Thursday 5 July 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 18




பாடல்:
அன்னதானம் அகில நல் தானங்கள்
கன்னி தானம் கபிலையின் தானமே
சொன்ன தானப் பலன் எனச் சொல்லுவார்
மன் இராம கதை மறவார்க்கு அரோ

நோக்கம்:
இராமக்காதையை தினம்தோறும் படித்து பாராயணம் செய்தால் உண்டாகும் பலன்களும் நன்மைகளும்

பொருள்:
அன்னதானம் அகில நல் தானங்கள் (பசி என்று வருபவர்க்கு வயிறார உணவளித்தால் வரும் தானப்பலன்களும், உலகத்தில் உள்ள மற்ற இன்ன பிற நல்ல தானப்பலன்களும்)
கன்னி தானம் கபிலையின் தானமே (கன்னிப் பெண்ணை மணம் முடித்துக் கொடுத்தால் வரும் தானப்பலன்களும், பசுவை தானம் கொடுத்தால் வரும் பலன்களும்)
சொன்ன தானப் பலன் எனச் சொல்லுவார் (அற நூல்கள் கூறும் மற்ற இன்ன பிற தானங்களின் பயன்களும் அடைவார்காள் என்று சான்றோர்கள் கூறுவார்கள்)
மன் இராம கதை மறவார்க்கு அரோ (நிலைத்து நிற்கும் இராமக்காதையை மறவாமல் பாராயணம் செய்பவர்கள்)


 
விளக்கம்:
 உலகத்தில் சிறந்தது அன்னதானமாகும். மற்ற பிற தானங்கள் செய்திடும்பொழுது தானம் பெறுபவர் போதும் என்று சொல்லக் கூடிய வகையில்லாமல் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று கூறிக் கொண்டே போக வாய்ப்புண்டு. அதனால் அந்த தானங்கள் முழுமையாக ஒருவரின் தேவையை பூர்த்தி செய்யாத தானங்கள் என்று எடுத்துக் கொள்ளபட வாய்ப்பிருக்கின்றது. ஆனால் அன்னதானத்தைப் பொறுத்தவரை ஒருக் கட்டத்தில் அந்த தனத்தை பெறுபவர் "போதும்" என்று சொல்லியே ஆக வேண்டும். அதனால் அன்னதானம் மட்டும் கண்டிப்பாக தானம் பெறுபவரை நிறைவுப்படுத்தும். ஒரு குடும்பத்திற்கு பெண் வீட்டார் தாங்கள் தங்கள் வீட்டில் வளர்த்தப் பெண்ணை மணமுடித்து வைத்து தங்கள் வீட்டில் நிர்வாகத்தைக் கவனித்து வந்த பெண்ணை, மாப்பிள்ளை வீட்டில் அவர்களுக்கும், மாபிள்ளைக்கும் துணையாக திருமணம் செய்து அனுப்பி வைப்பதால் அது கன்னிகா தானமாகும் (மணமாகாத கன்னிப் பெண்ணை மணமுடித்து அனுப்புவதால் கன்னி தானம் என்று பெயர் பெற்றது).
                                                    
இறை வழிப்பாட்டிற்குத் தேவையான பால், தயிர், நெய், கோமியம் சாணி போன்ற மூலப் பொருட்கள் பசுவிடமிருந்து தான் கிடைக்கின்றது. இன்றும் கூட ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதப்பெருமாள் காலையில் ஒரு பசுவின் பின் புறமும், ஒரு யானையின் முன்புறமும் பார்க்கத்தான் கண் விழிப்பார். பசுவின் பின்புறமே இவ்வளவு மதிப்பிற்குரியது என்றால் பசுவே எவ்வளவு வணக்கத்திற்குரியது என்பதை யோசித்துப் பாருங்கள். மேலும் வீடுகளில் பாலுக்கும், தயிருக்கும் பசு எப்போதும் அவசியமாகிறது. நம்மூர் போல் பால்காரன் அன்று கிடையாது. ஒவ்வொருவரும் அவர் அவர் வீட்டில் பசுக்களை வளர்த்தால் தான் உண்டு! பசும்பால் எப்போதும் நமது வாழ்வில் நிரந்தரமாக கலந்த ஒரு பொருளாகும். சிறு குழந்தைகளுக்கு பசும்பால் இருந்தால் தாய்ப்பால் கூட இல்லாமல் சமாளித்து விடலாம் என்கின்றவரை நாம் பசும்பாலையும், பசுவினையும் பெரிதும் சார்ந்து இருக்கின்றோம். அப்படிப்பட்ட பசுவை தானமாக செய்வது கோ தானம் எனப்படும். கோ தானம் நமது சாஸ்திரங்களில் பல்வேறு விதமாக போற்றப்படுகின்றது. மேலும் கோவிலிலும் வீடுகளிலும் பெரிதும் பசுக்கள் தேவைப்படுவதால் கோ தானம் செய்வதை நமது அற நூல்கள் பெரிதும் ஊக்குவித்தன. இல்லை என்று வருவோருக்கு பசுவை தானம் செய்தால் அந்த வீடே மற்ற உணவுகள் ஏதுமின்றி பசும்பாலிலேயே காலத்தை தள்ளி விடலாம் தெரியுமா? அதனால் தான் கோ தானம் இவ்வளவு மகத்துவமானது. இவையாக அற நூல்கள் மொத்தமாக ஐம்பத்தியிரண்டு வகை தானங்களை உரைக்கின்றன. இவையெல்லாவற்றையும் செய்த பலனை இராமக்காதையை படித்தவரும், கேட்டவரும், பாராயணம் செய்தவரும் அடைவார்களாம். பிறகு ஏன் இன்னும் தயக்கம்? அன்னதானமோ, கோ தானமோ நம்மில் பலருக்கு செய்ய முடிகிறதா? இல்லை! அப்படியென்றால் முடிந்தவரை இராமக்காதையை படித்து இராமப்பெருமான் பெருமையை பாராயணம் செய்வோம்! எவ்வளவு எளிதான மாற்று வழிப் பார்த்தீர்களா? 

No comments:

Post a Comment