Wednesday 20 June 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 10








பாடல்:
நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற
ஆரணக்கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான்
சீர்அணி  சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன்
கார் அணி கொடையான் கம்பன் தமிழினால் கவிதை செய்தான்

நோக்கம்:
இராமாயணம் கதையின் மூலம், அதை ஆசிரியார் எழுதிய விதம் பற்றிய செய்திகள்

பொருள்:
நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற (திருமாலின் அவதாரமான இராமனின் திருவிளையாடல்கள் அனைத்தும் நாரதமுனிவன் கூற)
ஆரணக்கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான் (அதனைக் கேட்டு வால்மீகி என்னும் முனிவன் வேதத்துக்கு சமமான வடமொழிக் கவிதைகளாக இயற்றினான்)
சீர்அணி  சோழ நாட்டுத் திருவழுந்தூருள் வாழ்வோன் (பின்பு அதை சிறப்புப் பொருந்திய சோழநாட்டுத் திருவழுந்தூர் என்னும் ஊரில் வாழும்)
கார் அணி கொடையான் கம்பன் தமிழினால் கவிதை செய்தான் (மேகம் போல் சிறந்த கொடை அளிக்கும் கம்பன் தமிழ் பாடல்களாக பாடி முடித்தான்)

விளக்கம்:
இந்த மேகம் என்பது எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான நீரை வாரி வாரி வழுங்கிக் கொண்டிருக்கிறது. அப்படி தான் ஈகையும், கொடைத் தன்மையும் இருத்தல் வேண்டுமாம். "நான் உங்களுக்கு நீர் தந்தேன் நீங்கள் எனக்கு என்ன தர போகறீர்கள்?", என்று மேகம் ஒரு போதும் யாரையும் கேட்டதில்லை. மாறாக நமக்கு தேவை இன்றி தேங்கி கிடக்கும் நிலத்தில் உள்ள வெவ்வேறு நீர் நிலைகளில் உள்ள நீரை உறுஞ்சி நமக்கு பயன்படும் வகையில் மழையாக மீண்டும் பொழிகிறது. அதை போல தான் உள்ளவரும் அற்றவருக்கு பணிவன்புடன் பார்த்து பார்த்து அவருக்கு தேவையான பொருட்களை ஈகை செய்து போற்றி பேண வேண்டும். அப்போது தான் உள்ளவர்களுக்கு இல்லாதவற்றை அவர்களுக்கு மேல் உள்ளவர்கள் அதே பணிவன்புடன் ஈகை செய்வர். இந்த உலகமே இவ்வகை ஈகை சேவையை செய்ய ஆரம்பித்தால் நமது உலகம் எவ்வளவு அழகானதாக இருக்கும், இல்லையா? கம்பரும் அதே சிந்தனையில் தான் திருவெண்ணெய்நல்லூரிலே தனது கொடை செய்கைகளில் ஈடுப்பட்டு வந்தார். அப்படிப்பட்டவர் திருமாலின் பல்வேறு திருவிளையாடல்களில் ஒன்றான இராமாவதாரம் என்னும் காதையை தமிழில் பாக்களாகப் பாடி முடித்தார். அது எப்படிப்பட்ட காதை? தேவமுனிவர் நாரதர் சொல்ல வால்மீகி அதை வேதங்கள் இயற்றப்பட்ட, தகுதிவாய்ந்த வடமொழியான சமக்கிருதத்தில் இயற்றினார். அதை படித்து பெரிதும் கவரப்பட்டு தகுதிவாய்ந்த தென்மொழியான தமிழில் கம்பர் தன் இராமக்காதையை இயற்றினார். இது வடமொழி நூலின் தழுவலோ, மொழிமாற்றமோ இல்லை, இதற்கும் வால்மீகியின் நூலுக்கும் உள்ள ஒரே தொடர்பு கம்பர் அதனால் கவரப்பட்டு அந்த முக்கிய கதையை தனது கதைக்களமாகவும் கொண்டுள்ளார் என்பதே!

வீட்டுப்பாடம்:
வால்மீகி இராமாயணத்திற்கும் கம்பரது இராமாவதாரத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளனவா? இருந்தால் அவை என்னென்ன

No comments:

Post a Comment