Wednesday 20 June 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 11







பாடல்:
அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த
தம்பிரான் என்ன தானும் தமிழிலே தாலை நாட்டி
கம்பநாடு உடைய வள்ளல் கவிச்சக்கரவர்த்தி பார்மேல்
நம்பு பாமாலையாலே நரர் கட்கின் அமுதம் ஈந்தான்


நோக்கம்:
திருமாலின் பெருமை, கம்பரின் பெருமை


பொருள்:
அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்று அமுதம் ஈந்த (தேவர்கள் தம் செல்வங்களை இழந்த அக்காலத்தில் பாற்கடலில் மந்தரமலையை மத்தாக நிறுத்திக் கடைந்து, தேவர்களுக்கு அவர்தம் தலைவன் ஆகிய திருமால் அமுதம் அளித்தான்)
தம்பிரான் என்ன தானும் தமிழிலே தாலை நாட்டி (திருமாலைப் போலே இக்காலத்தில் தமிழ் என்னும் பாற்கடலில்)
கம்பநாடு உடைய வள்ளல் கவிச்சக்கரவர்த்தி பார்மேல் (கம்பநாட்டுகுரிய வள்ளலான கம்பர் என்னும் கவிச் சக்கரவர்த்தி, இவ்வுலகில் மனிதருக்குக் கொடுத்தான்)
நம்பு பாமாலையாலே நரர் கட்கின் அமுதம் ஈந்தான் (கம்பர் தனது நாவினை மத்தாக நிறுத்திக் கடைந்து அனைவரும் விரும்பும் பாக்களால் ஆன மாலையாகிய இராமாயணக் காப்பியம் என்னும் அமுதத்தை இவ்வுலகில் மனிதருக்குக் கொடுத்தான்)

விளக்கம்:
தம்பிரான் என்றால் கடவுள் என்று பொருள். எப்படிப்பட்ட கடவுள் தேவர்கள் தங்களது செல்வம், உடல் பலம், அறிவு வளம், செயல் திறன் எல்லாம் இழந்து நிற்கும் போது மீண்டும் அதை அவர்களுக்கு வழங்கி அது நீங்காது எப்போதும் அவர்களுக்கு வாய்த்திருக்க அருளிய கடவுள். அந்தக் கடவுள் இதற்காக, தான் வாசம் செய்யும் பாற்கடலில் இருந்த உயிர் போற்றும் அமுதத்தை அளிக்க செய்தலானார். தான் வாசம் செய்யும் வீட்டை வழங்கியதோடு இல்லாமல் தானே அந்த பாற்கடலில் ஒரு கூர்மமாக (ஆமையாக) கிடந்து தன் மேல் மந்தர மலை என்னும் தேவ லோகத்து மலையை போட்டு அதை தேவர்கள் மத்தாக உபோயோகிக்க செய்தார். வாசுகி என்னும் பாம்பை மலையை சுற்றி கயிறாக கட்டி ஒருப் பக்கம் தேவர்களும் மறுப்பக்கம் அசுரர்களும் இழுக்கலானார்கள். இதனால் வந்த அமிழ்தத்தை திருமால் தேவர்களுக்கு பங்கிட்டு வழங்கி அருளினார். அப்பெருமான் பாற்கடலில் மலையை மத்தாக செய்து அமுதத்தை கடைந்து அருளினார். நம்பெருமானான கம்பர் தனது தமிழ் என்னும் பாற்கடலில், தனது நாவு என்னும் மதத்தினைக்  கொண்டு கடைந்து இராமாவதாரம் என்னும் அமுதத்தை தமிழ் பாக்களாக தந்துள்ளார். இதில் உள்ள கவி நயத்தை நாம் கற்க வேண்டும். ஏனென்றால் இதை போல பல இடங்களில் இனிவரும் பாக்களில் நாம் பல உவமைகளை பார்ப்போம். உவமை என்றால், ஒப்பிட்டு எடுத்துக்காட்டி சொல்வது என்று பொருள். ஒன்றை நடந்தபடியே விளக்கி விட்டு போகலாம். இல்லை அது எப்படி நடந்தது தெரியுமா? அது போல, இது போல நடந்தது என்று சில சம்பந்தப்பட்ட விஷயங்களை எடுத்துக் கூறி அதையும் இதையும் ஒன்றாக செய்து அதை போல உயர்ந்தது என்றோ தாழ்ந்தது எனவும் கூறலாம். இப்போது எடுத்துக்காட்டாக, "அவன் சோகத்தில் அழுதான்" என்று கூறுவது நடந்ததை நடந்தபடியே விளக்குவது. "அவன் மழை வானத்தில் இருந்து எப்படி 'சோ' வென கொட்டுகிறதோ அப்படி சோகத்தில் கண்ணீர் சிந்தி அழுதான்" என்றுக் கூறுவது சம்பந்தப்பட்ட விஷயங்களை எடுத்துக் கூறி அதையும் இதையும் ஒன்றாக செய்து விளக்குவது. மழையைப் போல அவனும் கண்ணீர் விட்டு அழுதான் என்று அவன் சோகத்தை உயர்த்திக் காட்டி விஷயத்தின் தீவிரத்தை உயர்த்துவது. அதற்காக அவன் மழைப் போலவே அழுதானா? என்றால், இல்லை. மழை நீர் ஊரையே நனைக்கும், கண்ணீர் கன்னத்தை தான் நனைக்கும். ஆனால் சொல்கிற விஷயம் படிப்பவருக்குள் இன்னும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதினால் சிறிது மிகைப்படுத்தி சொல்வது கவிஞர்களின் வழக்கம். இதனால் தான் கவிதைக்கு பொய் அழகு என்கின்றனர். ஏனென்றால் உவமை என்கின்ற இந்தப் பொய்கள் இல்லை என்றால் கவி நயமே இல்லை. இதில் கைத் தேர்ந்தவர் நமது கவிச் சக்கரவர்த்தி கம்பர்.

