Tuesday 7 August 2012

பாடல் 10: பாயிரம்: நூல் வழி:






பாடல்:
தேவ பாடையின் இக்கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம்முளும் முந்திய
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ.

நோக்கம்:
தனது காப்பியம் எந்த நூலின் மூலம் என்பதை கம்பர் விளக்குதல்.

பொருள்:
தேவ பாடையின் இக்கதை செய்தவர் (தேவ பாஷையான சமக்கிருதத்தில் இதே காதையை இயற்றியவர்கள்)
மூவர் ஆனவர் தம்முளும் முந்திய (மூன்று பேர்கள் ஆகும். அவர்களுள் முதன்மையான)
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப் (நாவன்மை பொருந்திய புலவரின் நூல் உரைப்படி தான் நான் தமிழில் பாக்களாக)
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ (இயற்றி இராமக்காதையை இவ்விதம் சொல்லியுள்ளேன்)

விளக்கம்:
           கம்பர் தனது படைப்பு முற்றிலும் சொந்த படைப்பு இல்லை (original இல்லை) என்பதை அவையோரிடம் மிக நேர்மையாக ஒப்புக் கொள்கிறார் (open ஆக ஒப்புக் கொள்கிறார்). இங்கே நம்மில் பலர் இந்த சூழ்நிலையில் இருந்தால் வடமொழியில் இதே கதையை வைத்து ஒரு நூல் வந்துள்ளதை முற்றிலுமாக மறைத்தே இருந்திருப்போம். தெரிஞ்சவங்களுக்கு தெரிஞ்சு இருக்கட்டும், தெரியாதவங்களுக்கு இது ஒரு சொந்த படைப்பு (original படைப்பு) அப்படின்னே நெனைப்பு வரட்டும்  என்று தான் நாம இருந்திருப்போம். ஆனால் கம்பர் அப்படியில்லை நேர்மையாக இருக்கிறார். ஆனால், நம்மையும் குற்றம் சொல்லி பயனில்லை, நாம் வாழும் காலம் அப்படி, வாயிருந்தால் தான் பிழைக்க முடியும் என்பது போல் ஆகி விட்டது. எல்லோருமே கம்பர் போல் தெய்வீக அருள் பெற்றவராகவா இருக்கின்றோம். தெய்வ அருள் என்ற இரும்புக் கை இருந்தால் வாழ்க்கை சுலபமாக (smooth ஆக போகும்) போகும் இல்லையென்றால் மேடும் பள்ளமுமாக தான் போகும். (அட நீங்க வேற மேடும் பள்ளமும்னா கூட பரவா இல்லையே பள்ளமும், மேலும் பள்ளமும் அப்படின்னு இல்லே போயிட்டு இருக்கு. அப்படின்னு புலம்புறீங்களா? அதுவும் வாஸ்தவம் தான்!) அதனால் தெளிவான நேர் கொண்ட அணுகுமுறை நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் இருந்தால் நமது குறை நிறைகளை நாமே ஒப்பிட்டுக் கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வந்து சேரும். அதை நாம் கம்பரிடம் பார்க்க முடிகிறது. கம்பரிடம் நாம் கற்க வேண்டிய இன்னொரு பாடம் இது. ஒரு செயலை எடுத்துக் கொண்டோமேயானால் அதை பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். அதில் உள்ள குறை நிறைகளை வெளிப்படையாக விவாதிக்கும் அளவிற்கு நாம் மனதளவில் தயாராக இருக்க வேண்டும்.
           கம்பர் தனக்கு முன் இதே கதையைக் கொண்டு வந்த நூல்கள் மூன்று என்றுக் கூறுகிறார். அந்த மூன்று நூல்களுமே தேவ பாஷை என்ற பெருமைக்குரிய சமக்கிருதத்தில் வந்துள்ளது. “பாடை” என்னும் பதம் பாஷை என்னும் பதத்தைக் குறிக்கின்றது. தமிழில் வடமொழி அச்சரங்கள் என்று ஷ,, ஃப ஆகிய சொற்களை கூறுவர். இந்த எழுத்துக்கள் எல்லாம் மொழியினை வகுத்தவர்கள் வைத்துள்ள தமிழ் எழுத்துகள் பட்டியலில் சேராது. பின் வந்த தமிழ் அறிஞர்கள் (!!!???) இந்த எழுத்துக்களை இடை சொருகி வைத்தனர். அதனால் தமிழ் பற்றாளர்களும், முற்கால தமிழ் படைப்புகளும் இந்த வகை எழுத்துக்களை பெரும்பாலான இடங்களில் உபயோகிக்கவில்லை. அதனால் பாஷை பாடை ஆனது, கிருஷ்ணன் கிருட்டினான் ஆனான். சரி அதை விடுங்கள், சமாக்கிருதத்தில் நூல் இயற்றிய அந்த மூவர் யார் யார்? ஒருவர் எல்லோரும் அறிந்த வால்மீகி. மற்ற இருவரும் வசிட்டரும், போதாயானரும் ஆவார்கள். இவர்கள் மூன்று பெரும் இராமாயணத்தை தனக்கு முன்பே இயற்றினாலும் கம்பர் தனது இராமாயணத்தை வால்மீகியின் நூலை மேற்கோளாக எடுத்தே இயற்றியதாக சொல்லுகிறார். அதுவும் வால்மீகி எப்படிப்பட்ட முனிவராம், புலமைக்கு தேவையானவற்றை எல்லாம் கற்றறிந்து, அப்படி கற்றறிந்த புலவர்களில் முதன்மையான  புலவராகத் திகழும் பெருமைக்கு உரியவராம். அவரின் நூலினால் பெரிதும் கவரப்பட்டு தான் நான் இந்த இராமக்காதையை இயற்ற விழைகிறேன் என்றவாராக கம்பர் இந்த பாடலை பாடியுள்ளார்!

