Thursday 5 July 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 17




பாடல்:
இறு வரம்பில் இராம என்றோர் உம்பர்
நிறுவர் என்பது நிச்சயம் ஆதலால்
மறுஇல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம்
பெறுவார் என்பது பேசவும் வேண்டுமோ

நோக்கம்:
இராம நாமத்தை போற்றுபவர்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும் நன்மைகள்!

பொருள்:

இறு வரம்பில் இராம என்றோர் உம்பர் (இறக்கும் காலத்தில் "இராம" நாமத்தை சொன்னவர்கள், தேவலோகத்தை)
நிறுவர் என்பது நிச்சயம் ஆதலால் (சென்றடைவார்கள் என்பது நிச்சயம். அதனாலே)
மறுஇல் மாக்கதை கேட்பவர் வைகுந்தம் (குற்றமற்ற இராமாயணம் என்னும் பெருங்கதையை கேட்பவர்கள், வைகுந்தம்)
பெறுவார் என்பது பேசவும் வேண்டுமோ (சென்று அடைவார்கள் என்பதை தனியே வேறு எடுத்துச் சொல்லவும் வேண்டுமோ?)


விளக்கம்: 
இராம நாமத்தை சொன்னவர்கள் தேவர் உலகத்தை அடைந்து அதற்கும் மேல் பரம பதப் பதவியை அடைவர் என்று நாம் பலவாறாகா முன்னுள்ள பலப் பாடல்களில் பார்த்தோம். இந்தப் பாடல் அதை மறுமொழிகிறது. இவை எல்லாம் உண்மையே, இவை எல்லாம் கிடைக்கப்பெறும் பலன்கள் என்பதை நாங்கள் தனியே கூறவும் வேண்டுமோ என்று இந்த பாடலில் இராம நாமத்தை சொல்வதினால் ஏற்படும் நன்மைகளை இராமாயண அன்பர்கள் ஊர்ஜிதப்படுத்துகின்றனர்! இவை எல்லாம் உங்களுக்கு முடிந்தவரை இராம நாமத்தை சொல்வதினால் கிடைக்கப்பெறும் பேறுகள். முன்பே விளக்கியது போல் இராம நாமம் என்பது ஒரு தாரக மந்திரமாகும். அது இறப்பிற்கும், அடுத்தப் பிறப்பிற்கும் நடுவே நாம் பிறவிக் கடலில் சிக்கித் தத்தளிக்கும் போது வந்து நம்மை கரை ஏற்றும் உன்னத மந்திரமாகும். அனால் அந்த மந்திரம் பலிக்க நாம் எப்பொழுதும் முடிந்த வரை இராம நாமத்தை உரைக்க வேண்டும் இல்லையென்றால் எப்படி மரணத்தருவாயில் ஒரு மனிதனுக்கு இராம நாமம் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் வரும்? நீங்கள் இராம நாமத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்தீர்களானால் அந்த மந்திரம் நீங்கள் மீண்டும் உரைக்க வேண்டும் என்று முயற்சி செய்யாமலே ஒரு கட்டத்தில் உங்கள் மனதில் தானாகவே ஒலிக்க ஆரம்பித்துவிடும். இதற்காகத்தான் எப்போதும் நல்லதையே பேசு, நல்லதையே நினை, இறைவன் நாமத்தையே சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறோம். ஏனென்றால் நாம் தொடர்ந்து மீண்டும் மீண்டும் உரைக்கும் இந்த வார்த்தைகள் அண்டத்தில் (காஸ்மோஸ்) பதிந்து அதன்படி நாமும் நமது புற சூழலும் இயங்க ஆரம்பித்து விடுகின்றன. நாம் நல்லதை உரைத்தால் நாம் நல்லவர்களாக இருப்போம், தீயதை உரைத்தால் நாம் அறியாமலேயே நாம் தீய எண்ணங்கள் கொண்டவர்களாக இருப்போம். இதனால் தான் உலகத்தில் துன்பங்கள் ஏற்படுகின்றனவே அன்றி வேறெதுவும் காரணமில்லை. நாம் நல்லவர்களாக மாறிட பெரிதும் இராம நாமம் இந்த வகையில் உதவுகிறது. மரணப்படுக்கையில் இருக்கும் பலருக்கு இறக்கும் தருவாயில் இராம நாமம் உரைக்கப் படுகின்றது. ஏன் தெரியுமா? ஒரு குண்டூசி முனை அளவுக் கூட இவ்வுலகத்திலிருந்து எதுவும் எடுத்து செல்ல இயலாத நாம் இராம நாமத்தை மரணத்திற்குப் பிறகும் துணையாக அழைத்து செல்லலாம். வாழ்நாள் முழுவதும் இராம நாம சொல்லி வாழ்ந்தோர் இராம நாமத்தை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளவும், இராம நாமத்தை சொல்லவே இல்லாதவர்கள் அப்போதாவது இராம நாமத்தை சிக்கென்று பிடித்துக் கொள்ளவும் ஒருவரின் அந்திமக் காலத்தில் இராம நாமம் உரைக்கப் படுகின்றது. அப்படி இராம நாமத்தை உரைக்கப் பெற்றவர்களும், இராமக் காதையைப் படித்து  அதன் தலைவன் இராமப்பெருமானை நினைக்கப்பெற்றவர்களும் இந்த பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுவிக்கப்படுவர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அது ஒரு திண்ணமான உண்மை!

No comments:

Post a Comment