Thursday 5 July 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 16




பாடல்:
இராகவன் கதையில் ஒரு கவிதன்னில் ஏக பாதத்தினை உரைப்போர்
பராவ அரும் மலரோன் உலகினில் அவனும் பல் முறை வழுத்த வீற்றிருந்து
புராதன மறையும் அண்டர் பொன் பதமும் பொன்றும் நாள் அதனினும் பொன்றா
அரா அணை அமலன் உலகு எனும் பரம பதத்தினை அடைகுவர் அன்றே

நோக்கம்:
இராமாக்காதையை தம்மால் இயன்றவரை படித்தவர்கள் அடையும் பயன்கள்

பொருள்:
இராகவன் கதையில் ஒரு கவிதன்னில் ஏக பாதத்தினை உரைப்போர் (இராமாயணத்தில் உள்ள நான்கு அடி பாடல்களில் ஒரு அடியையாவது சொல்பவர்களும் கூட)
பராவ அரும் மலரோன் உலகினில் அவனும் பல் முறை வழுத்த வீற்றிருந்து (மேன்மை மிகுந்த பிரம்மலோகத்தில் அப்பிரமனும் பலமுறை புகழும்படி வீற்றிருப்பார்கள்)
புராதன மறையும் அண்டர் பொன் பதமும் பொன்றும் நாள் அதனினும் பொன்றா (மிகப் பழமையான வேதங்களும், தேவர்களது பொன்னுலகமும் அண்ட சராசரமும் அழிந்து போகும் நாளில் எங்கே சரண் புகுகிறதோ, அந்த இடம் அழிவு நாள் என்பதே இல்லாத இடமாகும்)
அரா அணை அமலன் உலகு எனும் பரம பதத்தினை அடைகுவர் அன்றே (அந்த இடம் பாம்பின் மேல் பள்ளிக் கொண்டிருக்கும் களங்கமற்ற திருமாலின் உலகமான வைகுண்டம் எனப்படும் பரமப்பதமாகும். இராமயாணம் பாடல்களை படித்தவர்களும் அங்கு சென்று அடைவர்)



விளக்கம்:
நாம் இந்தப் பாடலில் காணும் இடங்களான பிரம்மலோகமும், வைகுண்டமும் சூசக அர்த்தங்களைக் கொண்ட பதங்களாகும். முன்னே ஒரு பாடலில் குறிபிட்டுள்ள படி, பூலோகத்தில் வாழும் அனைத்து மானிடர்களுமே ஏதோவொரு கர்மம் இருப்பதினால் தான் இந்த உலகத்தில் பிறந்து வாழ்கின்றனர். ஏதாவது பிடிக்கவில்லை என்றால் இந்து மதத்தில் ஊறியவர்கள் "கர்மம்" என்று சலித்துக் கொண்டு அந்த செயலை செய்வதை நாம் எல்லோருமே பார்த்திருகின்றோம். அதற்கு என்ன அர்த்தமென்றால், எனக்கு பிடிக்குதோ இல்லையோ என் தலையில் விதித்துள்ளது இதை நான் செய்து தான் ஆக வேண்டும் வேறு வழியே இல்லை என்பது தான். நாமும் நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ இந்த வாழ்க்கையில் கிடைக்கும் சுக, கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்பதினால் தான் அதற்கு "கர்மம்" என்று பெயர். ஆனால் அந்த கஷ்டங்களை நாம் நமது மதியால் வெல்லலாம். எப்படி? நாம் இராம நாமத்தை சொல்வதனால், இராம நாமம் நம்மை காத்து நமது மனதை கஷ்டங்களால் சோர்வுற  விடாமல்  தெம்புற வைக்கிறது

அப்படியென்றால் இராமபெருமானும், கிருஷ்ணா பரமாத்மாவும் கூட கர்ம வினைகளால் தான் பிறந்தார்களா? என்று நீங்கள் கேட்கலாம். எனது பதில் ஆமாம் என்பது தான்! அனால் அது ஒரு மேல்நிலை பொருந்தியதும், உறவாக்கப்பட்டதுமான கர்மம். நாம் கர்மத்தை தெரிந்தே உருவாக்கலாம், தெரியாமலும் உருவாக்கலாம். நாம் கோபப்படும்போதும், அளவிலா ஆசைப் படும்போதும், எதையோ நினைத்து ஏங்கி வாடும் போதும் கர்மம் தானாகவே உருவாகி விடுகின்றது. நீங்கள் கோபப்படும்போது, எதோ ஒன்று நீங்கள் நினைக்கும் படி இல்லை என்று சினம் கொள்கிறீர்கள். அது என்னவாகிறது என்றால், உங்கள் மனதிலும், பிற நிலைகளிலும் (ஐந்து வகை உடல்கள் உண்டு, இல்லை ஐந்து வகையான ஓடுகள் (shells) உண்டு என்றும் சொல்லலாம்! நமது பூத உடல் தான் நாம் எல்லோரும் காண்பது அதற்கு பின் பிராணமாயகோஷம், மனோமாயக்கோஷம், விஞ்ஞானமாயக்கோஷம், ஆனந்தமாயக்கோஷம் என்று மேலும் நான்கு உடல்கள் சூக்ஷமமாக உண்டு) இந்த தேவைகள் பதிந்து விடுகின்றது. பிறகு என்ன ஆகின்றது என்றால் அந்த தருணத்தில் அந்த ஆசை நிறைவேறாவிட்டால் அது ஒருக் கர்மமாக இருந்து பின்னொரு பிறப்பில் அந்தத் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறது. அந்த ஆசை அவ்வளவு தீவிரமாக இல்லாவிட்டால் அடுத்தப் பிறப்பு வரை செல்வது இல்லை இந்த பிறப்பிலேயே கரைந்து விடுகின்றது. ஆனால் தீவிரமான ஆசை எல்லாம் இந்தப் பிறவியிலேயே கரையாமல் அடுத்தப் பிறவிகளில் தொடர்ந்து பொய் கரைகின்றது.

