Thursday 28 June 2012

காப்பின் சிறப்பும், கம்பனின் சிறப்பும்: பாடல் 15




பாடல்:
வென்றி சேர் இலங்கையானை வென்றமால் வீரம் ஓத
நின்ற ராமாயணத்தில் நிகழ்ந்திடு கதைகள் தம்மில்
ஒன்றினைப் படித்தோர் தாமும் உரைத்திடக் கேட்டோர் தாமும்
நன்று இது என்றோர்தாமும் நரகம் அது எய்திடாரே

நோக்கம்:
இராமக் காதையை கேட்டோர், படித்தோர், போற்றியோர் அடையும் நன்மைகள்

பொருள்:
வென்றி சேர் இலங்கையானை வென்றமால் வீரம் ஓத (வெற்றியை உடைய இலங்கை மன்னனான இராவணனை வெற்றிக் கொண்ட திருமாலாகிய இராமப்பெருமானின் வீரத்தை விளக்கிச் சொல்லும்)
நின்ற ராமாயணத்தில் நிகழ்ந்திடு கதைகள் தம்மில் (இராமாயணக் காப்பியத்துள் உள்ள கதைகளில்)
ஒன்றினைப் படித்தோர் தாமும் உரைத்திடக் கேட்டோர் தாமும் (ஒன்றினையாவதுத் தாமே படித்தவர்களும், பிறர் படிக்கக் கேட்டவர்களும்)
நன்று இது என்றோர்தாமும் நரகம் அது எய்திடாரே ("இது நன்றாக உள்ளது" என்று பாராட்டியவர்களும் நரகத்தை அடையமாட்டார்கள்)

விளக்கம்:
இலங்கை மன்னனான இராவணன் பல வெற்றிகளை உடையவனாம். அப்படிப் பட்ட வெற்றி மகளின் செல்லப் பிள்ளையான இராவனனையே வெற்றிக் கொண்டவர் இராமப் பெருமான். ஏன் வெற்றி நாயகியின் செல்லப் பிள்ளையாக இராமப்பெருமான் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்? வெற்றி நாயகிக்கு எப்படி அவளை படைத்தப் பரம்பொருளே பிள்ளையாக இருக்க முடியும். வெற்றி நாயகிக்கு அம்மையும் அப்பனுமாக இருந்து அவள் அருளும் மக்களையும், அருளாத மக்களையும் என எல்லோரையும் காத்து ரட்சிப்பது எம்பெருமான் தானே. குழந்தை அறியாமல் ஒரு சிறு பிழையில் கூடா நட்பை ஏற்படுத்திக் கொண்டால், பெற்றவர் தானே அந்த கெட்ட சகவசாத்தை அறுத்தெறிந்து, பிள்ளையை அரவணைத்து அன்புடன் நல்வழிப்படுத்த வேண்டும். இராமப்பெருமான் பூலோகத்தில் பிறந்ததினால் அவரது தெய்வீக அம்சமான பாற்கடலில் பள்ளிக் கொண்டுள்ள நாராயணமூர்த்தி என்ற அருட்பிரகாச தெய்வத் திருமேனி காணாமல் போகுமா என்ன? அவரே மணமுவந்து மறைத்துக் கொண்டுள்ள தெய்வாம்சம்கள் எல்லாம் அவருக்கு ஒரு சிறு தீங்கு என்றாலும் வீறுக் கொண்டு எழுந்து தீய சக்திகளை ஒடுக்கி அழிப்பதற்கு அவர் கடைக்கண் பார்வையின் அனுமதிக்கு காத்திருக்கும் இல்லையா? நல்ல புத்தி உள்ள பிள்ளை வழித் தவறினால் இந்த ஒரு நிகழ்வே போதும். இராமப்பெருமான் தனது தெயவாம்சம்களுக்கு "போய் செயலில் ஈடுபடுங்கள்" என்று கூற தேவை இல்லாமல் வழி மாறிப் போன பிள்ளை தவறினை உணர்ந்து மீண்டும் நல்வழிக்கே இந்த புருஷோத்தமன் காலில் விழுந்து அடிப் பணியும். இராவணர்களானால்  இராம பானம் பதில் சொல்லும். அதிலே அழிந்து, ஒழிந்து நல் வழிப்படுவர். அனால் வெற்றி அன்னை லோகநாதனின் அரும்பெரும் ஆற்றலை அறிந்தவள், இவ்வளவு நாள் தான் போற்றிக் கொண்டாடிய நட்பு கூடா நட்பு என்ற அறிந்துவிட்ட படியால், இராமபானத்தை வணங்கி இராவணனை விட்டு இராமரின் பாதங்களை சரணடைந்தாள். வெற்றிக்கே வெற்றி தரும் இராமபாணம் இராவணின் அனைத்து தற்காலிக வெற்றிகளும் அழிந்துப் போகும் வகையில், அவனை வெற்றிக் கொண்டது. நான் இங்கே இராமயணக் காப்பியத்தின் சாரம்சத்தை தான் கூறினேன். அதுவே எவ்வளவு ஊக்கமளிக்கக் கூடியதாக இருக்கின்றது பாருங்கள். நீங்கள் நல்லவராக இருப்பின், கவலை வேண்டாம் இராமப்பெருமான் உங்களை காத்தருள்வார், கடவுளை மீறிய சக்தி இந்த உலகத்தில் இல்லவே இல்லை  என்ற மன தைரியத்தை நமக்குள் விதைக்கின்றது இல்லையா? உங்களிடம் வெற்றிக்கு அதிபதியான தெய்வமே இருந்தாலும், தெய்வத்திற்கு எல்லாம் தெய்வமான பரம்பொருள் வந்தால் அவர் சக்திக்கு முன் ஒன்றும் எதிர்த்து நின்று போராடாது. அதனால் பரம்பொருளை எதிர்த்து நிற்கும் மூட செயலை இராவணன் போல் ஒருவரும் செய்யாமல் அவரது பாதங்களைப் பணிந்து அவர பக்கம் சேருவதே புத்திசாலித்தனமான செயல்! அப்படி இல்லாவிடில் ஒருவர் சோர்வு, துக்கம், மன அழுத்தம் என்பனப் போன்ற பல தீய சக்திகளின் ஆளுமையில் அகப் பட்டு வாழ்வில் பின்னடைவர். ஆனால் இராமாயணத்தில் வரும் ஒரு பாடலையாவது, அல்லது ஒரு பாடலின் ஒரு வரியையாவது நீங்கள் மனம் செலுத்தி படித்துணர்ந்தால், அது உங்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை தந்து முன்னேற்றும். அப்போது பாருங்கள், "இராமாயணம் போல உண்டா? ஒரு வார்த்தை, ஒரு வரி, ஒரு பாடல் என் வாழ்க்கையில் எவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது?" என்று நீங்கள் இராமக்காதையை போற்றுவீர்கள்!

வீட்டுப்பாடம்:
விடுமுறை!