பாடல் 9: பாயிரம்: அவை அடக்கம்:





பாடல்:
அறையும் ஆடறங்கும் பட பிள்ளைகள்
தறையில் கீறிட தச்சரும் காய்வரோ
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ

நோக்கம்:
கம்பர் தனது பிழை மிகுந்த பாடல்களை சான்றோர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று பணிவுடைமை புகுத்தல்!

பொருள்:
அறையும் ஆடறங்கும் பட பிள்ளைகள் (பல அறைகளைக் கொண்ட வீடுகளையும்,  ஆடுவதற்கு அமைத்த மேடைகளையும் தோன்றுமாறு சிறு பிள்ளைகள்)
தறையில் கீறிட தச்சரும் காய்வரோ (தரையினிலே கிறுக்கி விளையாடினால் அவற்றைக் கண்டு சிற்ப கலையில் தேர்ச்சிப் பெற்ற சிற்பிகள் அவர்களிடம் கோபம் கொள்வார்களோ?)
இறையும் ஞானம் இலாத என் புன் கவி (அது போலே, ஓரளவு அறிவும் பெறாத நான் இயற்றிய அற்பமான பாடல்களைப் பார்த்து)
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ (முறையாக நூலறிவு பெற்ற சான்றோர்கள் என்னிடம் சினம் கொள்வார்களோ? கொள்ளமாட்டார்கள்!)

