Thursday 19 July 2012

பாடல் 3: பாயிரம்: கடவுள் வாழ்த்து





பாடல்:
ஆதி அந்தம் அரி என யாவையும்
ஓதினார் அலகு இல்லன உள்ளன
வேதம் என்பன மெய்ந் நெறி நோன்மையன்
பாதம் அல்லது பற்றிலர் பற்று இலார்

நோக்கம்:
இறைவனது அடியவர்களாய் எப்படி இருத்தல் வேண்டும் என்பதை பறைசாற்றும் பாடல்

பொருள்:

அரியன  யாவையும்  -  அருமையானவை என்று சொல்லப்படும்  எல்லாத்  துறைகளையும்;
ஆதி  அந்தம்  ஓதினார் - முதல் முதல் முடிவு வரை அனைத்தும் கற்று உணர்ந்தவர்களும்;
அலகு இல்லன  (அலகு) உள்ளன   -  உணரும் பொருளில் அளவு  இல்லாதவையும்   எண்ணிக்கையில் அளவு  உள்ளனவுமாகிய;
வேதம் என்பன   -  வேதங்கள்  என்று சொல்லப்படுவனவும்;  
பற்று   இலார் -  அகப்பற்றும்   புறப்பற்றும் இல்லாதவர்களும்;
மெய்ந்நெறி நன்மையன் - ஞான நெறிக் கனியாகிய இறைவனது;
பாதம்   அல்லது   பற்றிலர்  -  ஆதாரமாகப் வேறு  ஒன்றையும் பற்ற மாட்டார்கள்.

 
விளக்கம்:
                              இறைவனது திருவடியை மட்டுமே கதி என்று சரணடைந்து இருப்பவர்கள், அதே சிந்தனையில் மூழ்கியவர்கள் எத்தகு மேன்மை பொருந்திய மக்கள் என்பதை இந்த பாடலில் உரைத்திருக்கிறார் கம்பர். "அரி என" என்றால் அரிதிலும் அரிதான என்று பொருள். கிடைப்பதற்கும், உணர்வதற்கும் மிக மிக கடினமான ஒன்று அறநூல்கள் சொல்லும் வாழ்க்கை நெறிமுறைகளை அறிந்து வாழ்வது. அந்த நெறிமுறைகளை  அறிந்துக் கொண்டோர் சான்றோர் மக்களாகும். அந்த நெறிமுறைகளை  அறிந்துக்கொண்டு முதல் முதல் முடிவு வரை முன்னும் பின்னும் என எப்படிக் கேட்டாலும் சொல்ல வல்லோர், அதை வாழ்விலும் பின்பற்றுவோர் சான்றோரிலும் சான்றோர் ஆவர். இவர் சான்றோர்கள் என்று ஏன் உரைக்கப்படுகின்றனர் தெரியுமா? ஏனென்றால் இவர் படித்த அறநூல்கள் எல்லாம் "அலகு இல்லன  (அலகு) உள்ளன" என்பதினால். அலகு என்றால் எண்ணிக்கை, வரம்பு, வகை என்று பொருள் கொள்ளலாம். தமிழ் வழி கல்வி படித்திருக்கும் வாசகர்களுக்கு இந்த சொல் புதியது அன்று. Vector என்ற சொல்லை அலகு என்று கூறி கணித பாடத்தில் படித்திருப்பர். இது தமிழில் வெகு பரவலாக வழக்கில் இருந்த சொல்லாகும். இந்த சொல்லில் கம்பர் சிலேடை வைத்து விளையாடி உள்ளார். சிலேடை என்றால் ஒரு பாடலில் ஒரே சொற்களால் ஆன இரு வாக்கியங்களை இரு வேறு பொருட்கள் படுமாறு இயற்றுவது ஆகும். அந்த சொற்களை ஒரு வாக்கியத்தில் ஒரு மாதிரி சேர்த்து, இன்னொரு வாக்கியத்தில் வேறு மாதிரி சேர்த்திருக்கலாம். இப்போது இரு வாக்கியங்களும் ஒரே வாக்கியம் தாம். இரு வாக்கியங்களிலும் ஒரே சொற்கள் தான் உள்ளது. அனால் அந்த சொற்கள் வேறு வேறாக சேர்ந்திருப்பதால் அது வேறு வேறு பொருளை கொடுக்கும். இதை தான் சிலேடை என்று கூறுவர். முத்தான முத்து என்று தமிழில் வணக்கத்திற்கு உகந்த புலவப்பெருமார்கள் மட்டுமே இந்த மாதிரி ஒரு நல்ல சிலேடை இயற்றுவதில் வல்லவர்களாக இருந்திருந்துள்ளனர். அவர்களுள் காளமேகப் புலவர் மிக மிக புகழ்வாய்ந்தவர். காளமேகப்புலவர்  சிலேடை கவிதகைள் எழுதுவதையே வழக்கமாக்கிக் கொண்டவர். அவர் போல் அல்லாமல் கம்பர் சிற்சில இடங்களில் இந்த சிலேடை சிதறல்களை எடுத்து விடுவார். அதில் ஒரு இடம் தான் இந்த அலகு என்ற சொல் அமைந்த பாடல். முதல் அலகு "வகை" என்று கொள்ளலாம்! அறநூல்களின் உள்ளர்த்தங்கள் ஆயிரமாயிரம் கருத்துகளை வெவ்வேறு வகைகளில் சொல்கின்றது. இரண்டாவது அலகு "எண்ணிக்கை" என்று கொள்ளலாம். அனால் அந்த அறநூல்களின் எண்ணிக்கை எண்ணி அளந்துக் கூற கூடியது தான். இப்படிப் பட்ட பெருமை வாய்ந்த அறநூல்களை முதல் மற்றும் முடிவு என எல்லாவற்றையும் கரைத்துக் குடித்தவர் தான் இந்த சான்றோர்கள்.
                     
