Tuesday 11 January 2022

பால காண்டம், ஆற்றுப் படலம் - பாடல்: 14

 கம்பராமாயணம் 

ஆற்றுப்படலம் 

மேகம் பரந்து மழை பொழிதல் 

பாடல் 16 


நீறு அணிந்த கடவுள் நிறுத்த வான் 

ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து அகில் 

சேறு அணிந்த முலைத் திருமங்கைதன் 

வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே


நோக்கம்: 

அயோதியில் எவ்வாறு மேகங்கள் தவறாது பொழிந்தன என்பதை எடுத்து கூறும் பாடல் 


பொருள்: 

நீறு அணிந்த கடவுள் நிறுத்த வான் - 

மேகங்கள் சிவபெருமான் பூசிய திருநீரை ஒற்றிய வெண்மை நிறத்தை கொண்டு நிற்கின்றன 


ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து  -

அதே மேகங்கள் தம் சென்ற வழியெல்லாம் அழகு படுத்திக் கொண்டே சென்று கடல் நீரை குடிக்கின்றன


அகில் சேறு அணிந்த முலைத் திருமங்கைதன் -

 சந்தனக் குழம்பை தனது மார்பகங்களில் பூசி திகழ்கின்ற மகாலட்சுமி தாயார்


வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே -

 அப்படிப்பட்ட மணம் திகழ்ந்த மகாலட்சுமி தாயார் என்னும் மங்கையை தனது மார்பினால் பெருமைக்குரிய அடையாளமாக அணிந்திருக்கும் திருமால் என்னும் பெருமாள் அவரது மேனியின் நிறம் கருப்பு. அந்தக் கரிய திருமாலின் மேனி நிறத்தை போல மேகங்கள் கடல்நீரைக் குடித்து மீண்டும் நிலத்திற்கு திரும்பின


விளக்கம்:

 மேகங்களின் பயணங்களை எவ்வளவு அழகாக இந்த பாடலில் கூறியிருக்கிறார் பாடலின் ஆசிரியர் கம்பநாடர் பாருங்கள்! அறிவியலை தமிழ் பாடலில் கருத்தாக வைத்து கவிநயத்தையும் புகுத்தி அதை ஒரு சுவாரசியமான ஒரு தகவலாக கம்பன் தனது ராம காதை என்னும் இந்த நூலில் மிக எளிதாக மேகங்களின் செயல்பாடுகளை நமக்கு விளக்கி இருக்கிறார்.  இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம் மேகங்கள் நிலத்தின் மேல் பரப்பில் வானத்தில் உலாவும்போது அடர்த்தி இல்லாமல் வெள்ளை நிறத்திலும் கணம் இல்லாமலும் உலாவுகின்றன.  இந்த மேகங்களின் இயல்பு என்ன? அவைகள் கடலை நோக்கி பயணம் செய்யும் இயல்பைக் கொண்டவை. அப்படி பயணம் செய்யும் மேகங்கள் கடலின் மேல் வான் பரப்பில் உலாவும்போது சும்மா இருப்பது இல்லை. கடலில் இருந்து நீரை ஆவி மூலமாக உறிஞ்சி தன்னுள் இந்த மேகங்கள் சேர்த்துக் கொள்கின்றன. இதன் மூலமாக இந்த மேகங்களின் எடை அதிகரிக்கின்றது. அது மட்டுமல்லாமல் இந்த மேகங்கள் இயல்பிலேயே வெள்ளை நிறத்தில் இருந்தாலும் கடல் நீரை ஆவியாக்கி உறிஞ்சி தன்னுள் ஏற்றுக் கொண்டுள்ளதால் அவை கருமை நிறமாக மாறி விடுகின்றன.

 இந்த மேகங்களின் வெண்மை நிறம் சிவபெருமானின் திருநீறு அணிந்த மேனியை குறிக்கின்றது. அதே மேகங்கள் கடலுக்குச் சென்று அதன் வான்பரப்பில் அதன் நீரை உறிஞ்சி தன்னுள்ளே அடக்கி கருமை நிறம் அடையும் போது அந்த நிறத்தை பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமால் என்னும் பெருமாளின் மேனி ஆன நிறம் கருமை நிறத்தை ஒத்ததாக இருக்கிறது என்று ஆசிரியர் நூலில் குறிப்பிடுகிறார். இதே மேகங்கள் கருமை நிறத்துடன் நிலப்பரப்பிற்கு வந்து மழையாக பொழிந்து வளத்தை கொழிக்க நீரை சொரிந்த பின்பு வெண்மை நிறம் அடைந்து விடுகின்றது. வெண்மை மேகங்கள் நிலப்பரப்பில் இருந்து நகர்ந்து சென்று கடலில் போய் கருமை நிறம் அடைந்து மீண்டும் நிலப்பரப்பிற்கு வந்து விழுந்து மீண்டும் வெண்மை நிறம் ஆகும் போது ஒரு சுழற்சி முடிகிறது. 

