Tuesday 7 August 2012

பாடல் 6: பாயிரம்: அவை அடக்கம்:




பாடல்:
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது எனின்
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிவிக்கவே

நோக்கம்:
இந்தக் காப்பியத்தின் குறைகளையும் (அப்படிக் குறைகள் இருந்தால்) தாண்டி தான் என்ன செய்ய நினைத்ததாக தன் நோக்கம் பற்றி கம்பர் கூறுதல்.

பொருள்:
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு (உலகம் என்னை கேலியுடன் பேசினாலும், பழிச்சொல் ஏதேனும் தனக்கு)
எய்தவும் இது இயம்புவது யாது எனின் (வந்து சேர்ந்தாலும், அதையும் தாண்டி தான் இந்த நூலை இயற்றி அதில் பாடலை பாடுவது எதற்கு என்றால்)
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல் (பொய் ஏதும் இல்லாமல் தூய்மையான மெய்யே நிறைந்த அனைத்து அறிவு சார்ந்த நூல்களையும் கற்று அறிந்த புலமைமிக்க மா முனிவரான வால்மீகியிடம் இருந்து வந்த)
தெய்வ மாக் கவி மாட்சி தெரிவிக்கவே (தெய்வத் தன்மை வாய்ந்த சொற்களால் ஆன கவிதையான வடமொழி நூலான இராமாயணம் தமிழில் பரிச்சயப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும், அதன் சிறப்பை தமிழ் மக்கள் அறிந்து கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்திலுமே!)




