Saturday 16 June 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 6


காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 6


பாடல்:
அம்பு அரா அணி சடை அரண் அயன் முதல்
உம்பரால் முனிவரால் யோகரால் உயர்
இம்பரால் பிணிக்க அரும் இராம வேழம் சேர்
கம்பர் ஆம் புலவரைக் கருத்து இருத்துவோம்


நோக்கம்: நூலாசிரியர் பெருமை, நூலின் பெருமை 

பொருள்:
அம்பு அரா அணி சடை அரண் அயன் முதல் உம்பரால் (கங்கையையும், பாம்பினையும் அணிந்த சடையை உடைய சிவன், பிரமன் முதலான தேவர்கள்)
முனிவரால் யோகரால் உயர் இம்பரால் (முனிவர்கள், சித்தர்கள், உயர்ந்த இந்த உலகத்து மனிதர்கள்)
பிணிக்க அரும் இராம வேழம்  (இவர்கள் யாரும் மனத்தில் கட்டி அடக்க கூடியதற்கு அரிதான இராமன் என்னும் யானையை)
சேர் கம்பர் ஆம் புலவரைக் கருத்து இருத்துவோம் (தம் மனத்தில் சேர்த்துக் கட்டிய கம்பர் என்னும் புகழ் வாய்ந்த பெரும் புலவரை மனத்தில் வணங்கி நிறுத்துவோம்)

விளக்கம்:
நீங்கள் படிக்க இருக்கும் காப்பியத்தின் ஆசிரியர் எத்தகு தன்மையர் தெரியுமா? என்ற வகையறாவை சேர்ந்தது இந்த பாடல். இராம பிரான் சிவனையும், பிரமரையும் விட பெரியவர். அவர் முனிவராலும், சித்தர்களாலும், இந்த மாப்பெரும் உலகத்தினராலும் வணங்கப்பெற்றவர். அப்படிப்பட்டவர் யார் மனதிற்கும் வசப்படாதவர். அவர் கம்பரின் மனத்திற்கு மட்டும் ஒரு காட்டு யானை பாகனிடம் தன் தேவை உணர்ந்து அடங்கி ஒத்துழைப்பது போல் கட்டுபட்டு கம்பரின் உணர்வுக்கு ஏற்புடயவராக இருக்கிறாராம். ஏனென்றால் உலகம் போற்றும் இராமகாதையை கொடுக்க கம்பரை அல்லவோ இராமர் ஏவியுள்ளார்! இவை இல்லையேல் இராமாவதாரம் என்னும் தெய்வ பிறவி யார் கட்டுக்குள்ளும் அடங்க முடியாத ஒரு பிரவாகம் எடுத்து ஓடும் காட்டாறு ஆகும். அவரை மனத்தால் கூட யாரும் கட்டுக்குள் வைத்து விட முடியாது. அது தெய்வ பிறவிகள் ஆனாலும் சரி, தேவ பிறவிகள் ஆனாலும் சரி, மானிடர்கள் ஆனாலும் சரி! அனால் கம்பர் என்னும் திறமை வாய்ந்த புலவருக்கு மட்டும் அந்த அரும்பெரும் பாக்கியம் கிட்டியுள்ளது. இராமராக வந்து அவர் மனத்தில் குடியமர்ந்தாலும், அவரது மாட்சிமையை தாங்கும் ஒரு பண்பட்ட புலவராலேயே அவரது பெருமைகளை உணர முடியும் அந்த வகையில் பார்த்தால் கம்பரும் ஒரு பெருமைக்குரியவராகிறார். அப்படிப்படட் பெருமை வாய்ந்த கம்பர் நமது கடினமான தமிழ் கற்கும் பயணத்தில் துணை நின்று நம்மை தெளிவு படுத்துவார். அதற்காக அவரை மனத்தில் இருத்தி வணங்கிடுவோம்





வீட்டுப்பாடம்:

இந்த நூலிலும் சரி, மற்ற பிற நூல்களிலும் சரி அந்த நூலின் தலைவன் (இராமர் இந்த நூலில்) தான் முழு முதல் கடவுள் மற்ற இறைவர்களும், இறைவியர்களும் அவர் தாள் பணிபவர்கள் என்ற கருத்து பரவலாக கூறப்பட்டுள்ளது. சைவ சமய நூல்களிலே சிவப்பெருமானே முழு முதல் கடவுள், திருமாலும், பிரம்ம தேவரும் அவர் கடைக்கண் பார்வைக்கு தவம் புரிகின்றனர் என்றும், வைணவ சமய நூல்களிலோ திருமாலே முழு முதல் கடவுள் மற்ற இரு இறைவர்களும் அவர் பதம் வணங்குகின்றனர் என்றும் வருவதை வெகுவாக காண்கிறோம். அதே போல் சாக்த வழிபாடு முறையிலும் (அம்மனை வழிப்படும் மரபு), கௌமாரம் வழிப்பாடு முறைகளிலும் (முருகரை வழிப்படும் மரபு) மற்ற அனைத்து இறைவர்களும் தேவர்களும் இந்த பிரதான தெய்வத்தின் அருள் வேண்டி வணங்குகின்றனர் என்று பலவாறாக குறிப்பிடப்பட்டுள்ளதை பெருவாறாக காண்கிறோம். இதனால் நாம் நம் இஷ்ட தெய்வத்திற்கு களங்கம் வந்து விட்டது என்றெண்ணி விவாதங்களிலும், வீண் சச்சரவுகளிலும் இறங்கி விடக்  கூடாது. ஒரு நூலின் தலைவனை பறைசாற்றும் போது அவன் மேல் பக்தி பெருகிட உலகத்தின் சக்தி மிகுந்த தெய்வங்களும் அவரது அடியவர்கள் என்று எழுதுவது அந்த நூல் தலைவன் (இராமபிரான்) மேல் நூல் படிப்பவர்க்கு முழு நம்பிக்கை வந்து அவரது பெருமையை உணர்ந்து அவர் சென்ற வாழ்க்கைப் பாதையில் தாமும் சென்றிட வேண்டும் என்பதற்காக. ஆகையினாலே எல்லா தெய்வமும் ஒன்றே, எல்லா மதமும் ஒன்றே, ஒன்றுக்கு இன்னொன்று தாழ்ந்தது இல்லை என்ற என்னத்தை மனத்தில் நாம் ஆழமாக பதித்துக் கொள்வோம். அந்நினைவில் இந்த காப்பியத்தில் நாம் இராமபிரானின் பெருமையை மேலும் படித்து மகிழ்வோம். வைணவ நூற்களில் திருமாலே பிரதான தலைவர் ஆவார். எப்படி சைவ சமயத்தில் சிவன் பிரதான தெய்வமோ, அப்படி. இதை உணர்ந்து திருமாலையும், சிவனையும் ஒரு சேர வணங்குவோம். அருள் பெறுவோம். கருத்துக்களில் இத்தகு விவாதங்களை தவிர்ப்போம்!

No comments:

Post a Comment