Sunday 3 June 2012

கம்பர் மற்றும் காப்பின் சிறப்பு 1


கம்ப இராமாயணம் கம்ப இராமயணமே அல்ல! தெரியமா? கிறுக்குத்தனமாக இருக்கா? கம்பர் அரங்கேற்றிய போது அவர் இந்த காப்பியத்திற்கு பெயரிட்டது என்னவோ இராம அவதாரம், இராமகாதை என இரு பெயர்கள். பின்னே வந்த பாசகார தொண்டர்களும் வைணவ பக்தர்களும் அதை அப்படியே கம்ப இராமாயணம் என்ற (கம்பரது இராமாயணம் = கம்பராமாயணம்) பெயர் இட்டு வழங்கல் ஆயினர். ஆகவே கம்பராமாயணம். கம்பர் இப்போது இருந்திருந்தால் இதை அனுமதிப்பாரோ என்னவோ?
எப்படியோ, கம்ப இராமயணத்தில் முக்கிய பிரிவுகள் காண்டங்கள் எனப்படும். பதினோராயிரம் பாடல்கள் (11,000) கொண்ட காப்பியத்தை ஓர் பிரிவே இல்லாத முழு வடிவமாக தந்தால் எப்படி இரசிப்பது? ம்ம்ம்? வார இதழுக்கு க்ரைம் கதைகள் எழுதும் லோக்கல் கதாசிரியரே chapter, chapter களாக தான் எழுதுகிறார். அதிலும் ஒரு chapter ஐ முடிக்கும்  பொழுது அடுத்த chaapter ஐ  படிக்க தூண்டும் திகிலோடு தான் முடிப்பார், இவர் கவி சக்கரவர்த்தி அல்லவா? தனது படைப்பிற்கு சுவாரசியம் சேர்ப்பது அவருக்கு எப்படி என்று தெரியாதா என்ன? அதனால் பல பிரிவுகளாக பிரித்தே படைத்தார்! ஆகவே காண்டங்கள் இந்த தனி பெரும் காப்பியத்தின் பெரும் பிரிவுகளாகும். அதன் உட்பிரிவு படலம் என்ற பெயரால் அழைக்க படுகிறது!
இப்பொழுது நாம் காண இருப்பது பால காண்டம் ஆகும். பெயருக்கேற்றார் போல் இது பால பருவத்தை பற்றி சொல்லும் பிரிவாகும். இராம, இலக்குமண, பரத, சத்ருகுண சகோதர்களின் சிறு வயது அனுபவங்களை கூறுவது ஆகும். அதற்கு முன்னே, கம்பர் மற்றும் காப்பின் சிறப்பு, பால காணடத்தில் இடம் பெறுகிறது. அதை தான் நாம் இப்போது பார்க்க இருகின்றோம்.


கம்பர் மற்றும் காப்பின் சிறப்பு: 1
பாடல்:
தருகை நீண்ட தயரதன்தான் தரும்
               இரு கை வேழத்து இராகவன்தன் கதை
               திரு கை வேலைத் தரைமிசைச் செப்பிட,
              குருகை நாதன் குறை கழல் காப்பதே.

பொருள்:தருகை (தரும் செய்கை, கொடை தன்மை, இல்லை என்று வரும் வறியவர்க்கு வாரி வழங்கி செழுமை படுத்துதல்) நீண்ட (அதிகமான, மற்ற யாரையும் விட சிறந்த) தயரதன்தான் தரும்(தசரத மன்னனின் தூய தமிழ் பதம் தயரதன்) அத்தகு மன்னன் தரும் (பிறபித்து தரும்) இரு கை வேழத்து (இரண்டு கைகள் உடைய யானையை போலே) இராகவன் தான் கதை (அவ்வாறாக பட்ட இராகவன் என்ற இராம பிரான் அவர்களின் கதை) திரு கை வேலைத் தரைமிசைச் செப்பிட (வேலை: கடல்; தரை: பூமி; மிசை: சூழ்ந்து; கடல் சூழ்ந்த இந்த உலகில் செப்பிட: உரைத்திட) குருகை நாதன் (திருக்குருகூரில் தோன்றிய தலைவராகிய நம்மாழ்வார்) குறை கழல் காப்பதே (ஒலிக்கும்  சிலம்பு அணியபட்டிருக்கும்  திருவடி காக்க வேண்டும்!)