விளக்கம்:
கம்பரின் பணிவுடைமை சார்ந்த பாடல்கள் இந்த பாடலுடன் முடிவடைகிறது. இந்த பாடல்களின் மூலம் கம்பர் வாசகர்களாகிய நமக்கு வாழ்க்கையில் எவ்வளவு பணிவுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார். கம்பர் ஒரு தெய்வப் புலவராவார். அவருக்கு கவிப்பாடும் திறமை வாய்த்ததே அவரது குல தெய்வமான காளி அன்னை அவர் முன்னே தோன்றி அவருக்கு கவிப் பாடும் ஆற்றலை கொடுத்து அருளியதினால் தான். தமிழ் உலக இல்லக்கியம் என்றில்லாமல் உலக இல்லக்கியங்களையே வியப்படைய வைக்கும் வகையில் இந்தக் காப்பியத்தையும், பிற அரும்பெரும் காப்பியங்களையும் இயற்றுவதற்கு கம்பரால் முடிந்தது என்றால் அதற்கு பின் வெறும் மனித முயற்சி மட்டும் இருந்திருக்கு வாய்ப்பில்லை, தெய்வ வாக்கும் கட்டாயம் இருந்தே இருக்க வேண்டும்! அப்படிப்பட்ட கம்பர் தனக்கு பணிவு இருக்கிறதோ இல்லையோ, அடக்கம் இருக்கிறதோ இல்லையோ, தன்னால் இவை எல்லாம் செய்திருக்க முடியும் என்று எண்ணி இறுமாப்புடன் இருக்கவில்லை (அவர் இருந்திருந்தாலும் காளி அன்னை அருளால் அவர் எப்படியும் புகழ் பெற்றிருப்பார்). தன்னைத் தாழ்த்தி ரசனையை உயர்த்தி வாசகனை சிறப்படைய வைத்துள்ளார் கம்பப் பெருமான். இது தான் கம்பருக்கும் ஒத்தக் கூத்தாருக்கும் உள்ள வித்தியாசம். இருவருமே சமகால புலவர்கள், ஒரே அரசனிடம் ஒரே அவையில் புலவர்களாகப் பணியமர்த்தப் பட்டவர்கள். கம்பரை விட ஒருப்படி மேலே புலமை வாய்ந்தவர் ஒத்தக்கூத்தர் என்று கூறினால் அது மிகையில்லை. ஆனால் கம்பரின் சரித்திர வெற்றிக்குக் காரணம் வெற்றிக்குத் தேவையான சரியான கலவையாக அவர் இருந்தார். சுத்தமானத் தங்கத்தை உருக்கி நாம் அச்சிலே வார்த்தால் நகை வராது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே. தங்கத்துடன் சொம்புக் கலவையாக செய்து அச்சிலே வார்த்தால் தான் நடைமுறை பயன்கள் கிட்டும். ஆனால் சுத்தமான தங்கம் சொம்புக் கலந்த தங்கத்தை விட ஒரு படி மேலே தான். இதில் சுத்தமான தங்கம் ஒத்தக் கூத்தர், சொம்புக் கலந்த தங்கம் கம்பர். கம்பருக்கு ஒத்தக்கூத்தர் போலே செவ்வனே காவித்திரம் வாய்க்கவில்லை ஆனால் அதற்கு ஈடுக் கடுக்கும் வகையில் பணிவுடைமை, இறையருள், என இன்னப் பிற கருணை குணாதிசயங்கள் மிகுந்தவராக இருந்தார். (கொஞ்சம் திருட்டுத் தனமும் உண்டு, போகப் போக பார்ப்போம் அதை). அதனால் அவரின் புகழ் உலகலாவப் பரவியது, கம்பரின் இராமக்காதை தான் உலகில் நிலைப்பெற்று இருக்கின்றது. ஒத்தக்கூத்தர் இயற்றிய இராமக்காதை இயற்றிய மாத்திரத்திலேயே ஒத்தக்கூத்தாராலேயே அழிக்கப்பட்டது. அதனால் பணிவு நம்மை மேலே மேலே தான் உயர்த்தும். பொறுமை புவியாளும். ஒரு காலி கிண்ணத்தில் தான் மேலும் நீரை ஊற்ற முடியும். அதே போலே பணிவான மனிதன் தான் மேலும் கற்று மேலும் உயர முடியும். நிரம்பி வழியும் கிண்ணத்தில் ஊற்றும் நீர் வழிந்து ஒன்றுக்கும் உதவாமல் தான் போகும். தனக்கு எல்லாமே தெரியும் என்ற மமதையும், அகங்காரமும் நம்மை வாழ்க்கையில் புதிதாக எதையும் கற்கவும் விடாமல், தெரிந்ததை செய்யவும் விடாமல் அறிவுக் கண்ணை மறைத்து அழிவு பாதைக்குக் கொண்டு செல்லும். அதனால் பணிவுடைமையை எல்லோரும் பின்பற்றுவோமாக!


