Thursday 5 July 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 19




பாடல்:
ஆதி அரி ஓம் நம நாராயணர் திருக் கதை அறிந்து அனுதினம் பரவுவோர்
நீதி அனுபோக நெறி நின்று நெடுநாள் அதின் இறந்து சகதண்டம் முழுதுக்கு
ஆதிபர்களாய் அரசு செய்து உளம் நினைத்தது கிடைத்து அருள் பொறுத்து முடிவில்
சோதி வடிவு ஆய்  அழிவு இல் முத்தி பெறுவார் என உரைத்த சுருதித் தொகைகளே

நோக்கம்:
இராமக்காதையை சொல்லும் முறையும், அதனால் ஏற்படும் நன்மைகளும்

பொருள்:
ஆதி அரி ஓம் நம நாராயணர் திருக் கதை அறிந்து அனுதினம் பரவுவோர் (தொடங்கும் பொது "ஹரி ஓம் நமஹ" என்று சொல்லி வணங்கி, நாராயணனின் அவதாரமான இராமனது புனிதமான கதையை அதன் பொருள் அறிந்து துதிப்பவர்கள்)  
நீதி அனுபோக நெறி நின்று நெடுநாள் அதின் இறந்து சகதண்டம் முழுதுக்கு (இவ்வுலகத்தில் நெடுங்காலம் சுகத்தை நிலையாக அனுபவித்து, அதனையும் கடந்து இந்த பிரபஞ்சம் முழுதுக்கும்)
ஆதிபர்களாய் அரசு செய்து உளம் நினைத்தது கிடைத்து அருள் பொறுத்து முடிவில் (தலைவர் ஆகி ஆட்சி செய்து, மனத்தில் நினைத்தவை எல்லாம் கிடைக்கப் பெற்று இன்பமாக வாழ்ந்து)
சோதி வடிவு ஆய்  அழிவு இல் முத்தி பெறுவார் என உரைத்த சுருதித் தொகைகளே (அதன் பிறகு இறைவனது அருளையும் பெற்று, அதனால் இறுதியில் பேரொளி வடிவாகி என்றும் அழியாமல் நிற்கும் மோட்சம் பெறுவார்கள் என்று வேதநூல்களின் தொகுப்புகள் உரைத்துள்ளன)



விளக்கம்:
இராமாயணக் காப்பியத்தை பாராயணம் செய்யத் தொடங்கும் முன் "ஹரி ஓம் நமஹ" என்று சொல்லி வணங்கி விட்டு தான் தொடங்க வேண்டும். சும்மா இராம நாமத்தை பாராயணம் செய்வதை விட இராம நாமத்தை சொல்லி மனதில் பணிவையும் புகுத்தி பணிவன்புடன் சொல்வது சால சிறந்ததாகும். பகவான் நாராயணனின் அவதாரமான இராமனது புனிதமான கதையை அதன் பொருள் அறிந்து துதிக்க வேண்டும். அப்படி செய்தால் இவ்வுலகத்தில் நெடுங்காலம் சுகத்தை நிலையாக அனுபவித்து, அதனையும் கடந்து இந்த பிரபஞ்சம் முழுதுக்கும் தலைவர் ஆகி ஆட்சி செய்து, மனத்தில் நினைத்தவை எல்லாம் கிடைக்கப் பெற்று இன்பமாக வாழலாம்இதை படிக்கும் போது இந்த கருணாநிதி போன்றவர்கள் இராமரை பழித்து வாழ்ந்தே இவ்வளவு சொகுசாக வாழ்கின்றனரே, இராமப்பெருமானை துதித்து வாழ்ந்தால் இன்னும்
எவ்வளவு எழுச்சி பெறுவர் என்றே தோன்றுகிறது. இராமப்பெருமானை பழிப்பதால் தான் பத்து மடங்கு வர வேண்டிய ஏற்றம் ஒரு மடங்கு, இரு மடங்கென எதோ விட்டேன் தொட்டேன் என இந்த தீய
அரசியல்வாதிகளுக்கு வருகிறது போலும். இதை உணர்ந்தால் இந்த நாத்திக அரசியல்வாதிகள் தானாகவே இராமப்பெருமானின் சரணாரவிந்தங்களை வந்தடைவார்கள். ஆனால் நல்லதை உணர்வதற்கும்,
இறைவனை உணர்வதற்கும் கூட  நல்லவர்களாக இருத்தலும், அந்த இறைவனின் கருணையும் வேண்டும். இல்லை என்றால் முட்டாளாக, அறிவிலியாக, பாவியாக காலத்தை போக்க வேண்டியது தான். ராமாயணத்தை பாராயணம் செய்வதால் இம்மையிலும் மறுமையிலும் பெரும் பேறை அடைவர் என்று மீண்டும் மீண்டும் நாம் முன்னமேயே பல பாடல்களில் பார்த்தோம். இம்மை என்றால் இப்பிறப்பு, இப்பிறப்பில் நிகழ வேண்டியவைகள் என்று பொருள். மறுமை என்றால் பின் வரும் பிறப்புகளும், இந்த பிறப்புக்கு பின் இருக்கும் காலக் கட்டங்களும் ஆகும். இராமாயணக் காப்பியத்தை ஓதுவோர் வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து பின்பு வைகுண்டம் அடைந்து அங்கேயும் சிறப்புற காலாகாலத்துக்கும் வாழ்வார்! இறைவனது அருளையும் பெற்று, அதனால் இறுதியில் பேரொளி வடிவாகி என்றும் அழியாமல் நிற்கும் மோட்சம் பெறுவார்கள். இவை எல்லற்றிற்கும் சாட்சி கூறுவதாக வேதநூல்களின் தொகுப்புகளும் இதையே உரைத்துள்ளன.

No comments:

Post a Comment