இந்த நிகழ்வை மேகங்களின் ஒரு ஆயுட்காலம் என்று கூறலாம் அப்படி ஒரு ஆயுள் காலம் முடிந்து வெண்மை நிறம் அடையும் போது அது சிவபெருமானின் வெண்மை நிறத்தை ஒத்த ஒரு தன்மையை அடைகின்றது.  சிவபெருமானோ மரணத்தில் கருணை பொழியும் கடவுள். மக்கள் மரணத்தில் நற்கதி அடைய வேண்டும் என்பதற்காகவே சிவபெருமான் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். மேகங்களும் மழை நீரை பொழிந்த பின்பு மரணத்தை தழுவுகின்றன. மரண கட்டத்தில் இருக்கும் மேகங்கள் தாங்கள் நற்கதி அடைய சிவபெருமானின் அருளை வேண்டுகின்றன. சிவபெருமானும் தன்னிடம் தஞ்சம் புகுந்த மேகங்களை அருள்பாலித்து அரவணைத்துக் கொள்கிறார் அதனால் அந்த மேகங்கள் சிவபெருமானின் திருநீறு அணிந்த உடம்பு எவ்வாறு வெண்மையாக இருக்கிறதோ அப்படி வெண்மையாக நிறம் மாறிவிட்டன.  பிறப்பு இறப்பு பிறகு மீண்டும் பிறப்பு என்னும் சுழற்சியின் படி தன்னுள் தஞ்சம் புகுந்த மேகங்கள் மீண்டும் பிறப்பு என்னும் அடுத்த கட்டத்திற்குப் போகும் பொருட்டு சிவபெருமான் அந்த மேகங்களை கடலுக்கு நகர பணிக்கிறார். அங்கே மேகங்கள் தனது உணவான கடல் நீரை நன்றாக உண்டு கொள்கின்றன கொழுக்கின்றன. இவ்வாறு மேகங்கள் செழுமையாக கடல் நீரின் வான்பரப்பில் இருப்பதை சந்தனத்தை தனது மார்பகங்களில் பூசிய மணமிக்க மகாலட்சுமி தாயார் எவ்வாறு செல்வ செழிப்புக்கு உண்டான தேவியாக இருக்கிறாரோ அதை வைத்து மேகங்களும் செழுமையாக இருப்பதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.   கடலைத் தேடி சென்ற சில மேகங்கள் கடலை வந்து அடையாமல் பாதியிலேயே மடிந்து விடுகின்றன. அவ்வாறு இல்லாமல் கடலில் வெற்றிகரமாக வந்து அடைந்த மேகங்கள் கடலை தங்களது உணவாக உண்டு மடிந்து விடாமல் வாழ்கின்றன. இவ்வாறு கடலுக்கு வெற்றிகரமாக வந்த மேகங்கள் காக்கும் தொழிலை கொண்ட பெருமான் திருமாலின் அருளும் அரவணைப்பும் இருந்ததுனாலேயே கடல் வரை வந்து கடலை உணவாக உண்ண முடிந்தது. அவ்வாறு திருமால் தனது அருளால் இந்த மேகங்களை அனைத்து கொண்டதால் இந்த மேகங்கள் திருமாலின் கருமை நிறத்தை அடைந்தன.  திருமாலின் அரவணைப்பு கிடைக்கப் பெற்றதால் திருமாலின் திருமார்பில் உள்ள சந்தனம் பூசிய மணம் வீசும் திருமேனியை உடைய மகாலட்சுமி தாயாரும் தானாகவே இந்த மேகங்களுக்கு செல்வச் செழிப்பினை அருள் செய்கிறாள். 