           எப்பேர்ப்பட்ட பணிவு வேண்டும்? தான் செய்த செயல்கள் நூறு சதவிகிதம் சரியாக இருந்தாலும், மற்ற யாருமே செய்த வேலையை விட சிறந்தது என்றாலும் அதிலும் குற்றம்  இருக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து “நான் உண்மையான மானதுடன் உழைத்தேன், திருப்திக்காரமாக இந்த செயலை முடித்தேன். ஆனால் இது குற்றமற்றது என்றுக் கூற முடியாது. இதில் குற்றமிருந்தால் திருத்திக் கொள்கிறேன்” என்ற மனநிலையை உடையாய பணிவு வேண்டும்! அப்பேர்ப்பட்ட சிறந்த பாடல்களை இயற்றிய காம்பரே தனது பாடல்கள் “இறையும் ஞானம் இலாத என் புன் கவி” என்று கூறிக்கொள்கிறார். “இறையும் ஞானம் இலாத” என்றால் சிறிதளவேணும் கூட அறிவு இல்லாத என்று பொருள் கொள்க. “என் புன் கவி” என்றால் என்னுடைய குறையுடைய கவிதைகள் என்று பொருள் கொள்க. உடம்பில் புண் வந்தால் அது குறையல்லவா? அது போலே குறை மிகுந்த தான் கவியை கம்பர் “புன் கவி” என்றுக் கூறுகிறார். தனது கவியில் உள்ள பிழைகளை “முறையின் நூல் உணர்ந்தாரும். முனிவரோ?” என்று கேட்கிறார். முறையின் நூல் உணர்ந்தாரும்” என்றால் முறையாக கற்க வேண்டியதை அப்படியே கற்றவர்களும் என்று பொருள் கொள்க. முனிவரோ என்றால் சினம் கொள்வார்களோ? என்று கம்பர் கேட்கிறார். மேலும் பணிவன்பை கம்பர் எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள், தனது பாடல்கள் “அறையும் ஆடறங்கும் பட பிள்ளைகள் தறையில் கீறிட” என்பது போலே என்கிறார். “அறையும்” என்றால் பல அறைகள் (rooms) கொண்ட வீடுகளை தரையில் வரைதல் என்று பொருள் கொள்க. “ஆடறங்கும் பட” என்றால் நாடக மேடை போல படம் வரைந்த என்று பொருள். இப்படிப் பட்ட படங்களை குழந்தைகள் தரையில் கிறுக்குவது போலே தான் தனது கவிதைகள் இருக்குது என்கிறார் கம்பர். அதை கேட்கும் வாசகர்களாகிய நீங்கள் அந்த குழந்தையின் படங்களைப் பார்க்கும் ஓவியக் கலையில் திறமை வாய்ந்த தச்சர்கள் போன்றவர்கள் என்கிறார். கம்பரின் பாடல்களை விட சிறந்த பாடல்களை இயற்ற வல்ல நீங்கள் (!!??? நிஜமாவா?) கம்பரின் பிழை மிகுந்த பாடல்களை அந்த தச்சர்கள் பார்க்கும் குழந்தைகளின் கிறுக்கல்களைப் போலே பார்த்து கண்டுக் கொள்ளாமல் விட்டு விடுவீர்கள் என்று கமபர் கூறுகிறார்!