விளக்கம்: வடமொழியில் வால்மீகி என்னும் தெய்வ புலவர் இராமப்பெருமானின் கதையை இராமாயணமாக இயற்றினார். வடமொழியில் உள்ள அந்த நூல் அம்மொழி அறிந்த மக்கள் அனைவருக்கும் ஒரு தெய்வ நூலாக வகுக்கப்பட்டுள்ளது. தமிழில் எண்ணற்ற திருமறைகளும், திருவாசகங்களும், திவ்யபிரபந்தங்களும் இருந்தாலும் கேட்டு பின்பற்றி நடக்க வேண்டிய இராமாயணம் என்னும் இந்த நூல் தமிழ் மக்களுக்கு கிடைக்கவே செய்யாமல் போய் இருந்து விடுமோ என்ற கவலை கம்பருக்கு இருந்தது போலும். அதனால் தான், வேறு யாரும் இயற்றவில்லை எனினும் தானாவது அந்த முதல் அடியை எடுத்து வைப்போம் என்று இராமாவதாரம் என்னும் இந்த நூலைத் தொடங்கினார் போலும். அது தெள்ளத் தெளிவாக இந்த பாடலில் நிரூபணமாகின்றது. கம்பரது இராமாவதாரத்திற்கு முன்னர் தமிழில் இராமக்காதையை பற்றி ஒரு நூலுமே இருந்ததில்லை என்பதே உண்மை. இராமக்காதையை அறிந்தவர்கள் எல்லோருமே அதை இராமாயணமாக வட மொழியில் உள்ள பல நூல்களையும் படித்தே தெரிந்து வைத்துள்ளனர். ஆழ்வார்களும் சரி, மற்ற பிற வைணவ அடியார்களும் சரி பெருமாளுக்கு மாபெரும் சேவையை தங்களது படைப்பின் மூலம் செய்துள்ளனர். ஆனால் இவர்கள் யாரும் இராமாவதாரத்தை வைத்தே ஒரு படைப்பை படைக்கவில்லை. இராமாவதாரக் கதை ஆங்காங்கே அவர்களது பாடலில் வந்து சென்றாலும், முழுமையாக இராமாவதாரம் நமக்கு கம்பர் இயற்றும் வரை கிடைக்காமலே இருந்தது என்று தான் கூற வேண்டும். எப்படி எண்பதுகளில் இராமாயணம் என்னும் டி.வி. தொடர் இந்தியில் மட்டுமே வந்து நமக்கு ஒரு வார்த்தையும் புரியாமல் இருந்ததோ அப்படி தான் திராவிடர்களுக்கும் இராமாயணம் அங்கே கொஞ்சமும் இங்கே கொஞ்சமுமாய் கேட்டுத் தெரிந்து கொண்ட கதையாக இருந்தது.
                        பிறகு வந்த தமிழ் வழி செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் (sun tv) எப்படி இராமாயணத்தை மக்களுக்கு அவர்கள் மொழியிலேயே கொண்டு வந்து தந்ததோ, அப்படி தான் கம்பாரும் தனது இராமாவதாரம் என்னும் நூலினால் இராமக்காதையை தமிழ் மக்களுக்கு பரிச்சயம் ஆகும் படி அருளிச் செய்தார். கம்பரை இராமாயனம் இயற்ற சொன்ன மன்னன், கம்பரது போட்டி புலவரான ஒட்டக்கூத்தரையும் எழுதச் சொன்னான். ஆனால் இவர்கள் இருவரும் எழுதிய நூலுக்கு முன்னே வேறு எந்த நூலும் இராமக்காதையை விளக்கி எழுதப்படவில்லை. தமிழில் என்ன தான் இல்லை என்று இந்த காலக்கட்டங்களில் பல தமிழ் அறிஞர்கள் மார் தட்டிக் கொள்வர். ஆனால் கம்பர் மட்டும் இல்லை என்றால் இவ்வளவு அருமையான மொழியில் பாரதக் கண்டமே போற்றி புகழும் வகையில் ஆட்சி செய்த இராமப்பெருமானின் கதை இல்லையே என்று மற்றவர் ஏளனம் செய்யும் நிலை வெகு நிச்சயமாக வந்து சேர்ந்து இருக்கும். கம்பருக்கு அந்த வகையில் தமிழ் மொழி பற்றி பெருமைக்கொள்ளும் நாம் எல்லாம் நன்றி செலுத்த கடைமைப் பட்டுள்ளோம். 
                        அப்படிபட்ட கம்பர் இராமாவதாரத்தை எந்த நூலின் மூலமாக இயற்றுகிறார்? குற்றமற்ற கருத்துகளை கூறும் அறநூல்கள் அனைத்திலும் தேர்ச்சிப் பெற்று விளங்குபவனான வால்மீகி என்னும் தெய்வப் புலவரால் இயற்றப்பட்ட நூலினை மூலமாகக் கொண்டு இயற்றுகிறாராம். அந்த நூலில் வால்மீகி தெய்வத் தன்மை பொருந்திய சொற்களை வைத்து பாடல்களை பாடியுள்ளாராம். அதனால் தான் இராமாயணம் படிப்போர்க்கு பெருமை வந்து சேரும் என்றும், ஒரு பாடலாவது, ஒரு வரியாவது, ஒரு சொல்லவது சொன்னால் முத்திக்கு வித்தாகும் என்றும் முன்பே இந்த பதிவில் பார்த்தோம். இப்போது புரிகிறதா ஏன் என்று? அதில் உள்ள ஒவ்வொரு சொல்லும் தெய்வத் தன்மைப் பொருந்திய சொல் என்பதினால்! இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த வடமொழி நூலை மேற்கோளாகக் (reference) கொண்டு கம்பர் தனது இராமக்காதையை தமிழ் மக்களும் பயன் பெரும் வகையில் தமிழில் இயற்றுகிறார்.        கம்பர் தான் செய்யும் இந்த மிக எளிமையான செயலைக் கண்டு உலகம் தன்னை பார்த்து சிரித்து கைக்கொட்டி கிண்டல் செய்து எள்ளி நாகையாடும் என்று அஞ்சுகிறார். மேலும் இந்த செயலை முயற்சித்ததற்காக எனக்கு ஏதாவது பழி வந்தும் சேர வாய்ப்புள்ளது என்றும் கூறுகின்றார். அப்படி வந்தாலும் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை; நான் இந்த நூலை தமிழ் உலகத்திற்காக இயற்றி அர்ப்பணிகின்றேன், ஏனென்றால் வால்மீகியின் வடமொழி நூல் தமிழிலும் தழைக்க வேண்டும் என்பதினால் என்று கம்பர் கூறுகிறார்.

No comments:

Post a Comment