வாழும்போது இந்த மேகங்கள் திருமாலும் திருமாலின் திருமார்பில் சந்தனம் பூசிய மணம் வீசும் மகாலட்சுமி தாயாரும் அரவணைக்க அவர்களின் கருமை நிறத்தை தன்னுள் ஏற்றுக் கொண்டு வாழ்கின்றனர்.  மக்களுக்கு செழிப்பான மழை நீர் வழங்குதல் என்னும் தங்கள் உலக கடமை முடிந்த பின்பு, மரணத்தில் நற்கதி வழங்கும் சிவபெருமானின் அரவணைப்பில் வந்து சிவபெருமானின் திருநீறணிந்த வெண் நிற மேனியை தங்களது நிறமாக ஏற்றுக்கொள்கின்றன.








வீட்டு பாடம்

இந்த பாடல் பார்த்தீங்கன்னா ஒரு நல்ல அழகான அறிவியல் சித்தாந்தத்தை ஒரு எதார்த்தமான ஒரு அழகான கவிநயத்தில மொழிப் புலமையோடு ஒரு தமிழ் புலமைக்கு ஆன படைப்பில ஆசிரியர் புகுத்தியிருக்கிறார். நம்ம பாடத்திட்டத்தில் இந்த மாதிரி படிச்சிருந்தா நமக்கு எவ்வளவு நல்லா மனசுல பதிஞ்சு இருக்கும். அதுதான் இந்தப் பாடலுக்கு உண்டான வீட்டுப்பாடம். நீங்க எந்த சங்கத் தமிழ் பாடலாக இருந்தாலும் பழமையான தமிழ் பாடலாக இருந்தாலும் ஆன்மிகம் சம்பந்தமான தமிழ் பாடலாக இருந்தாலும் அதை எடுத்து பாத்தா அதுல இன்னிக்கி அறிவியல் சமூகம் மண்டையைப் போட்டு பிச்சுகிட்டு கண்டுபிடிக்கிற இல்லை கண்டுபிடித்து கொண்டு இருக்கிற சில விஷயங்களை மிக சாதாரணமாக அப்படி மேம்போக்காக தெளித்து அப்படியே பாடலை அவங்க தொடர்ந்து எடுத்துட்டு போய் இருப்பாங்க. ஆழமான ஒரு தகவலை தெளிவாகவும் சுருக்கமாகவும் ஒரு உவமையில் மிக எளிமையாக சொல்லும் அந்த அழகு. நமக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம். தமிழ் தெரிந்த நமக்கே உண்டான ஒரு வரப்பிரசாதம் இந்த மாதிரி தகவலை நாம மட்டும்தான் படிச்சு புரிஞ்சிக்க முடியும். பகுத்தறிவு, புண்ணாக்கு அறிவு என்று கூறிக்கொண்டு இந்த அரிய வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்! 

Tuesday 27 May 2014

பால காண்டம், ஆற்றுப் படலம் - பாடல்: 13


                                                முன்பே கூறியதைப் போல இராமக்காதை ஆறு பெரும் பிரிவுகளான காண்டங்களாகவும், அதன் உட்பிரிவு பல்வேறு படலங்களாகவும் வழங்கப்பட்டுள்ளது. இராமக்காதையின் அறுப்பெரும் காண்டங்கள் இவையே 1. பால காண்டம், 2. அயோத்திய காண்டம், 3. ஆரண்ய காண்டம், 4. கிஷ்கிந்தா காண்டம், 5. சுந்தர காண்டம், 6. யுத்த காண்டம். இதில் ஒவ்வொரு காண்டங்களுமே பல நூறு செய்யுள்களைக் கொண்டுள்ளதாலும், எல்லா செய்யுள்களும் ஒரே கருத்தையோ, ஒரே கதை நிகழ்வையோ சொல்லாததால் குழு குழுவாக செய்யுள்களை குவித்து அவை எந்தக் கருத்தையோ, கதை நிகழ்வையோ உரைக்கின்றதோ அதையே அந்த பிரிவின் பெயராக வைத்துவிட்டார் கம்பர். முதலில் நாம் காண இருக்கின்றது பால காண்டத்தின் ஆற்றுப் படலம் ஆகும். இதில் நான்கு செய்யுள்கள் உள்ளது. இனி நாம் கம்பரின் எண்ண ஓட்டத்தின் படியே நம் பதிவுகளில் பெரும் பிரிவாக காண்டங்களையும், சிறு பிரிவுகளாக படலங்களையும் கருத்தில் வைப்போம்.