இப்படிப்பட்ட சான்றோர்கள், வாழ்க்கையின் உண்மையான நெறிமுறைகளை கற்று அறிந்தவர்கள் என்றபடியால் உள்ளத்தில் நிலையில்லாத பொருட்களை பற்றி பற்றினை (ஆசையை) வளர்த்துக் கொள்ளாதவர்களாவர். அதனால் அவர்களுக்கு அகத்திலே (மனத்திலே) புறம் பற்றி (வெளி பொருட்களை பற்றி) ஒரு பற்று (நெருக்கம், ஆசை attachment ) இல்லை. அதனால் அவர்களுக்கு அகப்பற்றும் (உள்ளத்து அசைகள்), புறப்பற்றும் (அந்த ஆசைகளினால் சேர்த்த வெளி உலக பொருட்களான பலவகை ஆடம்பர சொத்துகள்) இல்லை. ஆனால் அவர்களுக்கு பற்றிக் கொள்ள (இறுக்கி பிடித்துக் கொள்ள) கூடிய ஒரே பொருள் உலகத்தில் உண்டென்றால், அது "மெய்ந் நெறி நோன்மையன்" பாதம் ஆகும். மெய்ந்நெறி என்றால் உண்மையையும் சத்தியத்தையும் உடைய கொள்கை என்று பொருள். அதை எப்போதும் கடைப்பிடித்து அதன் வழியில் மட்டுமே செல்பவன் என்று பொருள். நோன்மையன் என்பதற்கு எளிமையானவன், மிகச் சிறந்தவன் என்று பொருள். நோன்மையன் என்றால் நோன்பினை நூற்பவன் என்றும் பொருள். எத்தகு நோன்பு? எப்போதும் சத்தியத்தை கடைப்பிடிக்கும் நோன்பு. பார்த்தீர்களா? சத்தியத்தை கடைப்பிடிப்பதே ஒரு நோன்பு அப்படி செய்தால் நாம் விரதம் இருப்பதற்கு சமம்! அப்படி விரதமேற்பவன் ஆன இறைவனது பாதாரவிந்தங்களை இறுக்கிப் பற்றிக் கொள்ள சான்றோர்கள் நினைக்கின்றனர். அதை தவிர அவர்களுக்கு பற்று ஒன்றும் இல்லை. இந்த பாடலில் இரண்டாவது முறையாக கம்பர் சிலேடையில் ஒரு சிறு முடிச்சை போட்டு விளையாடியுள்ளார். இந்த முறை பற்று என்ற சொல்லை வைத்து. மேலே கூறிய பொருளை "மெய்ந் நெறி நோன்மையன் பாதம் அல்லது பற்றிலர் பற்று இலார்" என்ற வாக்கியத்தில் கம்பர் பாடியுள்ளார். இதில் "பற்றிலர் பற்று இலார்" என்ற பதத்தில் இறைவனது பாதத்தை தவிர வேறொன்றையும் பற்றாதவர்கள் (முதல் பற்று பதம்) இந்த ஆசையில்லாத, பற்றற்றவர்கள் (இரண்டாவது பற்று பதம்) என்று பாடியுள்ளார். ஒரே பதம் "பற்று", ஆனால் இரண்டு இடங்களில் இரு வேறு விதமான அர்த்தங்கள்.
         
இத்துடன் இந்த பாடல் முடியவில்லை. மேலும், அறநூல்களை படித்த சான்றோர்கள் செய்யும் உயர்ந்த செயல்களை மேற்கூறியவாறு உரைத்து, அப்படி நாமும் வேறு எந்த அசையும் இல்லாமல் இறைவனது என்றும் நிலைத்து நிற்கும் திருவடிகளை எண்ணி நமது மனத்தை செலுத்தினோமேயானால் நாமும் அறநூல்களை குற்றமற படித்திருக்கா விட்டாலும், அந்த சான்றோர்களுக்கு ஒப்பானவர் ஆவோம். அவர்கள்  அற நூல்களை படித்து அதன் மூலம் இறைவனது திருவடிகளை பற்ற வேண்டும் என்று உணர்ந்தவர்கள். நாமோ நமது மனத்திலே அந்த நல்ல எண்ணம் தானே உதிக்க, அந்த நல்ல செயலை உடனே செய்தவர்கள். எது எப்படியோ, பற்ற வேண்டியதை பற்றுவோம்! மற்ற பற்றுகளை அகற்றுவோம்.



வீட்டுப்பாடம்:
சிலேடை பற்றி கூறி காளமேக புலவரின் பெருமையைக் கூறினேன் அல்லவா? அப்புலவர் பெருமானின் ஒரு சிலேடை பாடல் பின்வருமாறு,

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த் 
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்.

இந்த பாடலில் புலவர் பாம்பினையும், வாழைப்பழத்தினையும் ஒப்பிட்டுப் பாடி உள்ளார். ஒரே வாக்கியம், ஒரே சொற்றொடர்கள். ஆனால் சொற்றொடர்களை வேறு வேறாக பிரித்துப் படித்தால் ஒரு முறை பாம்பினையும், வேறு முறை வாழைப்பழத்தினை குரிப்பிதை காணுங்கள்! பாடலின் பொருளை கருத்துகளாக எழுதுங்கள். சிறிது நேரம் கழித்து நான் இந்த பாடலுக்கு பொருள் தருகின்றேன்!

No comments:

Post a Comment