விளக்கம்: நம்மாழ்வாரை பற்றி இந்த பாடல் ஆராயவும் அறியவும் வைக்கிறது. நம் யுகத்தில் பிறந்ததினால் (கலி யுகத்தில்) இவர் நம்மாழ்வார் என்று அழைக்கப்பட்டாரோ என்பது போல், நம்மாழ்வார் சரித்திரம் நமது கவனத்தை  மிக வெகுவாக கவரும் வண்ணம் உள்ளது. பிறந்தது முதல் செயல் எதுவும் செய்யாமல், உணவு உண்ணாமல், உறங்காமல், உணர்ச்சிகள் இல்லாமல் வாழ்ந்து வந்தார் நம்மாழ்வார். மனிதர்கள் உணருதற்கரிய நிலையில் இருந்ததால் இவரை பெற்றோர் துறந்தனர். ஆழ்வார்திருநகரி ஊரில் உள்ள ஆதிநாதர் சந்நிதியில் உள்ள புளியமர பொந்தில் இவர் தனது தெய்வ சிந்தனையில் மூழ்கி கிடக்கிறார். அப்போது மதுர கவி ஆழ்வார் என்றோர் வைணவ பக்தர் ஏதோ மரத்தின் அடியில் நம்மாழ்வார் இருந்து இருந்தாலும், பல மைல்கள் தூரம் தள்ளி அயோத்தியில் இவர் இருந்து இருந்தாலும் நம்மாழ்வாரின் ஞான ஒளி தன்னை கவருவதை உணர்ந்தார். அந்த ஒளி தேடி சென்ற போது நம்மாழ்வாரை வந்து அடைந்தார். அடைந்தவர் நம்மாழ்வார் இறை நிலையே கதி என்று இறப்பதை கண்டு எவ்வாறு அவரை மனித தொடர்புக்கு கொண்டு வருவது என்று எண்ணி "செத்தவன் வயிற்றில் சிறியவன் பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்?" என்ற கேள்வியை எழுப்பினார். ஓர் சாதகன் உண்மையான தேடலில் ஒரு கேள்வியை கேட்கிறான் என்னும் போது அனைத்தும் உணர்ந்த நம்மாழ்வாரால் மௌனமாக இருக்க முடியவில்லை. "அத்தை தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் உரைத்தார். இந்த உரையாடலில் ஒரு பாமரனுக்கு ஒன்றும் விளங்க வியப்பு இல்லை. அனால் அதன் உள்ளர்த்தம் இதுவே, செத்தவன், சாக போகிறவன் எல்லாம் மனிதரையே குறிக்கும். மனிதராக பிறந்த யாவரும் மாய்ந்து போக தான் வேண்டும் உடல் அளவில். அப்படி செத்தவன் (அல்லது சாக போகிறவன்; சக போகிறவன் எல்லாம் ஆழ்வார்களுக்கு ஒரு கணக்கே இல்லை பிறந்த உயிர்கள் எல்லாம் செத்த உயிர்கள் தான் போலும். அது சாகும் வரை ஏன் சாக போகிறவன் என்று சொல்வானேன்? செத்தவனாகவே கடவது என்று நனைத்தார் போலும்!) கருப்பையில் சிறியவன் (ஒரு சிறு கரு) உருவாகி உலகம் வந்தால் அது எத்தை தின்று (அன்றாட உலக வாழ்கை தேவைக்கு என்ன செய்யும்?) எங்கே கிடக்கும்? (கடைசியாக எங்கே போக வேண்டும் என்று இலக்கு வைக்கும்?) இது தான் மதுர கவி ஆழ்வார்  கேள்வியின் உள்ளர்த்தம். நம்மாழ்வாரின் பதிலின் விரிவான பொருள்,"அத்தை தின்று (உலக வாழ்க்கையே மெய் என்று எண்ணி இருந்தால் உலக தேவைகளையே புசித்து கிடக்கும்), அங்கே கிடக்கும் (அல்லது தானும் இந்த உடலும் வேறு வேறு என்பதை உணர்ந்தால், தூய இறை நிலையில் திளைத்து எல்லையில்லாத ஆனந்தத்தில் திளைத்து இருக்கும்)". இப்பொழுது சொல்லுங்கள் நம்மாழ்வார் போற்றலுக்கு உரியவர் தானே, அதுவும் முதல் துதி செய்ய தகுந்தவர் தானே? இந்த நிகழ்வுக்கு பின் அந்த சிறய சிறுவனான நம்மாழ்வாரிடம் பல வயதுகள் மூத்தவரான மதுரகவி ஆழ்வார் சீடராகவே ஆகி விட்டார்!    

வீட்டு பாடம்: நமாழ்வாருக்கும் கம்ப நாடானுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. மேலும், நம்மாழ்வாரை போலவே மாட்சிமை பொருந்திய ஆழ்வார்களும், வைணவர்களும் உள்ள பொழுது, கம்பராமாயண அன்பர்கள் காப்பின் சிறப்பில் நம்மாழ்வாரை வைத்ததிற்கு கம்பருக்கும்  அவருக்கும் உள்ள நெருக்கமே கரணம் என்று நான் கருதுகிறேன்! நிச்சயமாக இருவரும் சம காலத்தவர் இல்லை. அதனால் அது பதில் இல்லை. வேறு பதில்கள்?  

1 comment:

  1. நான் சிறிது நாட்களுக்கு முன்பு புலவர் கீரன் பேசியிருந்த கம்ப இராமாயணம் கேட்டேன். உடனே அவர் அந்த சொற்பொழிவில் கூறியிருக்கும் கம்ப இராமாயண பாடல்களையாவது மனப்பாடம் செய்யலாமே என்ற எண்ணம் தோன்றியது. பாட்டின் பொருள் தெரியாமல் எப்படி மனப்பாடம் செய்வது. ஆக இணையத்தில் தேடினேன் இந்த பதிவு கிடைத்தது. மிக்க நன்றி.

    ReplyDelete