Thursday 19 July 2012

பாடல் 1: பாயிரம்: கடவுள் வாழ்த்து










பாடல்:
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

நோக்கம்:
செய்யும் செயலுக்கு முன் கடவுள் வாழ்த்துக் கூறுதல்

பொருள்:
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் (எல்லா உலகங்களையும் தாமே படைத்தலும்)
 
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா (பாதுகாத்தலும், அழித்தலும் ஆகிய மூன்று தொழில்களையும் நீங்காத)
 
அலகு இலா விளையாட்டு உடையார் அவர் (முடிவு இல்லாத விளையாட்டுகளாக உடையவராகிய அவரே)
 
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே (இவ்வுலகங்களுக்கு எல்லாம் தலைவர், அத்தன்மை பெற்ற இறைவர்க்கே நாங்கள் அடைக்கலம்)

 
விளக்கம்:
                       இது கடவுள் வாழ்த்து. நமது பாடப் புத்தகங்களில் நாம் பாடங்களை புரட்டுவதற்கு முன்பு பார்க்கும் பகுதி கடவுள் வாழ்த்துப் பகுதியாகும். அந்த மரபு இவ்வகை நூல்களின் அமைப்பை பொறுத்தே அமைந்துள்ளது. எந்த செயலாக இருந்தாலும் அதை தொடங்குவதற்கு முன் கடவுள் வாழ்த்து உரைப்பது வேண்டும் என்று இந்த மாதிரி சங்க நூல்கள் எடுத்துக்காட்டி விளக்கியதால் தான், நமது இன்றைய தமிழ் பாடப்புத்தக ஆசிரியர்களும் அந்த நல்ல பழக்கத்தை பின்பற்றி கடவுள் வாழ்த்துடன் பாடங்களை ஆரம்பிக்கின்றனர்! (இந்த இடுகை கூட கடவுள் வாழ்த்துடன் தொடங்கியது, நீங்கள் ஆரம்பம் முதல் படித்திருந்தால் ஞாபகம் இருக்கலாம்!) ஆனால் இந்த கடவுள் வாழ்த்து இன்னும் கொஞ்சம் சிறப்பானது. பொருள் பகுதியில் படித்தீர்கள் என்றால் அது உங்களுக்கே புலப்படும். இந்த கடவுள் வாழ்த்தில் கம்பர் ஒரு தெய்வத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை. ஒருவேளை கம்பர் மறந்திருப்பாரோ? யார் 11,000 பாட்டுகள் படைத்த கம்பர் தனது கடவுள் வாழ்த்தில் தனி பெரும் பொருள் இராம்ப்பெருமானே என்று பாட மறந்திருப்பாரா, இல்லை! ஒரு வேளை கம்பர் தெய்வத்தின் பெயரை பாடலில் சொருக முடியாதபடி தினறியிருப்பாரோ? கம்பர் கவிச்சக்கரவர்த்தி! அவருக்கு தமிழிலும், கவியிலும், பொருளிலும் தடங்கல் என்பதே இல்லை. அவர் சொல்லும் பொருளையும், கவியைடும் உணர்ந்துக் கொள்ள வேண்டுமென்றால் நமக்கு வேண்டுமானால் சிரமமாக இருக்கலாம்! கம்பர் நினைத்திருந்தால் "இராமா, இராமா" என்றே பாடல் முழுவதும் புகுத்தி அதை சிலேடை வடிவமாக்கி ஒரே சொல் பல்வேறு பொருளை உணர்த்தும வகையில் பாடலை இயற்றியிருக்கலாம்! பின்பு ஏன் கம்பர் இப்படி பொத்தம் பொதுவாக கடவுள் வாழ்த்து பாடினார்?
                