வீட்டுப்பாடம்:
இப்போது இந்த உவமையை பாருங்கள், நடந்த ஒன்றும், அதற்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படும் ஒன்றும் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது! எப்படி? தம்பிரான் திருமால் (இறைவன் திருமால்) - கவி இறைவன் கம்பர் என்று சம்பந்தப்படுத்தி, பாற்கடல் - தமிழ் மொழி இரண்டும் ஒன்று என்றும், மந்தரமலை மத்து - கம்பரின் நாவு இரண்டும் ஒன்று என்றும், அமுதம் - கம்பரது இராமக் காதை இரண்டும் ஒன்று என்று விளக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் தமிழ் மொழி பாற்கடல் போல பெரிதும், மதிப்பிற்குரியதும் ஆகும். திருமால் எப்படி பாற்கடலில் வாசம் செய்கிறாரோ அப்படி தமிழ் மொழியில் கம்பர் ஆளுமை செலுத்துகிறார். திருமால் மந்தர மலையை வைத்து அமுதம் தந்தார், கம்பர் தனது நாவை வைத்து இராமக் காதையை தமிழ் பாக்களாக தந்தார்! அதனால் இராமக் காதை அமிழ்தம் போன்று சுவையாகவும் பிணி, மூப்பு, மரணம் இவைகளை அழிக்கும் வல்லமையை பெற்றதாகவும் உள்ளது என்பதே முக்கிய பொருள். இந்த உவமையை நன்றாக படித்து பரிச்சயப் படுத்திக் கொள்ளுங்கள் மக்களே. இது வெறும் இராமாயண அன்பர்களின் உவமை தான் இராமக் காதையில் நுழைந்து விட்டால் கம்பரின் உவமைகள் இன்னும் ஆழமாகவும், புரிதல் தேவைப்படுபவைகளாகவும் இருக்கும். அது தான் வீட்டுப்பாடம்!

No comments:

Post a Comment