பாடல் 13:






ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்
காசு அலம்பு முலையவர் கண் எனும்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்.




நோக்கம்:

சராயு நதியின் பெருமைகளையும், மகத்துவங்களையும் எடுத்துரைத்தல். குறிப்பாக, சராயு நதி எத்தகைய நாட்டினை சார்ந்தது என்பதை இப்பாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.



பொருள்:

ஆசலம் புரி ஐம் பொறி வாளியும்
                    - குற்றத்தை மிகுந்து செய்வதும், அம்பினைப் போன்றதுமான ஆடவர்களின் ஐம்பொறிகள்

 காசு அலம்பு முலையவர் கண் எனும்
                            - மணிகளும், காசு வகை மாலைகளும் தரித்ததால் அவை ஒன்றோடு ஒன்று முட்டி மோதி கலகலவென்று ஓசைகளை ஏற்படுத்துகின்றன. அப்படிபட்ட அணிகலன்களை அணிந்த மார்புகளை உடைய பெண்கள்
பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக் 
                                 - அத்தகைய பெண்களின் கண்களும் போரில் செலுத்தும் அம்பு போன்றது. இந்த இரு அம்புகளும் ஒழுக்க நெறிக்குப் புறம்பாக என்றும் செல்லாத
கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்.
                                 - கோசலை நாட்டை அழகுப் படுத்தும் நதியின் அழகினை பின்வரும் பாடல்களில் மேலும் எடுத்து உரைக்கப்படும்.


விளக்கம்:

ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமென்றால் அதன் மக்கள் முதலில் நன்றாக இருக்க வேண்டும். தெருவிலே நடக்க முடியாமலும், தடியெடுத்தவனுக்கு பயந்த படியும் ஒரு நாட்டின் மக்கள் வாழ்ந்தார்களே ஆனால் அந்த நாட்டின் அரசன் ஆட்சி செய்யவில்லை என்றே அர்த்தம். மக்களுக்கு ஒழுக்கமும் தர்மமும் அறமும் நாட்டின் மன்னன் முன்மாதிரியாய் இருந்து எடுத்துக்காட்ட வேண்டும்.மக்களை பல்வேறு விதமாக பிரிக்க இயலும் என்றாலும் மிகவும் எளிதிலும் எடுத்துக்காட்டுக்கு  வசதியானதும் பால் வகை பிரித்தல் ஆகும்.

நாட்டு மக்களை ஆண்கள் பெண்கள் என்று இரண்டு பிரிவாக பிரித்தால், ஆண்களுக்கு பெண்களால் என்ன ஆபத்து ஏற்படும்? பெண்களுக்கு ஆண்களால் என்ன ஆபத்து ஏற்படும்? மற்றும் இரு பாலினரும் தங்களுக்குள்ளே தங்கள் பாலினத்தினர் இடையே என்னென்ன வகையில் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்துகின்றனர்?

ஆண்கள் தாங்கள் தான் உயர்ந்த பாலினம் என்ற மிதப்பில் பெண்களை போகப் பொருளாக நடப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். இதற்கு காரணம் அவர்கள் தங்கள் ஐம்பொறிகளான கண், மூக்கு, வாய், செவி, தோல் இவற்றின் மூலம் பல்வேறு விதமாக எதிர் பாலினமான பெண்களை ஊர்ந்து கவனித்து மனதிற்குள் எல்லைமீறும் உணர்வுகளை வளர்த்து ஒரு வில்லில் இருந்து புறப்பட்ட கொடிய அம்பு எப்படி அதன் இலக்கை தைக்கிறதோ அப்படி பெண்களை தங்கள் ஐம்பொறிகளின் மூலம் ஏற்படும் தீய எண்ணங்களால் ஆண்கள் அம்பு போன்று புண்படுத்தி சேதப்படுத்துகின்றனர். ஆண்கள் பெண்களுக்கு இழைக்கும் கொடுமைகள் பெரும்பாலும் பாலினம் சார்ந்ததாகவும், பாலின உணர்வு சார்ந்ததாகவுமே இருக்கின்றது.