கம்பர் அவை நாகரீகம் அறிந்தவர். கம்பராமயண அரங்கில் சைவ சமய பெருமக்களும் குழுமியிருப்பர். மற்ற சமயங்களான சமணம், பௌத்தம் போன்றவைகளில் இருந்தும் மக்கள் குழுமி இருந்தனர். அதனால் கடவுள் வாழ்த்து என்பது இந்த சமயங்கள் எல்லாவற்றையும் ஒத்து ஒருங்கிணைத்து, உருவங்கள் பலவானாலும், மார்க்கங்கள் வேவேரானாலும் பரம் பொருள் ஒன்றே என்று உரைக்கும் விதமாக எங்கும் நிறைந்திருக்கும் அந்த பரம்பொருளை எண்ணி அமைய பெறல் வேண்டும். சமய பொதுவுடைமை (secularism) என்பதற்கு உலகத்திற்கே முன்னோடியாக தமிழும், தமிழ் அறிஞர் பெருமக்களும் திகழ்ந்தனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு! அது சரி கடவுள் வாழ்த்து மட்டும் சமய பொதுவுடைமை, அதன் பின் வரும் பாடல்களும், ஏன் இந்தக் காப்பியமே, ஒரு வைணவ சமய தெய்வத்தின் பெருமைகளை போற்றுகின்றன அது எந்த வகையில் ஞாயம் என்று நீங்கள் கேட்கலாம்? கம்பர் சமய பொதுவுடைமை பற்றி காப்பியம் இயற்றவில்லை, அவர் இராமாவதாரம் பற்றி தான் காப்பியம் இயற்றுகிறார்! ஆதலால் நூல் முழுவதும் சமய பொதுவுடைமை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கடவுள் வாழ்த்து என்று வரும் போது, அந்த பாடல் கடவுள் என்ற ஒருவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அப்பொழுது இந்த நூலின் நாயகனே வணங்கக் கூடிய கடவுள். மற்ற கடவுளை பற்றி குறிப்பிடத் தேவையில்லை என்று உரைக்க முடியாது அல்லவா? கடவுள் என்றால் அது பலருக்கு பல உருவங்களாக இருக்கின்றது. ஆனால் அதற்கு பின் வரும் பாடல்கள் கடவுள் வாழ்த்து அல்ல அவை காப்பிய கதையோட்டத்துடன் சேர்ந்தது. அதனால் திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார், அவரை சிவப்பெருமானும் மற்ற பிற தெய்வங்களும் தொழுது அருள் பெறுகின்றனர் என்று கூறும் பொழுது அங்கே கடவுள் வாழ்த்து என்ற நோக்கத்தை விட நூலின் நாயகனாகிய திருமாலின் அவதாராமாகிய இராமப்பெருமான் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் என்றும், மற்ற பிற கடவுளர்களும் வந்து வணங்கக் கூடிய மாட்சிமை பொருந்தியவர் என்பதையும் விளக்கும் நோக்கமே மேலோங்குகிறது. அந்த வகையில் இந்த ஒப்புமை ஒரு கவிப்புலமையே தவிர இவர் உங்கள் கடவுளுக்கு மேலானவர், உங்கள் கடவுள் ஒன்றுமில்லாதவர் என்று கூறுவதற்காக இல்லை! மிக சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், சினிமாவில் ஹீரோவை எல்லோரும் கடவுளாக வணங்கும் காட்சிகள் அநேகமாக இப்போது அனைத்து படங்களிலும் வருகின்றது அதற்காக அந்த ஹீரோ உங்களை விட உயர்தவரா? இல்லையே. சிலருக்கு அந்த ஹீரோ கடவுளாக இருக்கலாம். சிலருக்கு அந்த ஹீரோ எவ்வளவு  நல்லவராக இருக்கிறார் என்ற மதிப்பு வரலாம். அதை போல தான் இராமாவதாரம் காப்பியமும்! வைணவர்களுக்கு திருமால் முழுமுதற் கடவுள், மற்ற சமயத்தினருக்கும் திருமால் மதிப்பிற்கும், மரியாதைக்குமுரிய ஒரு கடவுள்.
                   