இவை எல்லாம் நாம் விழிப்புணர்வில்லாமல் உருவாக்கும் கர்மங்கள் ஆகும். அனால் தெய்வப்பிறவிகள் தங்கள் கர்மத்தை ஒரு விழிப்புணர்வுடன் உருவாக்கி அதனால் மானிடப் பிறவி எடுக்கின்றனர். இந்த செயலை செய்ய வேண்டும், இப்படி இப்படி செய்ய வேண்டும் என்று பகவான் மனதிற்குள் இந்தக் கர்மங்களை உருவாக்கி அது எவ்வளவு வருடங்களில் கரைந்துப் போக வேண்டும் என்பது வரை பல நுணுக்கமான சங்கதிகளையும் முடிவுப் பண்ணின பின் பூலோகத்தில் பிறக்கின்றான். அதனால் தான் எப்போதும் கோபப் படக்கூடாது, வாழ்க்கையில் சோர்வடையக் கூடாது, மற்றவரை வெறுக்கக் கூடாது என்று பெரியோர்கள் கூறினார். ஏனென்றால் இவை எல்லாம் உங்களுக்கு நீங்கள் அறியாமலேயே பல கர்மங்களை உருவாக்கி விட்டு விடுமாம். அதே சமயம் இறைவனது திருவடிகளை மானத்தில் நினைத்து கொண்டே இருந்தோமானால் அதுவே ஒரு மேல்நிலை சிந்தனையாகி நமது கர்மங்களை களைந்தெடுத்து விடுமாம். அப்படிப்பட்ட நோக்கில் நாம் இராமாயணத்தைப் படித்தால் (முழுவதும் படிக்க வேண்டாம், ஒரு பாடலாவது இல்லை ஒரு பாடலில் ஒரு வரியையாவது படித்தால் கூட போதும்) நமது கர்மங்கள் நம்மை விட்டு அகன்றுவிடும், எஞ்சி இருக்கிற பூலோக வாழ்வில் பேரும் புகழும் பெற்று வாழ்ந்திருப்போம். பூலோகம் பிரம்மரது  படைப்பு. பிரம்மலோகம் படைப்பின் சிறந்த கூறுகளைக் கொண்ட ஞானத்தின் சாரத்தைக் கொண்ட தூய்மையான லோகம். ஆனால் அதுவும் கர்மத்தில் இயங்கும் ஒரு வாழ்வாதார லோகமே. அதற்கு மேல் உள்ள லோகங்களான வைகுண்டமும், சிவலோகமும் கர்மங்களின் கட்டுபாட்டில் இல்லாமல் முழு விழிப்புணர்வால் இயங்கும் லோகங்களாகும்.

பூலோகத்தில் ஞானிகளாக வாழ்பவர்கள் பிரம்மலோக வாழ்க்கையை தான் வாழ்கின்றனர். அவர்களுக்கு இராமாயணத்தை தங்களால் முடிந்தவரை படித்ததினாலும், அவர்களது இறைவழிப்பாட்டினாலும் பிரம்மதேவரை போன்றும் பிற இன்ன தேவர்களை போன்றும் படைக்கும், அழிக்கும், சித்து வேலை செய்யும் பல மாய சக்திகள் கிடைக்கின்றன. அவர்கள் உடலளவில் பூலோக வாழ்க்கை வாழ்ந்தாலும் மற்ற நான்கு உடல் அளவுகளில் மேன்மை பொருந்திய பிரம்மலோக வாழ்க்கையை வாழ்கின்றனர்.அதன் பிறகு அவர்கள் கர்மம் முடியும் தருவாயில் வைகுண்டம் சென்று அடைகின்றனர்.இவை எல்லாம் இராமாயணத்தை தங்களால் முடிந்தவரை படித்தவர்கள் அடையும் பயன்களாகும்.

வைகுண்டம் என்பது இராமாயணம் படித்தவர்கள் மட்டுமில்லாமல் மற்ற பிற உயிர்களும் கர்ம வினை முடிந்தால் வந்து சேரும் இடமாக இருக்கின்றது. வேதங்களும், தேவர்களும் (பிரம்மதேவர் உட்பட), அண்ட வெளி சராசரமும் அந்த உயிர் எண்ணிக்கையில் அடங்கும். இவை எல்லாமுமே ஒரு கர்மத்தின் பின்னணியில் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தானே சேர்ந்ததோ, இல்லை உருவாக்கப்பட்டதோ, எப்படியிருந்தாலும் அந்த கர்மங்கள் கரையும் போது அவர்களுக்கு ஒரே போக்கிடம் தான் உண்டு. எங்கே எம்பெருமான் ஸ்ரீ நாராயணமூர்த்தி ஆதிசேஷன் மேல் பள்ளிக் கொண்டு அனந்த சயனம் செய்தபடி அருள் பாலிக்கிறாரோ அந்த இடத்திற்கு அழிவு என்பதே இல்லை. அங்கே தான் இவை எல்லாமுமே செல்கின்றன! நாமும் அவ்விடம் செல்வோமாக! 

No comments:

Post a Comment