சில பெண்களின் ஆண்களை தன் அழகால் கவர முயற்சிக்கும்  செயல், பெண்கள் ஒருவகையில் தாங்கள் உயர்ந்த பாலினம் இல்லை என்பதை தாங்களாகவே மறைமுகமாக ஒத்துக் கொள்வது போல இருக்கின்றது. இதனால் தான் பெண்கள் பல சமயங்களில் தாங்கள் அழகு என்பதை நிருபிக்க பல வகை அழகு ஒப்பனைகளையும் உபயோகப்படுத்துகின்றனர். அதன் அடிப்படையில் ஆடவர் மனம் கவர பெண்கள் தங்கள் மேல் சரீரத்தில் இரத்தின மாலைகளை அணிந்து தங்களது வசீகரமான முலைகள் அந்த இரத்தின மாலைகளை ஒன்றோடு ஒன்று உரசவிட்டு ஓசைகளை எழுப்புபவர்களாக உள்ளனர். அப்படி பட்ட பெண்டீர் கண்களும் போர் புரியும் அம்பு போல மிகவும் ஊடுறுவி பாயும் வகையிலும், சொல்லொணா வகையில் தாக்குதல் நடத்தும் வகையிலும் உள்ளன. 

ஆக, சபல மனம் இயற்கையிலேயே படைத்த ஆடவரின் ஐம்புலன்களும் அம்புகள் என கொண்டு; இன்னொரு புறம் ஆடவரை கவர பெண்கள் கண்களால் நடத்தும் ரகசிய சம்பாஷணைகளும் அம்புகள் என கொண்டு; இப்படி இரு பாலினத்தினரும் அம்புகள் தன்னகத்தே கொண்டிருந்தாலும், அந்த அம்புகள் எல்லை மீறுவது சராயு ஆறு பாயும் கோசலை நாட்டில் நிகழ்வது கிடையாது! 

எல்லை மீறுதல் என்பது எதற்கு ஒப்பாகும் என்றால் ஷன்மார்கம் ஆகிய - சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கௌமாரம், சௌரம் - இவைகளை துறந்து துன்மார்க்கங்கள் என கருதப்படும் மாந்த்ரீக வழிபாடோ, இல்லை போலியான மாயைகளை வழிபடுவதுலோ கடைபிடித்தலுக்கு ஒப்பாகும்! மதமாற்றத்தை அன்றே கம்பநாடார் எதிர்த்துள்ளனர், எச்சரித்துள்ளார்! 

இப்படிப்பட்ட பெருமைமிகு ஆண்களும் பெண்களும் வாழும் ஸராயு நதி கோசல நாட்டை  எப்படி எல்லாம் அழகுற செய்கிறது என்பதை பார்ப்போம்! என்கிறார் கம்பர் இந்த பாடலில்!







வீட்டுப்பாடம்:
இதில் இருந்து என்ன தெரிகிறது?

1. மதமாற்றம் என்ற பெயரில் நடக்கும் கோமாளிக் கூத்துக்களை அன்றே கலைமகளும், சீதா பிராட்டி சமேத இராமச்சந்திர மூர்த்தியும் கம்ப சித்தருக்கு ஞான கண்ணில் உணர்த்தியுள்ளனர், அதை அவர் பாடல் படுத்தியும் உள்ளார்!

2. ஒரு குடியிருப்புக்கு நீர்நிலை எவ்வளவு முக்கியம் என்பது கம்பர் எனும் கவிச்சித்தர் மூலம் நமக்கு உணர்த்தப்படுகிறது! கம்பர் மட்டுமல்ல பல சங்ககால  மற்றும் பழங்கால இலக்கியவாதிகளும் இதை உணர்த்துகின்றனர். இது நமது மண்டையில் ஏறாமல் ஏரிகளையும், ஆறுகளையும் பிளாட்டு போட்டு வீடு கட்டிக்கிட்டு இருக்கோம்! விஜயகாந்த் ஸ்டைலில் சொல்லணும்ன்னா "இது எவ்ளோ கேவலம் தெரியுமா?". திராவிடமும் பகுத்தறிவும் வசதியாக இறை மறுப்பு கொள்கையை கையிலெடுத்தது இந்த காரணத்திற்காக தான்! இந்த லட்சணத்தில் இராமர் வாழ்ந்ததற்கு ஆதாரம் வேற இந்த மூஞ்சிகளுக்கு வேண்டுமாம்!😨😱😰 அவர் எஞ்சினியரிங் படிச்சு முடிச்ச டிப்ளமோ சான்றிதழும் அவசியம் வேண்டுமாம், இல்லையென்றால் இவர்கள் இராமரை அங்கீகரிக்க மாட்டார்களாம்! 😛😜😝