Thursday 5 July 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 20




பாடல்:
இனைய நல் காதை முற்றும் எழுதினோர் வியந்தோர் கற்றோர்
அனையது தன்னைச் செல்வோருக்கு அரும் பொருள் கொடுத்துக் கேட்டோர்
கனை கடல் புடவிமீது காவலர்க்கு அரசு ஆய் வாழ்ந்து
வினையம் அது அறுத்து மேல் ஆம் விண்ணவன் பதத்தில் சேர்வார்

நோக்கம்:
இராமக்காதையை எழுதியவர்கள், பாராட்டியவர்கள், படித்தவர்கள், சொன்னவர்கள், விளக்கமளித்தவர்கள் என இவர்கள் எல்லோரும் அடையும் நன்மைகளும், பயன்களும்

பொருள்:
இனைய நல் காதை முற்றும் எழுதினோர் வியந்தோர் கற்றோர் (இத்தகைய சிறப்புடைய இராமக்காதை முழுவதையும் எழுதியவர்களும், பாராட்டியவர்களும், படித்தவர்களும்)
அனையது தன்னைச் செல்வோருக்கு அரும் பொருள் கொடுத்துக் கேட்டோர் (இந்தக் காதையை சொன்னவர்களும், அருமையான பொருளை விளக்கமாக அளித்து உரைத்தவர்களும்)
கனை கடல் புடவிமீது காவலர்க்கு அரசு ஆய் வாழ்ந்து (ஒலிக்கும் கடலால் சூழப் பெற்ற இந்த உலகில் அரசர்களுக்கு எல்லாம் அரசர்களாய் வாழ்ந்து)
வினையம் அது அறுத்து மேல் ஆம் விண்ணவன் பதத்தில் சேர்வார் (தீவினைகளை ஒழித்து மேன்மை மிக்கதான பரமபதத்தில் சேர்வார்கள்)

விளக்கம்:
இராமக்காதையின் சிறப்பினை முன்னே உள்ள பலப் பாடல்களில் பார்த்தோம். அது கொடுக்காத செல்வ செழிப்புகள் இல்லை, அது வழங்காத ஞான ஒளி இல்லை, அது இந்தப் பிறவிக்கும் பிறகு நம்மை நல்வழிப்படுத்துகின்றது. இத்தகைய சிறப்புடைய இராமக்காதையை நாம் எப்படி எல்லாம் நம் வாழ்வில் புகுத்த முடியும்? அதை தினமும் படிக்கலாம், அதைப் பற்றி பிற மனிதர்களிடம் போற்றி பேசி அவர்களையும் படிக்க செய்யலாம், அதை இதோ இங்கே உள்ளது மாதிரி பல்வேறு ஏடுகளில் நாம் பதிவுகளாக இட்டு பலருக்கும் கொண்டு சேர்க்கலாம், இவை எல்லாவற்றிற்கும் மேல் இந்தக் கதையின் அருமையை, அதன் பொருளை நாம் பலருக்கும் சொற்பொழிவின் மூலமாகவும், எழுத்தின் மூலமாகவும் விளக்கலாம். இப்படி நாம் இராமக்காதையை நமது வாழ்வில் பல்வேறு விதமாக புகுத்த வாய்ப்புகள் உள்ளது. இதை முழுவதுமாகவும், தமிழில் முதலுமாகவும் எழுதியவரும், நாம் படிக்க பாடம் கொடுத்த நூலாசிரியனுமான கம்பருக்கு இந்த சிறப்புகள் என்றும் போய் சேரும். இப்படி கம்பரை போற்றி வணங்கி, நன்றியுரைத்து, கம்பராமாயணத்தையும் போற்றியவர்களில் முதன்மையான நமது இராமாயண அன்பர்களுக்கும் அனைத்து வித நன்மைகளும் போய் சேருகின்றது. கம்பரது எழுத்துகளையும், கம்ப இராமாயண அன்பர்களது பாக்களையும் ஆர்வமுடன் படிக்கும், மேலும் தொடர்ந்து படிக்க இருக்கும் நாம் எல்லோருக்கும் வாழ்வில் எல்லாவித நற்பயன்களும் உண்டாகுவதாக. கம்பரின் இராமக்காதையை வாய்வழியாக பால்வேறு ஊர்களிலும், பல்வேறு தொலைக்காட்சி சேனல்களிலும் (விஜய் டி.வி பக்தித் திருவிழா!!!), இணையத்தில் யூடியுப் (youtube) போன்ற ஊடகங்களிலும் பாலவாரக சொற்பொழிவாற்றுபவர்களும் இந்த மாப்பெரும் நன்மைகள் போய் சேர்வதாகட்டும். மேலும் பிளாக்கர் (blogger) மூலமாக பல்வேறு இடுகைகளிட்டு இந்தக் காப்பியத்தை பல பதிவுகளாக போட்டு பாடல்களை கொடுத்து, விளக்கமளித்து தனது கருத்துகளை கொடுத்தவர்களுக்கும் இராமயணத்தை பரப்பியதற்காக நல்ல வாழ்வும், மேலும் பரமபத பதவியும் கிட்டத்தும். இதில் நான் என்று இல்லாமல் எனக்கு முன்னே பலநூறு பேர்கள் ஏற்கனவே பதிவுகள் போட்டும், போட முயற்சித்தும் இருந்துள்ளனர். அவர்கள் எல்லோருமே இதில் சேர்த்தி. அவர்களது முயற்சி முழுமையாகவில்லை என்றால் அதற்கு காரணாம் அவர்களல்ல கம்பரின் தமிழ் கடலே காரணம். கடலை ஒரு ப்ளாக்கில் (blog) அடைத்து வைக்க முடியுமா? அப்படி வைத்தால் கம்பருக்கு ஓர் சிறு களங்கம் வந்து விடுமே. அதனால் இவர்களது இயலாமைக் கூட கம்பரது இராமாவதாரத்திற்கு ஒருவகை புகழேயாகும்! இந்த இடுகையும் நல்ல படியாக என்னால் முடிந்தவரை வெற்றிகரமாக போட வேண்டும் என்பது எனது ஆசை. இராமச்சந்திரமூர்த்தியும், கம்பனாடாரும் என்ன மனதில் வைத்துள்ளனரோ பார்ப்போம்! இப்படி எழுதியவர்களும், பாராட்டியவர்களும், படித்தவர்களும் இந்தக் காதையை சொன்னவர்களும், அருமையான பொருளை விளக்கமாக அளித்து உரைத்தவர்களும் பெரும் இரைச்சலும் ஆராவாரமும் கொண்டக் கடலால் சூழப் பெற்ற இந்த உலகில் அரசர்களுக்கு எல்லாம் அரசர்களாய் வாழ்ந்து தீவினைகளை ஒழித்து மேன்மை மிக்கதான பரமபதத்தில் சேர்வார்கள்.


இத்துடன் கம்பராமாயண அன்பர்களது பாடல்கள் நிறைவடைகின்றது. இனிவரும் பாடல்கள் கம்பரின் எழுத்துகளாகும்!

No comments:

Post a Comment