணை பற்றி பொது இடங்களில் பேசாத வர்ணனைகளை கழித்து மற்ற கவி நயங்களை முக்கியத்துவ படுத்தி மேலே படிப்போம்!)
சரஸ்வதி தேவி வெண்ணிறமான திருமேனியை உடையவள்! ஞானத்தின் சொரூபமாய் அம்மை விளங்கும் போது அது தெளிவான, பரிசுத்தமான, அப்பழுக்கற்ற செல்வம் என்பதை வெளிபடுத்தும் வகையில், சரஸ்வதியாக இருக்கும் பொது அம்மை வெளிர் திருமேனியையும், வெளிர் ஆடையையும் கொண்டவளாக இருக்கிறாள். இப்படி வெளிர் திருமேனியை கொண்டவளுக்கு மை பூசிய கரிய வண்ண கண்களும், செக்கச் சிவந்த இதழ்களும் இருந்தால் எப்படி இருக்கும்? மிக அழகானவளான ஒரு தோற்றம் கொண்டவளாக சரஸ்வதி தேவி இருப்பாள். அப்படிப்பட்ட சரஸ்வதி தேவியை நாம் வணங்குவோம் அருள் பெறுவோம்!

வீட்டு பாடம்: சரஸ்வதி தேவி கல்விக்கு அதிபதி அதனால் கவி படிக்கும் முன் அவளுக்கு துதி வைத்துள்ளனர் இராமாயண அன்பர்கள் என்று நீங்கள் நினைத்தால், அது மட்டும் இல்லை, அதற்கு மேலும் ஒரு காரணம் இந்த பாடல் அமைய பெற்றமைக்கு உண்டு! என்ன அது? கருத்தை எழுதுங்கள்!

No comments:

Post a Comment