இப்படி பல சமயத்தினரும் வணங்கும் ஒரே இறைவன் ஒரே பரம்பொருளாக எல்லா உலகங்களையும் தானே தனி ஆளாக இருந்து படைத்து, இவ்வுலகம் யாவையும் நன்றாக உள்ளது என்கின்ற அளவில் காத்தும், சமயம் வரும் பொது அழித்தும் அருள் பாலிக்கின்றார். தேவை முடிந்தப்பின் உலகங்களை அழிப்பவர், மீண்டும் அந்த கால ஓட்டத்திற்கு ஏற்ப புதிய பல உலகங்களை படைத்து இயங்க செய்கின்றார், அந்த உலகங்களில் மீண்டும் இந்த மூன்ற தொழில்களையும் ஏற்று நடத்துகின்றார்! இப்படி முடிவு இல்லாத செயல்களை செய்பவர் இந்த உலகங்களுக்கு தலைவர் போன்றவர். அந்த செயல்களை செய்யும் இறைவன் என்னும் பரம்பொருளுக்கே நாம் வணக்கத்தை செலுத்தி சரண் புகுவோம்! கம்பரின் வழி சென்று சமய பொதுவுடைமை பேணி பின்பற்றுவோம்!



வீட்டுப்பாடம்:
 கம்பரின் முதன்முதல் பாடல் '' என்ற எழுத்திலிருந்து தான் தொடங்கியது. இது எதோ குருட்டாம்போக்கில் கம்பர் தனது வாய்க்கு வந்த வார்த்தையாக இந்த பாடலை தொடங்கவில்லை. எழுத்துகளில் அகரம் (''), உகரம் (''), மகரம் ('') மூன்று தொழில்களுடன் தொடர்புடையவை. அகரம் தொடக்கம், அதனால் படைத்தல் தொழிலுடன் சேர்ந்தது. உகரம் காத்தல் தொழிலுடனும், மகரம் அழித்தல் தொழிலுடனும் சேர்ந்த சொல் ஓசைகளாகும்! ஒரு நல்ல செயலை தொடங்கும் போது அதைக் கண்டிப்பாக மகரத்துடன் தொடங்கக் கூடாது இல்லையா? வேண்டுமென்றால் மகரத்துடன் முடிக்கலாம்! அப்படி என்றால் அகரமும், உகரமும் தான் மிஞ்சி இருக்கின்றன. அகரத்தை விட உகரம் ஒரு படி மேல். அகரம் போல் அல்லாமல், உகரம் ஏற்கனவே தொடங்கப்பட்ட ஒரு வேலையை காத்து மேலும் வளர உதவுகிறது. அந்த நினைப்பிலேயே சங்க நூல்கள் பலவும் தங்கள் நூல்கள் சிறப்புற வேண்டும் என்ற எண்ணத்தில் உகரத்துடன் தான் ஆரம்பிக்கும், முக்கியமாக சமய நூல்கள். கம்பரின் இராமாவதாரமும் அப்படியே. இப்பொழுது வீடுப்பாடம் என்னவென்றால், "உகரத்துடன் தொடங்கும் மற்ற பிற நூல்களையும் அதன் முதல் பாடலின் வரிகளையும் பட்டியலிடுங்கள்!" என்பது தான்.

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வளையாபதி - காப்பிய கடவுள் வாழ்த்தும் உகரத்துடன் தான் ஆரம்பிக்கும்

    ReplyDelete
  3. நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியும் "உயர்வற உயர்ந்தும் உடையவன்" என்றே தொடங்குகிறது

    ReplyDelete
  4. உகரம் காத்தல் தொழிலுடன் இணைந்தது.இராமர்
    நமை காக்கும் கடவுள்
    என்பதால் உகரத்தில்
    தொடங்கி இருப்பார்
    என்றும் கொள்ளலாம்

    ReplyDelete
  5. உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன்

    ReplyDelete